»   »  சிவாஜியின் புதிய சாதனை

சிவாஜியின் புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இசைப் பிரியர்கள் அனைவரின் காதுகளும் சிவாஜி சிடியை நோக்கி என்று புதுமொழி எழுதியுள்ளார் ரஜினி.

சிவாஜி படம் குறித்து ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது சிவாஜி படப் பாடல்கள் வெளியான பின்பு இந்த ஈர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

சிவாஜி பட ஸ்டில்களால் கவரப்பட்ட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ரஜினி போல் ஹேர் ஸ்டைல் மாற்றி கொண்டு வலம் வர ஆரம்பித்துள்ளனர்.

உற்சாகம் அதிகமாகிப் போன பலர், சிவாஜி பட சிடிக்களை வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்கின்றனர். இதனால் சிவாஜி பட ஆடியோவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சிலர் ஒரு சிடியை பிளாக்கில் ரூ. 250 வரை விலை வைத்து விற்று காசு பார்க்கின்றனர்.

பாடல்கள் வெளியான முதல் நாளே விற்பனை சூடு பிடித்தது. அடுத்த நாள், 80,000 சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாம். மேலும் 1 லட்சம் சிடிக்கள் வேண்டும் என விற்பனையாளர்கள் ஏவி.எம். நிறுவனத்திடம் கேட்டுள்ளனராம். ஆடியோ கேஸட்டுகளை விட சிடிக்களே அதிகம் விற்பனையாகிறதாம்.

தென்னிந்தியாவில் மட்டும் 5 லட்சம் சிடிக்களும் கேஸட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாம். மும்பையிலும் கூட விற்பனை விறுவிறுப்பாக இருக்கிறதாம். கேரளாவிலும் 30,000 சிடிக்கள் விற்றுள்ளது. பிற மொழி படம் ஒன்றின் ஆடியோ இந்த அளவிற்கு விற்பது இதுவே முதல் முறையாம்.

சென்னை ரிச்சி வீதியில் உள்ள ஆடியோ விற்பனையாளர்கள்தான் படு குஷியில் உள்ளனர். தென்னிந்தியா முழுமைக்கும் ஆடியோ கேசட்டுகளின் தலைநகர் இதுதான். இங்குள்ள மொத்த விற்பனையாளர்கள், கடந்த 25 வருடத்தில் இப்படி ஒரு வரவேற்பு ஏற்பட்டிருப்பது சிவாஜிக்குதான் என்கிறார்கள்.

ரிச்சி தெருவில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், திங்கள் கிழமை காலை 5 மணிக்கு கடையைத் திறக்க வந்தேன். அந்த நேரத்திலேயே எனது இரு கடைகள் முன்பும் கூட்டம் அலைமோதியது. இதை என்னால் நம்ப முடியவில்லை.

ஒரு ரசிகர் மினி சிடி பிளேயரோடு வந்து சிவாஜி சிடியை வாங்கிப் போட்டுக் கேட்டு உற்சாகமாகி விட்டார். கையோடு கொண்டு வந்திருந்த இனிப்புகளை காத்திருந்தவர்களுக்குக் கொடுத்து விட்டு ஜாலியாக கிளம்பிப் போனார்.

தொய்வடைந்து கிடந்த ஆடியோ தொழிலை சிவாஜி மூலம் ரஜினி நிமிர்த்தியுள்ளார். உண்மையிலேயே அவர் சூப்பர் ஸ்டார்தான் என்று புகழ்ந்து தள்ளி விட்டார்.

படமும் இப்படி அமோகமாக இருக்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil