»   »  குறைந்தது சிவாஜி ஜூரம்

குறைந்தது சிவாஜி ஜூரம்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் மோகன்லால், திலீப் ஆகியோர் நடித்த புதுப் படங்கள் ரிலீஸாகியுள்ளதால் கேரளாவில் சிவாஜி ஜூரம் மட்டுப்பட ஆரம்பித்துள்ளது. தியேட்டர்களும் குறைக்கப்பட்டுள்ளனவாம்.

தமிழகத்தை மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் சிவாஜி உலுக்கியெடுத்து வருகிறது. திரையிட்ட இடம் எல்லாம் திருவிழாக் கோலமாக இருக்கும் சிவாஜி, பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது.

வரலாறு காணாத அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸானது சிவாஜி. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வசூலையும் வாரிக் குவித்தது. கேரள மாநில விநியோகஸ்தர் ஜானி சாகரிகா, போட்ட முதலை அதற்குள் எடுத்து விட்டார்.

அந்த அளவுக்கு ஆட்டிப் படைத்து வந்த சிவாஜி ஜூரம் தற்போது படிப்படியாக குறையத் தடங்கியுள்ளதாம். காரணம் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால், திலீப், லால்ஜோஸ் ஆகியோரின் புத்தம் புது படங்கள் ரிலீஸாகியுள்ளதுதான்.

மோகன்லால் நடிப்பில், ரபி-மெக்கார்டின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹலோ படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதே படம் சென்னையிலும் நான்கு தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இங்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம். கேரளாவில் மட்டும் 50 தியேட்டர்களில் ஹலோ திரையிடப்பட்டுள்ளதாம்.

திலீப் நடித்துள்ள ஜூலை 4 என்ற படமும் ஹலோ வெளியான அதே நாளில் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்துக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம். திலீப்புக்கு ஜூலை 4ம் தேதி ரொம்ப ராசியான நாளாம். அதனால்தான் படத்திற்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டதாம். ஜூலை 4ம் தேதியே படத்தையும் ரிலீஸ் செய்ய விரும்பினாராம் திலீப். ஆனால் ஒரு நாள் லேட்டாக நேற்று ரிலீஸாகியுள்ளது ஜூலை 4. சென்னையில் 2 தியேட்டர்களில் ஜூலை 4 திரையிடப்பட்டுள்ளது.

அதேபோல பழம்பெரும் இயக்குநர் லால் ஜோஸின் அரபிக்கதா படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துபாயைக் கதைக்களமாக கொண்ட இப்படம் காமெடிப் பின்னணியில் உருவாகியுள்ளது.

இப்படி பெரும் படங்கள் மூன்று ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளால் சிவாஜி படத்திற்கு இருந்து வந்த விறுவிறுப்பு சற்று குறைந்துள்ளதாம். அதேபோல சிவாஜி திரையிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாம்.

சிவாஜி தற்போது கேரளாவில் 50 தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இதுவரை சிவாஜியைத் திரையிடாத ஊர்களுக்கு தற்போது சிவாஜியைத் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil