twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

    By Sudha
    |

    ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

    மலேசியாவில் நடந்த எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் மேலும் அவர் பேசுகையில், "நான் இயக்கிய 'ஜீன்ஸ்" படம் இந்த நாட்டில் 100 நாள் ஓடியது. நான், ஐஸ்வர்யா ராய், ரஹ்மான் இணைந்திருந்த படம் அது.

    இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறார்கள். அதனால் எந்திரன் இங்கே 200 நாள் ஓடும் என்று எதிர்பார்க்கிறேன்.

    எந்திரன் என் கனவுப் படம். இரண்டு பேர் இல்லையென்றால் என் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து எனது கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்.

    இந்த படத்தில் ரஹ்மானின் இசையை கேட்கும்போது அவருக்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்பது புரியும். அவரது உழைப்புதான் அந்த உயரங்களை கொடுக்கிறது.

    இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ... என்ற பழங்குடியின பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு டியூன் போட்டுக் கொடுங்கள் என்று ரகுமானிடம் கேட்டேன். மூன்று டியூன் போட்டுக் கொடுத்தார். எதிலும் எனக்கு திருப்தியில்லை. அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக ஒரு டியூன் போட்டுக் கொடுத்தார். பிரமாதமாக வந்திருக்கிறது.

    வைரமுத்துவின் வரிகளும் படத்தில் பிரமாதமாக அமைந்திருக்கிறது.

    எனது முந்தைய படங்களைவிட எந்திரனில் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கும். அதற்கு காரணம் ரத்னவேலுவின் திறமை.

    சிவாஜி படத்தில் ரஜினியை அழகாக காட்டினேன். எந்திரனில் அவரை இன்னும் அழகாக காட்டியிருக்கிறேன். ரத்னவேலுவின் லைட்டிங்தான் காரணம்.

    ஐஸ்வர்யா ராயை லேடி ரஜினி என்று குறிப்பிடலாம். அவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்திருக்கிறது. ஹீரோவுக்கு நிகரான அவரது உழைப்பு அபாரமானது.

    இந்த படத்தை எடுக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் பட்ஜெட் இவ்வளவு அதிகமா என்று யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் இந்தியில் எடுக்கலாம் என்று முயற்சித்தேன். சில சூழ்நிலைகளால் அங்கும் முடியவில்லை. தமிழிலேயே எடுத்தால் என்ன என்று தீவிரமாக யோசித்தபோது ரஜினி கைகொடுத்தார்.

    படத்தில் ரஜினியின் உழைப்பு அபாரமானது. மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக காத்திருந்தார். சிரமம் பார்க்காமல் உழைத்தார். அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட்.

    டெக்னீஷியன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த படத்திற்காக இரண்டு வருடமாக நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து உதவிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி, என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X