»   »  ரோபோட்: மீண்டும் அஜீத்?

ரோபோட்: மீண்டும் அஜீத்?

Subscribe to Oneindia Tamil
Ajith with Nayanatara
ஷாருக்கான் மறுத்து விட்டதால் தனது ரோபோட் படத்தை அஜீத்தை வைத்து இயக்க ஷங்கர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அஜீத்தை அவர் அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவாஜிக்கு முன்னதாக ஷங்கர் யோசித்து வந்த படம் ரோபோட். சுஜாதாவின் எழுத்தில் உருவான இக்கதையை பெரும் பொருட் செலவில் உருவாக்க ஷங்கர் தீர்மானித்தார். இதற்காக அவர் முதலில் அணுகிய நடிகர் கமல்ஹாசன். ஆனால் இந்தத் திட்டம் கை கூடவில்லை.

இதையடுத்து அஜீத்தை வைத்து இயக்கலாம் என தீர்மானித்த ஷங்கர் அஜீத்துடனும் பேசினார். அவரும் கூட நடிக்க ஆர்வமாக இருந்தார். ஆனால் அதுவும் கை கூடவில்லை. இந்த நிலையில், சிவாஜி குறுக்கிட்டதால் சிவாஜிக்குப் போய் விட்டார் ஷங்கர்.

சிவாஜியை முடித்த ஷங்கர் மீண்டும் ரோபோட் கதையை கையில் எடுத்துள்ளார். தமிழில் எடுக்கத்தானே சிக்கலாக இருக்கிறது, இந்திகிக்குப் போவோம் என்று கருதி இந்தியில் இதைத் திட்டமிட்டார்.

முதலில் ரித்திக் ரோஷனை அணுகினார். ஆனால் இதுவும் சரிப்பட்டு வரவில்லை. இந்த நிலையில் ஷாருக்கான் கதையைக் கேள்விப்பட்டு தானே தயாரித்து, நடிக்க விரும்புவதாக கூறினார். இதையடுத்து இந்த முறை ரோபோட்டுக்கு உயிர் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனால் திடீரென ஷாருக் கான் பின் வாங்கி விட்டார். சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நானும், ஷங்கரும் நண்பர்களாகப் பிரிந்து விட்டோம் என்று அறிவித்தார் ஷாருக்கான்.

இப்படி ரோபோட்டுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டை வந்து கொண்டிருப்பதால் அப்செட் ஆகியுள்ள ஷங்கர், மனம் தளராமல் தனது முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார். தற்போது மறுபடியும் அஜீத்திடமே அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அஜீத்திடம் கேட்டபோது, ஆமாம், ரோபோட் படத்துக்காக ஷங்கர் சார் என்னை அணுகியுள்ளார். இருப்பினும் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. இருப்பினும் கடந்த முறையைப் போல இல்லாமல் இந்த முறை சாதகமான சில விஷயங்களை என்னால் காண முடிகிறது.

எல்லாம் சரியான திசையில் சென்றால் அடுத்து நான் நடிக்கவுள்ள ராஜு சுந்தரத்தின் அக்பர், கே.எஸ்.ரவிக்குமார் சாரின் படம் ஆகியவற்றை முடித்து விட்டு ரோபோட்டில் நடிக்கக் கூடும்.

ஷங்கர் சார் என்னிடம் ரோபோட் படத்தின் கதையைக் கூறியபோது அது என்னை வெகுவாக கவர்ந்தது. மொத்தமாக கால்ஷீட் கொடுக்கவும் நான் தயாராக இருந்தேன். இருப்பினும் சில விஷயங்கள் சரி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரமாண்ட ( ரூ. 100 கோடி பட்ஜெட்டை ஷங்கர் நிர்ணித்துள்ளார்) படத்தைத் தயாரிப்பதற்கேற்ற தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். ஷங்கர் சாருக்கு அது பெரிய விஷயமில்லை என்றார் அஜீத்.

ஸ்டார்ட்டிங் டிரபிள் இருந்தாலும் கூட ரோபோட் சீக்கிரம் நடமாடப் போவது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil