»   »  ஷங்கரின் ரூ. 100 கோடி கனவு ரோபோட்!

ஷங்கரின் ரூ. 100 கோடி கனவு ரோபோட்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி என்கிற அணுகுண்டைப் போட்டு விட்டு அவர் பாட்டுக்கு கனடா, அமெரிக்கா பக்கமாய் கிளம்பிப் போய் விட்ட ஷங்கர், இன்று சென்னை திரும்புகிறார்.

ஆடம்பரப் பட டைரக்டர்களில் முன்னோடியானவர், முக்கியமானவர் ஷங்கர். அந்தக் காலத்தில் டி.ராஜேந்தர்தான் பிரமாண்ட செட் போட்டு சிலாகிக்க வைத்தவர். ஆனால் அதே ஸ்டைல் செட்டுகளை, படு மாடர்னாக போட்டு பிரமிக்க வைக்கிறார் ஷங்கர்.

சிவாஜி படத்தில் எது செட், எது ரியல் என்று தெரியாமல் ரசிகர்களை குழம்ப வைத்துள்ள ஷங்கர், சிவாஜி படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே மனைவி, குழந்தைகளுடன் ஜாலியாக அமெரிக்கா, கனடா என டிரிப் கிளம்பிப் போய் விட்டார்.

சிவாஜி உலகையை கலக்கி வரும் நிலையில் ஷங்கர் மட்டும் இங்கு மிஸ்ஸிங். தனது விடுமுறையை முடித்து விட்டு ஒரு வழியாக இன்று சென்னை திரும்புகிறார் ஷங்கர்.

ஆனால் அவர் வருவதற்குள்ளாகவே அவரது அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கி விட்டன. ஷங்கரின் அடுத்த படம் ரோபோட் என்பதுதான் அந்த லேட்டஸ்ட் செய்தியின் முக்கிய அம்சம்.

ரோபோட் என்ற படத்தை ரொம்ப காலத்திற்கு முன்பே திட்டமிட்டவர் ஷங்கர். கமல்ஹாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அப்படம் வளரவே இல்லை.

ஆனால் இப்போது மீண்டும் ரோபோட்டை ஷங்கர் தூசு தட்டி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கரின் ரோபோட் நாயகனாக கமல்ஹாசன் நடிக்கப் போவதில்லையாம், அஜீத்தும் இல்லையாம்.

மாறாக இந்தி இளம் நாயகன் ஹிருத்திக் ரோஷன் நாயகனாக நடிக்கக் கூடுமாம்.

இதுகுறித்து ஷங்கரிடம் உதவி இயக்குநராக உள்ள ஒருவரிடம் கேட்டபோது, ஷங்கர் சாரின் அடுத்த படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. படத்தின் கதை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது (அப்படீன்னா ரோபோட்தான் ஓய்).

படத்திற்கு பிரமாண்டமான செட்கள், கிராபிக்ஸ் வேலைகள் தேவைப்படும். தண்ணீராக பணத்தை இறைத்து விடக் கூடிய தெம்பும், திராணியும் உள்ள தயாரிப்பாளரால்தான் இப்படத்தை எடுக்க முடியும்.

இதை ஒரு பிரமாண்ட நிறுவனம் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதால் ஆட்லேப்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார் ஷங்கர். இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்குப் புதிதானதல்ல. சில வருடங்களுக்கு முன்பு சுஜாதா தொடராக எழுதிய என் இனிய இயந்திராவைத் தான் படமாக்கவுள்ளார் ஷங்கர். அந்தக் கதையில் சில மாற்றங்களைச் செய்து படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

கால இயந்திரத்தில் 3050ம் ஆண்டிலிருந்து கதை தொடங்குகிறது. கி.பி. 3050ம் ஆண்டு சென்னை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படம் தத்ரூபமாக காட்டும். அறிவியலுடன் அரசியல், குற்றம், காதல் என பலவற்றையும் கலந்து இனிய பலசரக்காக இப்படத்தைக் கொடுக்கப் போகிறார் ஷங்கர் சார் என்றார் அந்த உதவி இயக்குநர்.

இந்தப் படத்தைத்தான் 2003ம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து எடுக்கத் திட்டமிட்டிருந்தார் ஷங்கர். ஆனால் இரு பெரும் கலைத் திலகங்களுக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் மூளவே படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

மேலும் சர்வதேச சந்தையில் நன்றாக விலை போகக் கூடிய இந்திய நட்சத்திரம் ஒருவரை வைத்து இப்படத்தை உருவாக்கலாம் என யோசித்தார் ஷங்கர். அதனால்தான் படத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ரோபோட் படத்தைத் தயாரிக்க ரூ. 100 கோடி வரை தேவைப்படுமாம். இப்போது இந்தப் படத்தை இயக்கும் காலம் கனிந்துள்ளதாக முடிவு செய்துள்ள ஷங்கர் இம்முறை தென்னிந்திய நட்சத்திரங்களை வைத்து இயக்காமல், இந்தி நடிகர் ஒருவரைப் போடலாம் என தீர்மானித்தார்.

கிருஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பைப் பார்த்த ஷங்கர், ரோஷனின் நடிப்பால் கவரப்பட்டார். இந்த நிலையில்தான் ஆட்லேப்ஸ் நிறுவனம் ரோஷனின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்த விவரமும் அவருக்குத் தெரிய வந்தது.

அப்புறம் என்ன, ரெண்டும், ரெண்டும் நாலு என்ற கணக்கின்படி, ஹிருத்திக்கையும், ஆட்லேப்ஸையும் அணுகி ரோபோட் குறித்து பேசியுள்ளார். அவர்களும் படு சந்தோஷமாக சம்மதித்து விட்டார்களாம். படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கவுள்ளார்.

ஹிருத்திக் ரோஷன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டு செம கூட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil