»   »  விற்பனைக்கு வரும் சிவாஜி பஸ்!

விற்பனைக்கு வரும் சிவாஜி பஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் நடித்துள்ள அதி நவீன சொகுசு பஸ் விற்பனைக்கு வருகிறது.

ரொம்ப காலத்துக்கு முன்பு ரஜினியும், ரதியும் சேர்ந்து நடித் கழுகு படம் ஞாபகத்தில் இருக்கிறதா. அதில் ஒரு பஸ் நடித்திருக்கும். அதாவது அதி நவீன வசதிகள் கொண்ட பஸ் அது. பாத்ரூம், சமையல் அறை, உட்கார்ந்து பேசும் அறை என சகல வசதிகளுடன் கூடிய பஸ் அது.

அந்தப் பஸ்ஸில்தான் ரதியும், ரஜினியும் (கூடவே கொடுக்கு போல ரஜினியின் நண்பர்களும்) ஹனிமூனுக்குக் கிளம்புவார்கள். அந்தப் பஸ்ஸை கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்கள் தீவைத்துக் கொளுத்தி விடுவார்கள். காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே அந்தப் பஸ்ஸை கொளுத்தினோம் என்று படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் பின்னர் ஒருமுறை கூறினார்.

அதேபோல இப்போது இன்னொரு சொகுசு பஸ், சிவாஜி படத்திலும் நடித்துள்ளது. ஏவி.எம். தயாரிப்பில் உருவாகியுள்ள சிவாஜியில், அட்டகாசமான ஒரு ஆம்னி பஸ் வருகிறது. படத்துக்காக இந்தப் பஸ்ஸை முற்றிலும் அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு நடமாடும் பைவ் ஸ்டார் ஹோட்டல் போல மாற்றி விட்டார்களாம்.

மினி தியேட்டர், சாட்டிலைட் இணைப்புடன் கூடிய மாநாட்டு அரங்கம், மருத்துவ வசதிகள், 4 படுக்கை அறைகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடியதாக இந்த பஸ் மாற்றப்பட்டுள்ளதாம்.

இந்தப் பஸ்ஸை ஆஸ்திரேலியாவில் உருவாக்கியுள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவு பிடித்ததாம் இந்த பஸ்ஸை அலங்கரிக்க. கதைப்படி, வில்லன்கள் ரஜினியை சுட்டு விடுகிறார்கள் (கிளைமாக்ஸில்). இதையடுத்து ரஜினியைக் காப்பாற்ற அவரது நண்பர் ரகுவரன் (வழக்கமாக வில்லனாக வரும் ரகுவரன், இதில் ரஜினியின் நண்பராக வருகிறார்) உடனடியாக ஒரு பஸ்ஸை, நடமாடும் ஆம்புலன்ஸ் போல மாற்றி விடுகிறார்.

ஆனால் வெளியிலிருந்து பார்த்தால் சொகுசுப் பேருந்து மாதிரி தான் தெரியுமாம். பஸ்ஸுக்குள் இருந்தபடி ரஜினிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள், உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.

காயத்திலிருந்து மீண்டு வரும் ரஜினி, வில்லன்களை நையப்புடைத்து நாறடிக்கிறாராம். கிளைமாக்ஸ் காட்சிக்காகவே இந்த பஸ்ஸை ஸ்பெஷலாக வடிவமைத்துள்ளனராம். படத்தில் ரஜினியைப் போலவே இந்த பஸ்ஸும் அனைவரையும் கவரும்.

படப்பிடிப்பு முடிந்து விட்டதால் இந்த பஸ் தற்போது ஏவி.எம். ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள செட்டியார் பங்களா முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டுடியோவுக்கு படப்பிடிப்புக்காக வரும் திரையுலகினர் திரண்டு வந்து இந்த பஸ்ஸைப் பார்த்து இதுதான்யா சிவாஜியில் நடித்த பஸ் என்று பிரமிப்போடு பார்த்து செல்கிறார்களாம்.

இந்தப் பஸ்ஸை விற்க முடிவு செய்துள்ளாம் ஏவி.எம். நிறுவனம். இதை அறிந்த பல முக்கியப் புள்ளிகள் நீ, நான் என பஸ்ஸை வாங்க முண்டியடிக்கிறார்களாம்.

இதனால் யாருக்கு பஸ்ஸைக் கொடுப்பது என்று குழம்பிப் போன ஏவி.எம், தற்போது ஏலத்தின் மூலம் பஸ்ஸை விற்க தீர்மானித்துள்ளதாம்.

சிவாஜி பஸ் ஒரு தரம்!

சிவாஜி பஸ் ரெண்டு தரம்!!

சிவாஜி பஸ் மூணு தரம்!!!

சிவாஜி குறித்த இன்னொரு தகிக்கும் நியூஸ். படத்தில் ரஜினி பெரிய கோடீஸ்வரராக வருகிறார் அல்லவா? இதனால் படத்தில் ரூபாய் நோட்டுக்களும் குண்டக்க மண்டக்க நடித்திருக்கிறதாம்.

இதற்காக ரூ. 6.5 கோடி மதிப்புள்ள டம்மி ரூபாய் நோட்டுக்களை சிவகாசியில் உள்ள அச்சகத்தில் வைத்து அடித்து படத்தில் பயன்படுத்தினார்களாம். இதன் மதிப்பு ரூ. 10 லட்சமாம்.

படப்பிடிப்பு முடிந்து விட்டதால் சில நாட்களுக்கு முன்பு இந்த டம்மி ரூபாய் நோட்டுக்களை ஏவி.எம். வளாகத்தில் குவித்து வைத்து கொளுத்தி விட்டார்களாம்!

பத்த வச்சிட்டியே பரட்டை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil