»   »  சிவாஜிக்கு சொந்த ஊரில் எதிர்ப்பு!

சிவாஜிக்கு சொந்த ஊரில் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தை கர்நாடகத்தில் திரையிட கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில், தமிழ்ப் படங்கள் மீது படு காண்டாக இருக்கிறார்கள் பல்வேறு கன்னட அமைப்பினரும், கன்னட திரையுலகினரும்.

காரணம், கன்னடப் படங்களை விட, வேறு மொழிப் படங்களை விட தமிழ்ப் படங்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு இருப்பதுதான்.

தமிழ்ப் படங்களை திரையிட விடாமல் தியேட்டர்களை அடிப்பது, பல்வேறு தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது என தங்கள் இஷ்டம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந் நிலையில், சிவாஜி படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கன்னடம் அல்லாத மற்ற மொழி படங்கள் கர்நாடகாவில் வெளியிடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மற்ற மொழி படங்கள் கர்நாடகாவில் வெளியிடும் பொது அந்த படத்த்துக்கு நான்கு பிரிண்ட்டுகள் மட்டுமே போடப்பட வேண்டும்.

ஆனால் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்துக்கு ஏராளமான பிரிண்டுக்கள் போடப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அதேபோல சொந்த மாநிலங்களில் திரையிடப்படும் படங்கள், அங்கு வெளியான 7 வாரங்களுக்குப் பின்னர்தான் கர்நாடகத்தில் திரையிடப்பட வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டையும் மீற சிவாஜி படம் தயாராக உள்ளது.

எனவே விதிகளை மீறி சிவாஜி படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

மேலும் இந்த ஆண்டு கன்னட ராஜ்யோத்சவா (அதாவது அந்த மாநிலம் உருவான நாள்) முதல் இந்த விதிமுறைகளை நாங்கள் கடுமையாகவும், கவனமாகவும் கண்காணித்து வருகிறோம். இப்போது சிவாஜி படத்தை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கப் போகிறோம்.

அண்ணாவரு டாக்டர் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பர்வதம்மா ராஜ்குமார் ஆகியோர் கொண்டு வந்த விதிமுறைகள் இவை. 3 ஆண்டுகளுக்கு முன்பு இவை உருவாக்கப்பட்டன. ஆனால் இவற்றை சில தயாரிப்பாளர்கள் முறைப்படி கடைபிடிப்பதில்லை.

இவற்றை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்ளுக்கு நாங்கள் தெரிவித்து விட்டோம் என்றார் கெளடா.

கர்நாடகத்தில் கன்னடத்தைத் தவிர வேறு மொழிப் படமே ஓடக் கூடாது என்பதுதான் கன்னட அமைப்புகளின் ஒரே எண்ணம். ஆனால் அப்படி நடந்தால் தியேட்டர்களை எல்லாம் இழுத்து மூடி விட்டுப் போக வேண்டிய நிலைதான் வரும் என்பது திரையரங்க உரிமையாளர்களின் கருத்து.

இப்படி எடக்கு மடக்கான விதிமுறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்குப் பதில், நல்ல கதையம்சங்களுடன் கூடிய தரமான, உருப்படியான படங்களைத் தயாரிக்க கன்னட திரையுலகினர் முன்வர வேண்டும். அப்படி இல்லாமல் மற்ற மொழிப் படங்களுக்கு இடையூறு செய்து கொண்டே இருப்பதால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil