»   »  கெரே கிஸ் தப்பே இல்லை-ஷில்பா

கெரே கிஸ் தப்பே இல்லை-ஷில்பா

Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே தன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எனது நாட்டின் கலாச்சாரம் குறித்து யாரும் எனக்குப் பாடம் நடத்தத் தேவையில்லை என்று நடிகை ஷில்பா ஷெட்டி ஆவேசமாக கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஷில்பா ஷெட்டியை, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே, திடீரென இறுக்கமாக கட்டிப் பிடித்து அழுத்தமாக முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஷில்பாவையும், கெரேவையும் கண்டித்துப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் கெரேவும், ஷில்பாவும் நடந்து கொண்டதாக பல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாஜகவும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்தியக் கலாச்சாரத்திற்கு விரோதமாக கெரேவும், ஷில்பாவும் நடந்து கொண்டுள்ளனர். இது நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என்றார் அவர்.

ஆனால் இந்த எதிர்ப்புகள் தேவையற்ற ஒன்று, மீடியாக்கள் தேவையில்லாமல் இதை பெரிதுபடுத்தி விட்டன என்று ஷில்பா கோபமாக கூறியுள்ளார்.

கெரே கொடுத்த முத்தம் குறித்து அவர் கூறுகையில், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில், இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி செய்திகள் வெளியிடுவது தேசிய நேரத்தை வீணடிக்கும் செயல்.

என்னுடன் டான்ஸ் போஸ் கொடுக்கும் நோக்கில்தான் அவ்வாறு முத்தமிட்டார் கெரே. இதுகுறித்து என்னுடன் அவர் முன்பே ஆலோசனை நடத்தியிருந்தார். அதற்கு மேல் எதுவும் இதில் விசேஷமாக இல்லை.

இதை அரசியலாக்கக் கூடாது. இந்தியா மீது மிகுந்த பற்று கொண்டவர் கெரே. எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இந்தியாவில் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். என்னிடம் அவர் தவறாக நடக்கவில்லை. பத்திரிக்கைகள்தான் இதை பெரிதுபடுத்தி விட்டன.

கெரே எனக்கு முத்தம் கொடுத்தபோது முதலில் எனக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால் பின்னர் அவர் எனக்கு நன்றி கூறியபோதுதான் எனக்கு அவரது செயல் புரிந்தது.

கெரேவின் செயலில் எந்த அறுவறுப்பும் ஆபாசமும் இல்லை. அப்படி இருக்கையில் நாமே நம்மைப் பற்றி அசிங்கமாக பேசிக் கொண்டு முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாது.

எனக்கு எனது நாட்டின் கலாச்சாரம் குறித்துத் தெரியும். எனது எல்லை எது என்பது புரியும். எனவே எனக்கு யாரும் எதையும் கற்றுத் தரத் தேவையில்லை. இந்த விஷயத்திற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவும் அவசியம் இல்லை என்றார் ஷில்பா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil