»   »  திருமா. படத்தில் கிட்டப்பா பேத்தி

திருமா. படத்தில் கிட்டப்பா பேத்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கீதா சாம்ராட், காந்தர்வ ராஜன், இன்னிசை சக்கரவர்த்தி என்று நமது தாத்தா காலத்தில் ரசிக்கப்பட்ட, அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் கிட்டப்பாவின் பேத்தி நடிகையாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் இரண்டு பேர். கிட்டப்பாவும், தியாகராஜ பாகவதரும்தான் அந்த முன்னோடி சூப்பர் ஸ்டார்கள். படம் பூராவும் பாடியே கலக்கியவர்கள் இந்த இரு இமயங்களும்.

இவர்களின் காலத்தில் படங்களில் வசனங்களை விட பாடல்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். 30 பாட்டு, 40 பாட்டு என்று படம் முழுக்க ஒரே பாட்டுத்தான். ஆனால் இந்த இரு இசை இமயங்களின் குரல் வளத்தாலும், இன்னிசை ரசத்தாலும், அத்தனை பாடல்களையும் ரசிகர்கள் சொக்கிப் போய் ரசித்த காலம் அது.

கிட்டப்பாவின் மனைவி கே.பி.சுந்தராம்பாள். தமிழ் திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞர்களில் கே.பி.எஸ்ஸும் ஒருவர். அந்தக் காலத்திலேயே கிட்டப்பா, பாகதவருக்கு இணையாக விளங்கியவர். ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை அப்போதே வாங்கி சாதனை படைத்தவர்.

கிட்டப்பா, கே.பி.எஸ். தம்பதியினிரன் பேரன் கிருஷ்ணா. இவரது மகள் சந்தியா. இவர்தான் இப்போது நடிகையாக களம் இறங்கியுள்ளார். திருமாவளவன் நடிக்கும் கலகம் படத்தில்தான் சந்தியா நடிகையாக அறிமுகமாகிறார்.

பெங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறாராம் சந்தியா. நடிப்பிலும் பாட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் சந்தியா. இதனால்தான் கலகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது மறுக்காமல் ஒப்புக் கொண்டாராம். நடிப்பதோடு, பாடவும் செய்கிறாராம்.

திருமாவளவன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாசர், சாய்குமார், வடிவேலு ஆகியோரும் உள்ளனர். வெளிச்சம் கலைப்பட்டறை சார்பில் சேகுவேரா படத்தை தயாரிக்கிறார். மு.களஞ்சியம் இயக்குகிறார்.

சந்தியா குறித்து களஞ்சியம் கூறுகையில், சந்தியாவை எனது படத்தில் அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். தமிழ் சினிமாவின் இமயத்தின் வாரிசை நடிகையாக அறிமுகப்படுத்துவதை கெளரவமாக நினைக்கிறேன் என்றார்.

ஏற்கனவே ஒரு சந்தியா இருப்பதால், கிட்டப்பாவின் பேத்தியின் பெயர் மாறக் கூடுமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil