»   »  ரீமிக்ஸ் பாட்டு - சத்யராஜ் ஆதரவு!

ரீமிக்ஸ் பாட்டு - சத்யராஜ் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil
Sathyaraj with MeghaNair
ரீமிக்ஸ் பாடல்களைப் போடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று சத்யராஜ் கேட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பழம்பெரும் பாடலாசிரியர் புலமைப்பித்தன், ரீமிக்ஸ் பாடல்களை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் எம்.ஜி.ஆர். பாடல்களை ரீமிக்ஸ் செய்வதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். வழக்குப் போடுவேன், கோர்ட்டுக்குப் போவேன் என ஆவேசமாகவும் பேசினார்.

இந்த நிலையில் ரீமிக்ஸ் பாடல்களில் என்ன தவறு இருக்கிறது என்று சத்யராஜ் கேட்டுள்ளர். ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்யராஜ் நம்மிடம் கூறுகையில், தலைவர் படங்களின் பாடல்களை பயன்படுத்த எனக்கு முழு உரிமையும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர். படப் பாடல்களை இப்போதைய படங்களில் ரீமிக்ஸ் வடிவில் கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை.

ஆனால் அப்படி ரீமிக்ஸ் செய்யும்போது கவனமாக மட்டும் இருந்து கொள்ள வேண்டும். ஒரிஜினாலிட்டி கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்ம. இல்லாவிட்டால் ஆட்சேபனைகள், எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும்.

பொங்கலுக்கு வெளியாகும் நான் நடித்துள்ள தங்கம் படத்தில் கூட பூமழை தூவி பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளோம். ஆனால் ஒரிஜினல் பாடலின் ஆன்மா கெடாத வகையில் அழகாக ரீமிக்ஸ் செய்துள்ளோம். அந்தப் பாட்டில் நான் எம்.ஜி.ஆர். கெட்டப்பிலேயே வருகிறேன்.

எம்.ஜி.ஆர். படப் பாடல்களை எனது படங்களில் பயன்படுத்திக் கொள்வதை சந்தோஷமாக, பெருமையாக நினைக்கிறேன். ஏழைகளின் தலைவனை, ஒடுக்கப்பட்டோருக்காக பாடுபட்ட தலைவனை நினைத்துப் பார்த்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு.

இந்த நேரத்தில் நான் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எம்.ஜி.ஆரோ அல்லது சிவாஜியோ யாருடைய படப் பாடலாக இருந்தாலும் சரி அதன் ஒரிஜினாலிட்டி கெடாத வகையில் ரீமிக்ஸ் செய்யுங்கள். அல்லது தொட்டால் பூ மலரும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ் செய்தது போல முற்றிலும் வேறுபட்ட ட்யூனில் மாற்றிக் கொடுங்கள். அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார் சத்யராஜ்.

இதயக்கனி இதழின் ஆசிரியர் விஜயன் கூறுகையில், எம்.ஜி.ஆர் படப் பாடல்களை அதன் மகத்துவம் கெடாத வகையில் ரீமிக்ஸ் செய்வதில் ஒரு தவறும் இல்லை என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil