»   »  சிவாஜி சுனாமியில் சிக்கிய பள்ளிக்கூடம்!

சிவாஜி சுனாமியில் சிக்கிய பள்ளிக்கூடம்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி சுனாமி காரணமாக, தியேட்டர் கிடைக்காததால் தனது பள்ளிக்கூடம் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இயக்கநர் தங்கர் பச்சான் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நல்ல படங்கள் கொடுப்பதில் பிடிவாதமாக இருப்பவர்களில் பிரதானமானவர் தங்கர். ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றிய தங்கர் பின்னர் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநராக மாறியவர்.

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என தங்கர் இயக்கிய ஒவ்வொரு படமும் தங்கம் போல ஜொலிப்பவை. சமீபத்தில் பள்ளிக்கூடம் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் இந்தப் படம் இன்னும் வரவில்லை.

என்ன காரணம் என்று தங்கரிடம் கேட்டபோது, இரண்டு மாதங்களுக்கு முன்பே பள்ளிக்கூடத்தை முடித்து விட்டேன். ஆனால் இந்த நல்ல படத்தைத் திரையிட எனக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. எனவேதான் படத்தை திரையிட முடியாமல் போய் விட்டது.

சிவாஜி சுனாமி தணிந்து, சகஜ நிலை திரும்பும் வரை நான் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார் வருத்தத்துடன்.

சிவாஜி படம் குறித்து தங்கரிடம் கருத்து கேட்டபோது அவர் எதையும் கூற மறுத்து அமைதி காத்தார். ஜூலை கடைசியில் பள்ளிக் கூடத்தை திரைக்குக் கொண்டு திட்டமிட்டுள்ளார் தங்கர். ஆனால் இதுவரை நல்ல தியேட்டர் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே தேதியை இறுதி செய்ய முடியாத நிலையாம்.

வருத்த செய்தியை விடுங்கள், சந்தோஷச் செய்திக்குப் போவோம். பள்ளிக்கூடத்தை முடித்த கையோடு, சத்யராஜ், அர்ச்சனாவை வைத்து அருமையான ஒரு படத்தை ஆரம்பித்த தங்கர் அந்தப் படத்தின் 60 சதவீத பகுதியை ஷூட் செய்து முடித்து விட்டாராம்.

ஒன்பது ரூபாய் நோட்டு என்பது படத்தின் பெயர். இது தங்கரே எழுதிய சிறுகதையாம். ஒரே மாதத்தில் படத்தின் முக்கால்வாசிப் பகுதியை முடித்துள்ளார் தங்கர். படத்திற்காக பூஜையோ அல்லது வழக்கமான சம்பிரதாயங்களையோ கடைப்பிடிக்காமல் சட்டுப்புட்டென்று படத்தை ஆரம்பித்து விட்டார்.

கேன்ஸ் பட விழாவுக்குச் சென்று திரும்பியவுடன் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை ஆரம்பித்து விட்டாராம். இந்தப் படம் குறித்து தங்கரிடம் கேட்டபோது, சந்தோஷமாக பேசினார்.

இது வழக்கமான சினிமா மாதிரி இல்லாமல் வித்தியாசமான கதை. படத்தின் வசனப் பகுதிகளை இன்னும் 2 வாரங்களில் முடித்து விடுவேன். ஆகஸ்ட் 15ம் தேதி திரையிடுவதற்கு படம் தயாராகி விடும் என்றார்.

தங்கரின் பள்ளிக்கூடம் மட்டுமல்லாது, அஜீத்தின் கிரீடம் உள்பட பல படங்கள் சிவாஜி காரணமாக பொட்டியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டுள்ளனராம்.

சிவாஜியை வைத்து அள்ளும் தியேட்டர்காரர்கள் மற்ற படங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil