»   »  நடிகர்களுக்கு பாலாபிஷேகமா?கொந்தளிக்கும் சீமான்!

நடிகர்களுக்கு பாலாபிஷேகமா?கொந்தளிக்கும் சீமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என இயக்குநர் சீமான் கோபத்துடன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள ஓரிரு உருப்படியான தமிழ் இயக்குநர்களில் சீமானும் ஒருவர். தம்பி படம் மூலமாக தமிழனின் எழுச்சியை தட்டி எழுப்பியவர்.

தமிழ், பெரியார், செகுவராவின் தீராப் பற்றாளர்.பிரபாகரனின் படத்தை தனது அலுவலக அறையில் பகிரங்கமாக வைத்திருக்கும் துணிச்சல்காரர்.

தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சீமான். தற்போது மாதவன், பாவனாவை வைத்து வாழ்த்துக்கள் என்ற படத்தை இயக்கி வரும் சீமான் சொந்த ஊரான பரமக்குடிக்கு வந்திருந்தார்.

நடிகர்களின் கட் அவுட்களுக்கு செய்யப்படும் பாலாபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவற்றை கடுமையாகக் கண்டித்துக் குமுறினார்.

அவர் கூறுகையில், நடிகர்களின் கட் அவுட்களுக்கு பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலைக் கொட்டி அபிஷேகம் செய்கின்றனர். அந்தப் பாலை எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கலாம். அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம்.

இப்படி நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பூஜை செய்வது போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்.

தமிழ் மொழியைக் காக்க யாருக்கும் அக்கறை இல்லை. அதைப் பாதுகாக்க லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகுந்த மன வேதனை தருகிறது.

எனக்கு சினிமா ஒரு கருவிதான். ஆனால் மற்றவர்களுக்கு அது பிழைப்பு. தமிழகத்தில் முன்பை விட இப்போது அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் பெருகி வருகின்றன. இது மனித நேயத்தைக் கொல்வதற்குச் சமம் என்றார் சீமான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil