For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இளம் ஹீரோக்களே... சத்யராஜிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

  By Shankar
  |

  அட்டைக்கத்தி தினேஷ், களவாணி விமல், மெட்ராஸ் கலையரசன் மூன்று பேரை மட்டும் இங்கே பெயர் குறிப்பிட்டு எழுதுவதால், மற்ற நடிகர்கள் யாரும் இல்லை என்று அர்த்தமில்லை! இன்றைக்கு மார்கெட்டில் இருக்கிற நடிகர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பது திரையரங்கே இல்லாத ஊரில் இருக்கும் ரசிகனுக்கும் தெரியும்.

  நடிகர்களில் எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தவிர ஒரு புகைப்படத்தைக் காட்டி இது எந்தப் படத்தோட ஸ்டில் என்று கேட்டால் ரசிகர்கள் 'பளிச்' சொல்கிற அளவுக்கு வெரைட்டி காட்டியிருப்பவர் சத்யராஜ். இந்த வரிசையில் நாசரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  Sathyaraj, a lesson to upcoming actors

  இதில் விடுபட்ட நடிகர்கள் யாரேனும் உணர்ச்சி வசப்படுவதாக இருந்தால் உங்கள் முதல் படத்திலிருந்தே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வது நல்லது!

  முதல் படத்தில் நடிக்க வரும்போதே ஜமீன் பின்னணியோடு வந்தவர்தான் சத்யராஜ். சினிமா கம்பெனிகளிலோ, படப்பிடிப்புத் தளங்களிலோ ஒருபோதும் இதைக் காட்டிக்கொண்டதில்லை. இன்றைக்கு வரைக்கும் அப்படிதான் இருக்கிறார் என்பதே இந்தக் கட்டுரை எழுத வேண்டிய காரணம்.

  படிப்படியாக வளர்ந்து உச்சத்தில் இருக்கும்போதும் தனது சம்பளம் குறித்து ஒருபோதும் அவர் கறார் காட்டியதில்லை.

  மார்கெட் டல்லாக இருந்தபோது ஒரு படம் தொடர்பாக ஒரு இயக்குநர் அவரைச் சந்திக்க வருகிறார். கதை கேட்டுவிட்டு 'நல்லா இருக்கு தலைவா...பண்ணிடலாம்' என்கிறார் சத்யராஜ். வந்த இயக்குநர், "அண்ணே, உங்களுக்கு இவ்வளவு சம்பளம் சொல்லியிருக்கேன்," என்று அவர் குறிப்பிட்ட தொகை, சத்யராஜ் மார்கெட்டின் உச்சத்திலிருந்தபோது வாங்கியது.

  உடனே சத்யராஜ், படத்தோட பட்ஜெட் என்ன என்று கேட்கிறார்.இயக்குநர் பட்ஜெட்டைச் சொல்கிறார்.

  இப்போதுள்ள நடிகர்களாக இருந்தால், "தலைவா... நான் மூணாவது படத்துக்கு வாங்கின சம்பளத்தைச் சொல்றீங்க! முதல்ல அப்டேட் பண்ணிட்டு வாங்க," என்று இயக்குநரையும் தயாரிப்பாளரையும் நடையாய் நடக்க வைத்திருப்பார்கள். சத்யராஜ் என்ன செய்தார் தெரியுமா?!

  "தலைவா, என் படத்துக்கு இவ்வளவு செலவு பண்ணிங்கன்னா தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நஷ்டம்தான் வரும். என் சம்பளத்தைக் குறைங்க. படத்தோட பட்ஜெட்டையும் கம்மி பண்ணுங்க. அப்பதான் எல்லாரும் வாழ முடியும்," என்று சொன்னார்.

  இப்போதுள்ள நடிகர்கள் யாரவது ஒருத்தர் இப்படிச் சொல்லியிருக்கிறார்களா?

  இதுபோல் இன்னொரு சம்பவம்...

  ஒரு படத்தில் நடிப்பதற்காக சத்யராஜ், கவுண்டமணி இருவரையும் ஒப்பந்தம் செய்கிறார்கள். படப்பிடிப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பாக இருவருக்கும் செக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். இருவரும் கிளம்பி பொள்ளாச்சி போயாச்சு. படப்பிடிப்பு தொடங்கி சிறப்பாகப் போய்கொண்டிருக்கிறது. கவுண்டமணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு மூன்றாவது நாள் ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர்தரப்பில் சொல்லப்பட்ட செய்தியால் அதிர்ந்துபோகிறார் கவுண்டமணி!

  எதிர்தரப்பு குரல் சொன்ன செய்தி இதுதான் - 'பொள்ளாச்சி படப்பிடிப்பிடிப்புக்காக தயாரிப்பாளர் கொடுத்த செக் போதிய பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது!'

  மொத்த யூனிட்டும் கிளம்பி ஸ்பாட்டுக்கு போய்விட்டார்கள். நேராக சத்யராஜின் அறைக்கு வந்த கவுண்டர், "ராஜி,இந்தப்பயலுக நம்மள ஏமாத்திட்டாங்கப்பா! நான் ஸ்பாட்டுக்கு வரல, வா நாம சென்னைக்குப் போகலாம்," என்று சொல்கிறார்.

  எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சத்யராஜ், "மணி அண்ணா, அவசரப்படாதிங்க. மூணு நாளா ஷூட்டிங் ஒழுங்காதான் போகுது. சென்னைக்குப் போய் மட்டும் என்ன பண்ணப் போறோம்? ரெண்டுநாள் பார்ப்போம்," என்று சமாதானப் படுத்த கவுண்டர் ஒப்புக்கொண்டு சத்யராஜோடு ஸ்பாட்டுக்குப் போகிறார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இருவரிடமும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அடுத்த நாளே திரும்பி வந்த செக்குக்கான பணத்தை ஸ்பாட்டிலேயே செட்டில் பண்ணிட்டார். அவசரப்பட்டுக் கிளம்பியிருந்தால் அந்தத் தயாரிப்பாளரின் நிலை என்னவாகியிருக்கும்?! அதுதான் சத்யராஜ்!!

  "ஹீரோவா நடிக்கிறப்போ வாங்கின அதிகப்பட்ச சம்பளத்தைவிட இன்னிக்கு அதிகமா தர்றாங்க தலைவா..." - இந்த இடத்தில் இன்னொருமுறை வாசித்துக்கொள்ளுங்கள், தர்றாங்க தலைவா! இவர் கேட்கவில்லை இவரின் தகுதி அறிந்து தயாரிப்பாளர்களே கொடுக்கிறார்கள். இதைத்தானே இப்போதுள்ள நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

  இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்ததைத் தந்து உதவுவதில் அவர் இன்னொரு எம்ஜிஆர் என்றுதான் சொல்ல வேண்டும். உதவி என்று யாரும் வந்துவிட்டால், அது அலுவலகமா, படப்பிடிப்புத் தளமா என்பதையெல்லாம் பார்க்க மாட்டார்.

  ஒருமுறை அப்படி ஒரு ஏழைக் குடும்பத்துக்கு உதவியபோது, அதை படமெடுத்து செய்தியாகத் தரலாம் என்றார் உடனிருந்த பிஆர்ஓ. அவசரமாகத் தடுத்தார் சத்யராஜ். "அது தப்புங்க... நாம உதவி செய்றதை படம் புடிச்சிப் போட்டா அதைப் பார்க்குற அந்த குடும்பத்துக்கு தர்மசங்கடமாயிடும். அவங்களுக்கு தெரிஞ்சவங்க கேலியா கூடப் பேசுவாங்க.. உதவி செய்வது அவங்களுக்கும் நிறைவா இருக்கணும், நமக்கும் திருப்தியா இருக்கணும். அது போதும்," என்றார்.

  சத்யராஜ் பற்றிச் சொல்வதென்றால் ஒரு புத்தகம் போடுமளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கு. நிறைவாக ஒன்றை மட்டும் சொகிறேன்.

  பாகுபலி படத்தில் இவருக்கு 'டே பேசிஸ்' சம்பளம். அவர் குறிப்பிட்டதுபோல் நிறைவான சம்பளம்.

  ஒருநாள் படப்பிடிப்புக்கு மொத்த யூனிட்டும் அசெம்பல். மொத்த யூனியட்டுக்குமான ஒருநாள் செலவு பேட்டா எல்லாவற்றையும் கணக்குப்போட்டால், இங்கே சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் பண்ணலாம்! படப்பிடிப்புத் தொடங்குவதற்கு சற்று முன்பு மழை! என்ன செய்வதென்று தெரியாமல் மொத்த யூனிட்டும் காத்திருக்கிறது. மழை நிற்பதாக இல்லை! வேறு வழியில்லாமல் பேக்கப் சொல்கிறார் இயக்குநர் ராஜமௌலி! அறைக்கு வந்தாச்சு எல்லோரும். அன்றைய நாளுக்கான பேட்டா, சம்பளம் எல்லாம் மாலை வழக்கம்போல் செட்டில் செய்யப்படுகிறது. சத்யராஜுக்கும்.

  'இயற்கையின் நிகழ்வுக்கு யார் பொறுப்பாக முடியும்' என்று தனக்கான சம்பளத்தை வாங்க மறுத்திருக்கிறார் சத்யராஜ். கேஷியருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! விஷயம் இயக்குநருக்குப் போகிறது. அவரே வந்து சத்யராஜிடம் பேசுகிறார்.பிடிவாதமாக மறுத்து அன்றைக்கான சம்பளத்தை மறுத்துவிட்டார் சத்யராஜ்.

  இந்த தலைமுறை திரையுலகில் இப்படிப்பட்ட சம்பவங்களை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

  இப்போ, தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்... கட்டப்பா ஏன் காலம் கடந்தும் திரையுலகில் நிற்கிறார் என்பது புரியும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!

  -வீகே சுந்தர்

  English summary
  Sathyaraj is not only an excellent actor but a fantastic human being, He is a lesson to every young actors
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X