»   »  சீதை வேடத்தில் ஷில்பா ஷெட்டி!

சீதை வேடத்தில் ஷில்பா ஷெட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிளாமர் கில்லியாக விளங்கி வரும் ஷில்பா ஷெட்டி முதல் முறையாக புராணப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். அதுவும் சீதா பிராட்டி வேடத்தில் நடிக்கப் போகிறாராம்.

ஷில்பாவின் திரை வாழ்க்கையை பிரதருக்குப் முன், பிரதருக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். இனவெறியைக் காட்டி ஷில்பாவை அழ வைத்த சக போட்டியாளர்களால், ஷில்பாவுக்கு மவுசு கூடிப் போனது. திடீர் பிரபலமாகி, புகழின் உச்சத்திற்கேப் போய் விட்டார் ஷில்பா. இதில் வெற்றியும் பெற்றதால் ஷில்பா உலகம் முழுவதும் அறியப்பட்ட முகமாகி விட்டார்.

பிக் பிரதர் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஷில்பாவின் செல்வாக்கு மேலை நாடுகளில் மகோன்னதமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல சர்ச்சைகளில் சிக்கினார் ஷில்பா. எல்லாமே அவருக்கு நல்ல பப்ளிசிட்டியாகவே அமைந்தன என்பதுதான் இதில் முக்கியமானது.

ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே, பொது இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷில்பாவுக்கு உதட்டோடு உதடாக முத்தம் கொடுத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். ஆனால் இதை ஏற்கனவே பேசி வைத்து செய்ததுதான், எனவே ஷாக் ஆக இல்லை என்றார் ஷில்பா.

இதுகுறித்து விமர்சித்தவர்களை, முத்த விவகாரத்தை தேவையில்லாமல் ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று கடிந்து கொண்டார் ஷில்பா. சமீபத்தில் இங்கிலந்தைச் சேர்ந்த இந்திய சினிமா தயாரிப்பாளருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார் ஷில்பா.

இப்படியாக சர்ச்சையில் சிக்கி வந்த ஷில்பாவைத் தேடி ஜேம்ஸ் பாண்ட் பட வாய்ப்பும் வந்துள்ளது. இப்போது வித்தியாசமான ஒரு கேரக்டர் அவரைத் தேடி வந்துள்ளதாம்.

அது ஒரு புராணப் படம். உரு படேல் என்பவர் தயாரிக்கிறார். ஹனுமான் குறித்த அந்த இந்தி படத்தில் ஷில்பா நடிக்கவுள்ளார். அதுவும் சீதா பிராட்டி வேடத்தில் நடிப்பில் புரட்டி எடுக்கப் போகிறாராம்.

மிகப்பெரிய பட்ஜெட் படமான ஹனுமானை இயக்கப் போவது லூயிஸ்ஸ் மாண்டோகி. ராமராக நடிப்பவர் யார் தெரியுமா? மேட்ரிக்ஸ் போன்ற பிரபல படங்களில் நடித்த கெனோ ரீவ்தான் ராமராம். ஆஞ்சநேயர் வேடத்துக்கு பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவரைப் போடவுள்ளனராம்.

இப்படத்தை ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலா விடப் போகிறார்களாம்.

ஷில்பா ஷெட்டிக்கு 6 ஹாலிவுட் படங்கள் உள்பட 11 வெளிநாட்டுப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் எதிலேயும் நடிக்க மறுத்து விட்டாராம். காலம் போன காலத்தில் ஷில்பாவுக்கு அடித்துள்ள ராஜ யோகத்தைப் பார்த்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் உள்ளிட்ட இந்தியத் திரையுலகில் உள்ள பல நாயகிகளும் பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படி லேட்டானாலும், லேட்டஸ்டாக கலக்கி வரும் ஷில்பாவுக்கு வயசு என்ன தெரியுமா? ஜஸ்ட் 32!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil