»   »  மிருகம் வெற்றி - உற்சாகத்தில் சாமி

மிருகம் வெற்றி - உற்சாகத்தில் சாமி

Subscribe to Oneindia Tamil
Samy with Sona
பெரும் சர்ச்சைகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ள மிருகம் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால், இயக்குநர் சாமி உற்சாகமாக உள்ளார். தனக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த தானாக விலகும், அல்லது தடையை மீறுவேன் என்று கூறியுள்ளார் சாமி.

மிருகம் படம் தொடங்கிய சில நாட்களிலேயே சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. நடிகை பத்மப்ரியா இழுத்தடித்து வருகிறார் என்று முதலில் பேச்சுக்கள் வந்தன. பின்னர் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று பிரச்சினை செய்ததாக செய்திகள் வந்தன. படப்பிடிப்பு முடியப் போகும் நிலையில், சாமி கன்னத்தில் அடிக்கப் போக பத்மப்ரியா வாக் அவுட் செய்து பெரும் பிரச்சினை ஆனது.

சென்னையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. சாமி மன்னிப்பு கேட்டார். அவர் மீது பத்மப்ரியா சுமத்திய செக்ஸ் டார்ச்சர் புகார் உண்மையல்ல என்று விசாரணையில் தெரிய வந்தது. இருந்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக சாமிக்கு மட்டும் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் சாமி இதுகுறித்துக் கவலைப்படவில்லை. மாறாக தனது மிருகம் படத்தை திட்டமிட்டபடி முடித்துக் கொடுத்தார். படமும் ரிலீஸாகி விட்டது.

இந்த நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சாமி உற்சாகமாக உள்ளார். அந்த உற்சாகத்தோடு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சாமி பேசுகையில், என் மீது தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடையைக் கண்டு நான் ஒரு போதும் பயப்படவில்லை. கலங்கவும் இல்லை. ஒருவரின் வெற்றி, அவருடைய தலைவிதியை மாற்றி எழுத முடியும். அந்த அடிப்படையில் என் மீதான தடையும் தானாக விலகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஒருவரால் புகையை மறைக்க முடியும். ஆனால் தீயை தடுக்க முடியாது. நான் தீ போன்றவன்.

மிருகம் படத்தின் தரம், அதன் வெற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். மக்களால்தான் என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் தர முடியும்.

எனது படத்தில் ஆபாசம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இந்தப் படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்துப் பேசும் படம். எய்ட்ஸ் குறித்துப் பேசும்போது செக்ஸ் இல்லாமல் எப்படி பேச முடியும்?

பத்மப்ரியாவின் நடிப்புத் திறமை குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பின்போது அவர் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை. எந்தக் காரணமும் இல்லாமல் முரட்டுத்தனமாக, பிடிவாதமாக நடந்து கொண்டார்.

அவரால் படத் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்தான் ஏற்பட்டது. ஆனால் அதுகுறித்து யாரும் கவலைப்படவில்லை.

என் மீது தடை விதித்தவர்கள் தாங்களாகவே அதை விலக்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், தடையை விலக்க முடிந்தவரை முயற்சிப்பேன்.

அது முடியாவிட்டால், இந்தத் தடை எங்கு செல்லாதோ அங்கு போய் படம் எடுப்பேன். படைப்பாளி என்பவன் காற்று மாதிரி. இதுபோன்ற செயற்கைத் தடைகளால் காற்றை தடுத்து நிறுத்த முடியாது என்றார் சாமி.

சில செய்தியாளர்கள் படத்தில் செக்ஸ் அதிகமாமே, அதிகமாமே என்று திரும்பத் திரும்ப குடாய்ந்தும் கூட அவர்களுக்கும் பொறுமையாக, நிதானமாக விளக்கினார் சாமி.

சீக்கிரமே தனது அடுத்த படம் குறித்த அறிவிப்போடு சாமி வருவார் என நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil