twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜியால் பெரும் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!

    By Staff
    |
    Rajini with Shreya
    சிவாஜி படத்தால் தங்களுக்கு ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 3 விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை ஏவி.எம். நிறுவனம் ஈடு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

    உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் திரையிடப்பட்ட படம் சிவாஜி. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது.

    சிவாஜி படத்தை தமிழகத்தில் திரையிட 8 விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினர். விநியோக உத்தரவாத அடிப்படையில் இப்படத்தை அவர்கள் வாங்கினர்.

    சிவாஜியால் பெரும்பாலான விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திருச்சி, செங்கல்பட்டு - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி பகுதி விநியோகஸ்தர்கள் மட்டும் ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி - நாமக்கல் விநியோகஸ்தர் சி.பிரகாஷ் (விகாஷ் பிக்சர்ஸ்) கூறுகையில், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் 33 தியேட்டர்களில் சிவாஜி படத்தைத் திரையிட ரூ. 5.5 கோடி பணம் கொடுத்தோம். ஆனால் இதுவரை ரூ. 4.30 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.

    எனது பகுதியில், சிவாஜி பெரும் வசூலை எட்டியுள்ளது. இது சாதனைதான். இருந்தாலும் ரூ. 1.20 கோடி அளவுக்கு எனக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏவி.எம். நிறுவனம் சரிக்கட்டும் என நம்பினேன். ஆனால் எங்களது குமுறலைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. இதனால் நான் பெரும் ஏமாற்றமடைந்துள்ளேன்.

    ஏதோ தீண்டத்தகாதவர்களைப் போல எங்களைப் பார்க்கிறது ஏவி.எம். நிறுவனம். இந்த செயலுக்காக எதிர்காலத்தில் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்போம். இப்போது ரஜினியைத்தான் நான் நம்பியுள்ளேன். அவர்தான் எங்களது பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரகாஷ்.

    செங்கல்பட்டு - பாண்டிச்சேரி பகுதிக்கான விநியோகஸ்தரும், இன்சைட் மீடியா பிலிம் நிறுவனத்தின் உரிமையாளருமான நாக் ரவி கூறுகையில், எனக்கு சிவாஜியால் ரூ. 1 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    பட விநியோக உரிமைக்ாக ரூ. 4.65 கோடி கொடுத்தேன். ஆனால் ரூ. 3.30 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. நஷ்டப்பணத்தை ஏவி.எம். நிறுவனம் திரும்பித் தரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனது நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

    நிலைமை சரி செய்ய ரஜினி நடவடிக்கை எடுப்பார் என இப்போது நம்புகிறேன் என்றார்.

    திருச்சி - தஞ்சை பகுதிக்கான விநியோகஸ்தான ரமேஷ்குமார் கூறுகையில், சிவாஜி பட விநியோகத்தால் எனக்கு ரூ. 1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினி படத்தை குறைந்த விலைக்குத்தான் விற்குமாறு கூறியிருந்தார். ஆனால் ஏவி.எம். நிறுவனம்தான் அதிக விலைக்கு வைத்து விற்றது. எனவே இது ஏவி.எம். நிறுவனத்தின் தவறுதான்.

    நஷ்டப்படும் விநியோகஸ்தர்கள் குறித்து ஏவி.எம். நிறுவனம் அக்றை காட்டவில்லை. அது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ரஜினி சார் குறித்து எனக்கு நன்கு தெரியும். விநியோகஸ்தர்களை மதிப்பவர் அவர். அவரது பதிலுக்காக நாங்கள் பொறுமையோடு உள்ளோம் என்றார்.

    இப்படி முக்கியமான மூன்று விநியோகஸ்தர்கள் நஷ்டக் கணக்கு காட்டி வரும் நிலையில், சென்னை நகர உரிமையைப் பெற்ற அபிராமி ராமநாதனும், ஜிவி பிலிம்ஸ் நிறுவனமும் ரூ. 7 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளன.

    நஷ்டமடைந்துள்ள 3 விநியோகஸ்தர்ளும் ரஜினியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். சிவாஜி படத்தின் வெள்ளி விழா 11ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக ரஜினியைப் பார்த்து பிரச்சினைக்கு முடிவு கட்ட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

    பெரும் வசூலை வாரியதாக சிவாஜி படம் குறித்து செய்திகள் வெளி வந்த நிலையில் கோடிக்கணக்கில் நஷ்டம் என மூன்று முக்கிய விநியோகஸ்தர்கள் குரல் எழுப்பியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாபா படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ரஜினி ஈடுகட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை அமைதிப்படுத்தினார். அதேபோல சிவாஜி பட விநியோகஸ்தர்களுக்கும் நிவாரணம் கிடைக்குமா, ஏவி.எம். இறங்கி வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    திருப்பதியில் ரஜினி:

    இதற்கிடையே, ரஜினிகாந்த் நேற்று திருப்பதிக்கு வந்து வெங்கடாசலபதியை தரிசித்தார்.

    புதுப் படத்தில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு திருப்பதிக்கு வருவது ரஜினியின் வழக்கம். விரைவில் ரஜினி நடிக்க, பாலச்சந்தர் தயாரிக்க, பி.வாசு இயக்கும் புதிய படம் தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து ஷங்கரின் ரோபோட் படத்திலும் நடிக்கவுள்ளார்.

    ரோபோட் குறித்த உறுதியான செய்தி வந்து விட்டது. பாலச்சந்தர் படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகவில்லை.

    இந்த நிலையில், ரஜினிகாந்த் திடீரென்று நேற்றிரவு 7 மணிக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் 8-15 மணியளவில் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர். அதற்குள் ரஜினிகாந்த் தரிசனம் செய்ய வந்ததை அறிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அவர் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

    போலீசாரும், கோவில் அதிகாரிகளும் அவரை பாதுகாப்பாக காருக்கு அழைத்து சென்று அனுப்பி வைத்தனர். ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து விட்டு ரஜினி கிளம்பினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X