»   »  சிவாஜி கேஸ் பைசல்!

சிவாஜி கேஸ் பைசல்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படம் இடம் பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பைசல் செய்து விட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், சிவாஜி பட வில்லன் ஆதிகேசவன் அறையில் மன்மோகன் சிங், சோனியா காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. இது அந்த்த தலைவர்களை அவமரியாதை செய்வது போல உள்ளது. எனவே படத்தைத் தடை செய்ய வேண்டும், ரூ. 50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன், ஏன், உலகமே பார்த்து விட்டது. இப்போது இந்தக் காட்சியை மாற்றுவதால் என்ன ஆகி விடப் போகிறது என்று கேட்டார். பின்னர் வேறு பெஞ்சுக்கு வழக்கை மாற்றினார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் முகோபாத்யாயா, சுகுணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகினர்.

பின்னர் அவர்கள் வாதிடுகையில், 50 நாட்களைத் தாண்டி விட்டது சிவாஜி. இந்த நிலையில் இப்படத்தைத் தடை செய்வது சரியல்ல. தயாரிப்பாளரும், நடிகர் ரஜினிகாந்த்தும், இயக்குநர் ஷங்கரும், எந்தவித உள்நோக்கத்துடன் தலைவர்களின் படங்களை படத்தில் வைக்கவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

சில விநாடிகளே இந்த் காட்சி படத்தில் வருகிறது. ஏராளமான மக்கள் படத்தைப் பார்த்து விட்டனர். ஆகவே இந்த வழக்கு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் (பைசல்), எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் அறிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil