»   »  செல்வராகவனும், விவேக் ஓபராயும்

செல்வராகவனும், விவேக் ஓபராயும்

Subscribe to Oneindia Tamil

செல்வராகவனின் அடுத்த நாயகனாக விவேக் ஓபராய் உருவெடுத்துள்ளார்.

பாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. இங்கிருந்து பலர் அங்கு போய் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். முன்பு சிகப்பு ரோஜாக்கள் படத்தை பாரதிராஜா இந்தியில் போய் இயக்கி சாதனை படைத்தார்.

பிறகு பாக்யராஜும் இந்திக்குப் போனார். கமல்ஹாசன் இந்திக்காரர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டியுள்ளார். ரஜினியும் சில படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி ரசிகர்களை மெய்மறக்க செய்து தனது இசைக்கு அடிமையாக்கியது வரலாறு.

மணிரத்தினத்தின் இந்திப் படங்கள் அங்கு பெரும் அலையை ஏற்படுத்தியது, படங்களில் பல மாற்றங்களை புகுத்த உதவியது. ஷங்கரின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் ஆகி கலக்கியுள்ளன. ஆனால் நேரடியாக இந்திக்குப் போய் முதல்வனை இந்தியில் எடுத்தது பெரும் கசப்பான அனுபவத்தையே அவருக்குக் கொடுத்தது.

இப்போதும் கோலிவுட், பாலிவுட் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் முன்பை விட வலுவாக இருக்கிறது. கோலிவுட்டின் கை ரொம்பவே ஓங்கிக் காணப்படுகிறு.

கோலிவுட்டின் இளம் இயக்குநர்களுடன் கை கோர்க்க பாலிவுட்டின் பச்சன்களும், கான்களும் படு ஆர்வமாக உள்ளனர். பிரபு தேவாவாவுடன் சல்மான் கான் இணைந்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸுடன் அமீர் கான் கை கோர்த்துள்ளார். ஷங்கருடன் விரைவில் ஷாருக் கான் இணையவுள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு கோலிவுட் இயக்குநர் பாலிவுட்டுக்குப் போய் பாய்ச்சல் காட்டவுள்ளார். அவர் செல்வராகவன், அவரை வேண்டி விரும்பி அழைத்திருப்பவர் விவேக் ஓபராய்.

தனது 7ஜி ரெயின்போ காலனியை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் செல்வா. அதில்தான் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் விவேக் ஓபராய். சென்னைதான் அவர் பிறந்த இடம் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது. அவரது சொந்தக்காரர்கள் பலர் இன்னும் இங்கு உள்ளனராம்.

சென்னை வந்த அவர் செல்வா மற்றும் தனுஷுடன், 7ஜி ரெயின்போ காலனியை பார்த்துள்ளார். படம் அவருக்குப் பிடித்துப் போகவே நிச்சயமாக நாம் செய்கிறோம் என்று செல்வாவிடம் கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பை வேகமாக தொடங்குமாறும் அணத்தியுள்ளார்.

படம் பார்த்த கையோடு செல்வா வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருடன் இரவு விருந்தையும் ஒரு கை பார்த்து விட்டுத் திரும்பினாராம்.

தற்போது கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியாவை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கவுள்ள செல்வா, அதை முடித்து விட்டு ஓபராயிடம் போகிறாராம்.

இந்திப் படத்திலாவது ஹீரோவை நல்லாப் பேச விடுங்க செல்வா!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil