»   »  ஷங்கர் கமர்ஷியலாக மாறியது ஏன்?

ஷங்கர் கமர்ஷியலாக மாறியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

பாரதிராஜா மாதிரி படங்களை எடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தவராம் ஷங்கர். ஆனால் காலத்தின் கோலமாக, தான் கமர்ஷியல் பட இயக்குநராக மாறி விட்டதாக கூறியுள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சிஷ்யர்தான் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஷங்கர். பிரமாண்ட காட்சி அமைப்புகள், காட்சிக்கு காட்சிக்கு வித்தியாசம் என வியக்க வைத்தவர் ஷங்கர்.

தொடர்ந்து காதலன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், லேட்டஸ்டாக சிவாஜி என அவர் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களிலும் வித்தியாசமும், பிரமாண்டமும்தான் கதையை விட வலுவாக இருந்துள்ளன.

ஏன் இப்படி கமர்ஷியல் படங்களையேக் கொடுக்கிறீர்கள் என்று ஷங்கரிடம் கேட்டால், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இமயங்களைப் போல இயக்க வேண்டும் என்ற ஆசையில்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிப் போய் விட்டது.

கமர்ஷியல் பட இயக்குநர் என்ற பெயர் எனக்குக் கிடைத்துள்ளதால் நான் ஒருபோதும் வருந்தியதே கிடையாது. இந்தப் படங்களை எடுப்பதற்கும் திறமை வேண்டும். ஒவ்வொரு படமும் எனக்கு திரில்லான அனுபவத்தையே கொடுத்துள்ளது. ரசித்துத்தான் ஒவ்வொரு படத்தையும் செய்துள்ளேன்.

எனது படங்களில் கமர்ஷியல்தனம் அதிகம் இருந்தாலும் அதையும் மீறி சமூக விஷயம் ஒன்று கண்டிப்பாக இருக்கும். இதற்கு ஒரு பின்ணனி உண்டு. நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன்.

இளம் வயதில் என்ஜீனியரிங் படிக்க விரும்பினேன். ஆனால் முடியவில்லை, டிப்ளமோ படிப்பைத்தான் முடிக்க முடிந்தது. என்னால் படிக்க முடியாமல் போனதற்குப் பல காரணங்கள். அவையெல்லாம் என்னைப் பாதித்தன. அவையெல்லாம் இன்னும் கூட என் மனதுக்குள் இருக்கிறது.

இவைதான் ஒவ்வொரு படத்திலும் ஒருவிதமாக வெளிப்படுகிறது. கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது அனைவருக்கும் பொதுவானது. அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடு சுபிட்சமடையும், உண்மையான முன்னேற்றம் கிடைக்கும் என்கிறார் ஷங்கர்.

அடுத்து ரோபோ மூலம் ஷங்கர் தரப் போகும் செய்தி என்னவோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil