»   »  கரீனாவின் புதுக் காதல்

கரீனாவின் புதுக் காதல்

Subscribe to Oneindia Tamil


பாலிவுட் ஹாட் ஸ்டார் கரீனா கபூருக்கும், நடிகர் சைப் அலி கானுக்கும் காதல் மலர்ந்து இறுகியுள்ளது. முதல் முறையாக இந்தக் காதலை இருவரும் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

Click here for more images

ஹாலிவுட் பாணியில் பாலிவுட்டும் பல புரட்சிகளை செய்து வருகிறது. தொழில்நுட்பப் புரட்சி என்றில்லாமல் காதல் புரட்சிகளுக்கும் பெயர் போனதாக மாறி விட்டது பாலிவுட்.

இந்த வகையில் பாலிவுட்டில் படு ஹாட்டாக பேசப்பட்ட காதல் ஜோடி கரீனா கபூர் மற்றும் ஷாஹித் கபூர். இருவரும் படு தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஷாஹித் கபூர், கரீனாவுக்கு அழுத்தம் திருத்தமாக கொடுத்த முத்தக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஷாஹித்தும், கரீனாவின் காதல் திடீரென முடிவுக்கு வந்தது. 3 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து வந்த இருவரின் காதலும் காரணம் தெரியாமல் முறிந்து போன தகவல் இன்னும் மறைவதற்குள் கரீனாவின் அடுத்த காதல் குறித்த வதந்திகள் கிளம்பின.

சைப் அலிகானும், கரீனாவும் தீவிரமாக காதலிப்பதாக அந்த செய்திகள் கூறின. ஆனால் இதை கரீனாவும், சைப்பும் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. படு கமுக்கமாக இருந்தனர்.

இருவரும் பாலிவுட்டில் ஜோடி போட்டுக் கொண்டு வந்து போனார்கள். இந்த நிலையில் நேற்று முதல் முறையாக, தானும், கரீனாவும் டேட்டிங்கில் இருப்பதை சைப் அலிகான் ஒப்புக் கொண்டார்.

மும்பையில் நடந்த மனீஷ் மல்ஹோத்ராவின் பேஷன் ஷோவுக்கு கரீனாவும், சைபும் இணைந்து வந்தனர். அப்போது செய்தியாளர்கள் சைபிடம், உங்கள் இருவருக்கும் இடையிலான உறவுதான் என்ன, என்னதான் நடக்கிறது, இருவரும் டேட்டிங்கில் இருக்கிறீர்களா என்று கேட்டபோது, ஆமாம், இருவரும் டேட்டிங்கில் இருக்கிறோம் என்று தேங்காய் உடைப்பதைப் போல போட்டு உடைத்தார் சைப் அலிகான்.

இருவும் சேர்ந்தே இருக்கிறோம். இது எங்களுக்குப் பிடித்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறோம். இதை கூரை மீது ஏறி நின்று எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை என்றார். இதன் மூலம் இருவரும் காதலிப்பதை சைப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டார்.

இருவரும் சமீபத்தில் லடாக் பகுதியில் நடந்த யாஷ் சோப்ராவின் தஷன் படத்தின் ஷூட்டிங்குக்காக சென்றபோதுதான் காதல் மலர்ந்ததாம்.

சைப் அலிகானும், அவரது காதல் லீலைகளும் பாலிவுட்டில் ரொம்பப் பிரசித்தம். மனைவி அம்ரிதா சிங்கை விட்டு அவர் பிரிந்த பின்னர், மாடல் அழகி ரோஸாவுடன் 2 ஆண்டுகள் நட்பு பாராட்டி வந்தார்.

அவரை விட்டுப் பிரிந்த பின்னர் பிபாஷா பாசு, தியா மிர்ஸா என பல பாலிவுட் நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டார். இப்போது கரீனாவை தனது காதல் வலையில் சைப் வீழ்த்தியுள்ளார்.

உண்மையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட இணைப்பினால்தான், கரீனாவை விட்டு ஷாஹித் கபூர் பிரிய முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

சைபின் கடந்த கால காதலிகளில் பிபாஷா பாசுதான் ரொம்ப முக்கியமானவர். இருவரும் இணைந்து பல இரவு பார்ட்டிகளில் கலக்கினர். எப்போதும் சேர்ந்தே காணப்பட்டனர்.

பிபாஷா பாசுவுக்கும், ஜான் ஆப்ரகாமுக்கும் இடையே தீவிர காதல் இருந்தபோதும் குறுக்கே புகுந்து பிரித்தவர் சைப் என்று கூறப்படுவதுண்டு. இப்போது ஷாஹித், கரீனா காதலிலும் புகுந்து குட்டையைக் குழப்பி விட்டார்.

கரீனாவும், சைபும் இணைந்து ஏற்கனவே ஓம்காரா என்ற படத்தில் நடித்துள்ளனர். தற்போது தஷன் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு லடாக்கில் நடந்தபோது, அங்கு நடந்தது குறித்து படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், டீன் ஏஜ் காதலர்கள் போல ஷூட்டிங்கின்போது சைபும், கரீனாவும் நடந்து கொள்வார்கள். ரொம்ப உற்சாகமாக இருந்தனர். செல்போனில் பேசியபடிதான் இருப்பார்கள். காதல் எஸ்.எம்.எஸ்.களை பரிமாறிக் கொள்வார்கள். மாறி மாறி செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள் என்றார்.

கரீனா குறித்த ஒரு கொசுருச் செய்தி. அமீர்கான், ஆசின் நடிப்பில் உருவாகும் இந்தி கஜினியில் ஒரு குத்துப் பாட்டுக்கு கரீனா ஆட்டம் போடவுள்ளாராம்.

கரீனாவின் புதுக் காதல் எவ்வளவு ஸ்டிராங் என்பது போகப் போகத்தான் தெரியும்.

Read more about: kareena, saif

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil