»   »  டைரக்டர் சரணை ஏமாற்றியபார்ட்னர்-ரூ.3.5 கோடி ஸ்வாகா

டைரக்டர் சரணை ஏமாற்றியபார்ட்னர்-ரூ.3.5 கோடி ஸ்வாகா

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் சரண், தனது தொழில்முறை பங்குதாரரும், கலை இயக்குநருமான மோகன மகேந்திரன் ரூ. 3.5 கோடி பணத்தை மோசடி செய்து விட்டதாக சென்னை காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்களை இயக்கியவர் சரண். முனி, வட்டாரம் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார்.

சரணின் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியவர் மோகன மகேந்திரன். இருவரும் நல்ல நண்பர்களும் கூட. இந் நிலையில், மோகன மகேந்திரன் மீது பண மோசடி புகார் கூறியுள்ளார் சரண்.

இதுதொடர்பாக போலீஸில் அவர் கொடுத்துள்ள புகாரில், ஜெமினி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை எனது நீண்ட நாள் நண்பர்களான மோகன மகேந்திரன், கேமராமேன் வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து தொடங்கினேன்.

மோகன மகேந்திரனுக்கு தயாரிப்பு மற்றும் விநியோக பொறுப்பை அளித்திருந்தேன். எனது நிறுவனம் சார்பில் முனி மற்றும் வட்டாரம் ஆகிய இரு படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இரு படங்களும் நல்லபடியாக ஓடி வசூலை ஈட்டித் தந்துள்ளன.

இந்த படங்கள் மூலம் நிறுவனத்திற்குக் கிடைத்த பணத்திலிருந்து மோகன மகேந்திரன் ரூ. 3.5 கோடி பணத்தை மோசடி செய்து விட்டார். இதன் மூலம் அவர் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்.

நான் படம் தொடர்பான பணிகளில் மும்முரமாக இருந்ததால் மோகன மகேந்திரனின் மோசடியை என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.

அவரிடமிருந்து எனக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் சரண்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். தற்போது மோகன மகேந்திரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது புகார் குறித்து சரண் கூறுகையில், எனது பங்குதாரரை (மோகன மகேந்திரன்) நான் நிறைய நம்பினேன். ஆனால் அவர் இப்படி ஒரு துரோகத்தைச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. போலீஸார் விரைவில் விசாரணை நடத்தி இந்த மோசடி குறித்த முழு விவரங்களையும் வெளியில் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil