»   »  ஏவி.எம்.மை சீண்டும் தியேட்டர்கள்!

ஏவி.எம்.மை சீண்டும் தியேட்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜியை வைத்து காசு பார்க்கும் நோக்கில் ஏவி.எம். நிறுவனத்தையே வம்புக்கு இழுக்கும் வகையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் பிரச்சனை செய்து வருவதால் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை கடுப்பாகியுள்ளனவாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஏவி.எம். நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள படம் சிவாஜி. ஜூன் 15ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தியேட்டர்காரர்கள் ரூபத்தில் புதிதாக ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது சிவாஜிக்கு. அதாவது சிவாஜி உள்பட இனிமேல் வெளியாகும் படங்களை சதவீத அடிப்படையில்தான் வாங்குவோம் (அதாவது லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்) என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திடீரென அறிவித்தது.

இதனால் சிவாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதுவரை இல்லாமல் திடீரென சிவாஜி ரிலீஸாகும் தேதியை அறிவித்த பின்னர் இப்படி தியேட்டர்கார்ரகள் கூறியதால், இது சிவாஜியைக் குறி வைத்து வெளியான அறிவிப்பு என்று அவர்கள் சந்தேகித்தனர்.

முன்பு போல இல்லாமல், இப்போதெல்லாம் 3 வருடத்திற்கு ஒரு ரஜினி படம்தான் வருகிறது. இந்த சமயத்தில் காசு பார்த்தால்தான் ஆச்சு என்ற நோக்கில்தான் இந்த முடிவுக்கு தியேட்டர்காரர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தியேட்டர்காரர்கள் எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை, ஏவி.எம். நிறுவனத்துக்கு எதிராக தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிவாஜி லாபத்தில் ஓடி விட்டால் சரி, ஒருவேளை நஷ்டத்தில் ஓடினால் என்ன செய்வது. இழப்பீடு கோரி ரஜினியிடம் கூட பணத்தை வாங்கி விடலாம். ஆனால் ஏவி.எம்.மிடிருந்து ஒரு பைசாவைக் கூட வாங்க முடியாதே என்று அவர் தியேட்டர்காரர்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 1800 தியேட்டர்கள் உள்ளன. இதில் 400 தியேட்டர் உரிமையாளர்கள் ஏவி.எம். தரப்புக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. மற்றவர்கள்தான் பிரச்சினை செய்து வருகின்றனர்.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குப் பதில் மேலும் மேலும் தீவிரமாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே சிவாஜி படம் சிக்கலின்றி திரைக்கு வருமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. சிவாஜியை வைத்து திரையுலகமே பிளவுபடும் சூழ்நிலையும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, தியேட்டர்காரர்களின் இந்த திடீர் போர்க்கொடியால், கடுப்பாகியுள்ள தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை ஏவி.எம்.முக்கு ஆதரவாக களம் இறங்கத் திட்டமிட்டுள்ளன.

இந்தப் பிரச்சினை காரணமாக சிவாஜி திட்டமிட்டபடி ஜூன் 15ம் தேதி ரிலீஸ் ஆகாது, மேலும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, இதுவரை நான்கு முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமைதான் விற்பனையாகியுள்ளதாம். சென்னை சிட்டி, கோவை, நெல்லை, நாகர்கோவில் ஆகியவை மட்டுமே விற்பனையாகியுள்ளதாம்.

என்.எஸ்.சி எனப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவை வாங்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முயன்றார். ஆனால் விலை அதிகம் கூறப்பட்டதால் அவர் விலகிக் கொண்டு விட்டாராம்.

தற்போதைய நிலையில் சிவாஜி ரிலீஸ் திட்டமிட்டபடி இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் சொன்ன தேதிக்கு கரெக்டாக படம் ரிலீஸாகும் என ஏவி.எம். தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil