»   »  ஷோபா... பசிக்குடும்பத்தின் தலைமகள் வேடத்திற்குச் செம்மையாய்ப் பொருந்தியவர்!

ஷோபா... பசிக்குடும்பத்தின் தலைமகள் வேடத்திற்குச் செம்மையாய்ப் பொருந்தியவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

வீடு, சந்தியாராகம் போன்ற படங்கள் திரைப்படப் பண்டிதர்களின் வாய்க்கு அவலாகக் கிடைக்கும்வரை 'பசி' என்ற படத்தைப் பற்றி இடைவிடாமல் குறிப்பிட்டார்கள். குடிசை என்ற படத்தைப் பற்றியும் சொல்வதுண்டு. பசி, குடிசை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, அப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அன்றைக்குக் கிட்டவேயில்லை. 'பசி' திரைப்படத்திற்காக அதன் நாயகி ஷோபாவுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு ஒரு திரைப்படம் விருது வென்றது என்றால் அது விருதை நோக்கிய படமாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். விருதுப் பிரிவுப் படங்கள் வேறாகவும் பொதுவணிகப் படங்கள் வேறாகவும் இருந்த காலம் அது. இன்றைக்கு அத்தகைய பாகுபாட்டைக் கற்பிப்பது கடினம்.

ஷோபாவுக்கு ஏறத்தாழ இருபது திரைப்படங்கள் சிறப்பாக அமைந்துவிட்டன. அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் பொருட்படுத்தத்தக்கது. அவற்றோடு பசி திரைப்படத்திற்குத் தேசிய விருது. பதினெட்டாம் அகவையில் தற்கொலை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் எந்த நடிகைக்கும் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு மதிப்பான திரைப்படப் பங்களிப்பு வாய்க்கவில்லை. ஷோபா நடித்தவற்றில் முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, சக்களத்தி, ஏணிப்படிகள், அழியாத கோலங்கள் போன்ற படங்களே தலைமையிடத்தைப் பெறும் என்று நினைத்திருந்தேன். அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பெறுகிறது 'பசி' திரைப்படம். ஷோபாவுக்குப் பசியில் அமைந்ததைப் போன்ற வேடப்பொருத்தம் இனி யார்க்கும் எப்போதும் அமையாது. அந்த வற்றலான உடலும் ஒடுக்கமான முகமும் பசிக்குடும்பத்தின் தலைமகள் வேடத்திற்குச் செம்மையான பொருத்தம். நடிப்பிலும் இயற்கையான மிளிர்வு. ஒரு வேடத்திற்கு வாய்க்கும் நடிப்புக் கலைஞர்தான் அதைச் சிறப்பாக்குகிறார்.

Shobhas classic Pasi

'பசி' திரைப்படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். அப்போதைய என் மனப்பதிவின்படி நல்ல படம்தான். தற்போது மீண்டும் பார்த்தேன். முன்பு பார்த்தபோது உணர்ந்திருந்தவற்றை அப்படியே பின்னுக்குத் தள்ளி என்னைத் தவிக்க வைத்து விட்டது. பசி துரை என்றே அழைக்கப்பட்ட அதன் இயக்குநர் அன்றைய சென்னை வாழ்க்கையின் தெளிவான வரைபடத்தைக் கொடுத்திருக்கிறார். அப்படத்தில் வழங்கிய சென்னைத் தமிழ் வழக்கு முதற்கொண்டு நடையுடைமெய்ப்பாடுகள்வரை அவ்வாழ்க்கையை ஊன்றிக் கண்ட பிறகே, ஒவ்வொன்றாய்க் குறிப்பெடுத்த பிறகே படமாக்கியிருக்கிறார். அதற்கான தடயங்கள் படம் முழுக்க இறைந்து கிடக்கின்றன. ஓர் இயக்குநர் உற்றுணராமல், கதைக் களத்தில் ஊறித் திளைக்காமல் பசி போன்ற படத்தை எடுக்கவே இயலாது. திரைப்படத்தில் காட்டப்படும் கூவக்கரை பச்சைப் பசேல் என்று புல்லடர்ந்த சிற்றாறாகக் காட்சியளிக்கிறது. அதில் ஓடும் தண்ணீரும் சற்றே செந்நிறமாய் மழை வெள்ளத்தின் அடையாளம் காட்டுகிறது. எங்கோ வெட்டவெளியில் வள்ளுவர் கோட்டத்துத் தேர் தெரிகிறது. சென்னை நகரத் தெருக்கள் யாவும் ஈரான் படங்களில் காட்டப்படும் அமைதியான தெருக்களைப்போல் ஆளரவமின்றிக் காட்சியளிக்கின்றன.

மிதியிழுனி (ரிக்சா) மிதித்து வாழ்கின்ற முனியன் குடிகாரன். அவனுக்குச் சீக்காளி மனைவி. ஏழு பிள்ளைகள். கூவக்கரையோரக் குடிசை. நாடோறும் ஏழு உரூபாய்க்கு வண்டியோட்டிப் பொருளீட்டுபவன். அதில் மூன்று உரூபாயை மனைவிக்குத் தருகிறான். அவள் அம்மூன்று உரூபாயில் பிள்ளைகளுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்ற வேண்டும். குடும்பத்தைப் பற்றிய அக்கறை சிறிதுமில்லாத முனியன் வயிற்றை நிரப்பிக்கொள்ளவும் சாராயம் குடிக்கவும் தயங்காதவன். "ஏன்யா... அரிசி பருப்பு விக்கிற விலைக்கு இப்பிடித் தெனைக்கும் மூனு ரூவா குடுத்தீன்னா எப்படிய்யா இத்தனி பேர்த்துக்கும் ஆக்கிப் போடறது ?" என்று அவன் மனைவி கேட்க, "அத்துக்கு என்ன இன்னாம்மே பண்ணச் சொல்றே... கெட்ச்ச ஏழு ருவாய்ல வண்டி வாடகை கீது, என் செலவு கீது, நான் ஒரமா இருந்தாத்தானே ஒங்களுக்கெல்லாம் ஒழைச்சுக் கொட்ட முடியும்...?" என்று கேட்கிறான். பிள்ளைகள் அறுவரில் கடைக்குட்டிக்குக் காலில்லை. கடைசிப் பையனும் நடமாட முடியாதவன். சிறுவர்களாயிருக்கும் ஆண்பிள்ளைகள் மூவரில் ஒருவன் திரையரங்கில் கள்ளச்சீட்டு விற்பவன். இன்னொருவன் சீட்டாட்டக் கூட்டத்துக்கு எடுபிடி வேலை செய்து எட்டணா ஈட்டுபவன். கடைசியாள் பள்ளி செல்லாமல் ஏய்த்துத் திரிபவன். எல்லார்க்கும் மூத்தவன் வீட்டுக்கு அடங்காமல் வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டவன். அந்தக் குடும்பத்துக்கு மூத்த பெண் குப்பம்மாள். ஷோபா ஏற்று நடித்த வேடம்.

Shobhas classic Pasi

குடும்பத் துயரத்தைப் போக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் குப்பம்மாள் தன் தோழி செல்லம்மாள் செய்கின்ற 'குப்பைத்தாள்' பொறுக்கும் வேலைக்குச் செல்ல விரும்புகிறாள். தினம் இரண்டு உரூபாய் கிடைக்கும். செல்லம்மாளிடம் தானும் வர விரும்புவதாகச் சொல்கிறாள். "அதுக்கு எங்க யூனியனாண்ட சந்தாக் கட்டணுமாம்மே... அத்த வுடு... நானே கட்டித்தாரேன்..." என்று உதவுகிறாள் செல்லம்மா. குப்பை பொறுக்கும் வேலையில் அயர்ச்சியாய் இருக்கையில் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்துகிறார்கள். அங்கே சுமையுந்து ஓட்டுநன் அரங்கன் வந்து செல்லம்மாளுக்கும் குப்பம்மாளுக்கும் தேநீர் வாங்கித் தருகிறான். அரங்கனிடம் செல்லம்மாளின் அண்ணன் துடையனாக (க்ளீனர்) இருப்பவன். தொடக்கத்தில் அரங்கன் வாங்கித் தரும் குளம்பியையும் சிற்றூணையும் வாங்க மறுக்கும் குப்பம்மாள், "சும்மா வாங்கிக்க..." என்று அவன் வற்புறுத்தியதும் வாங்கிக்கொள்கிறாள்.

குப்பம்மாள் குடிசைக்கு எதிரில் ஒருவன் ஒலிபெருக்கிக் கடை வைத்திருக்கிறான். தன் எண்ணக் கிடக்கையைப் பாடல்களாக ஒலிபரப்பினால் அவள் விளக்குமாறு காட்டுகிறாள். குப்பத்தில் இட்டிலி சுட்டு விற்கும் இராசாத்தியக்காவிற்கு முனியன் குடும்பத்தினர்மீது அக்கறை. முனியன் பொருட்பெண் ஒருத்திக்குத் தொடர்ந்து வண்டியோட்டுபவன். மானத்தோடு வாழ விரும்பும் அப்பெண்ணை அவளுடைய தாயே அத்தொழிலில் ஈடுபடுத்துகிறாள்.

Shobhas classic Pasi

கள்ளச்சாராயம் குடித்து வரும் முனியனைக் காவலர்கள் பிடித்துச் செல்கிறார்கள். அவனை வெளிக்கொணர ஓட்டுநன் அரங்கனின் உதவியை நாடுகிறாள் குப்பம்மா. அவ்வாறே அரங்கன் முனியனை வெளிக்கொணர்கிறான். அதனால் அரங்கன்மீது குப்பம்மாள் வைத்திருந்த நம்பிக்கை மலையளவு உயர்கிறது. முனியன் நோய்வாய்ப்பட்டிருக்கையில், "த்தா பாரும்மே... சைனா டீயும் பன்னும் துன்னுத் துன்னு நாக்கு செத்துப்போச்சிம்மே... எதுனாச்சும் காரமாத் துன்னுனும் போலக்கீது... அரைப்பிளேட்டு கோழிப் பிரியாணி வாங்கித் தரியாம்மே...?" என்று கேட்கிறான். தான் எப்படியாவது வாங்கி வருகிறேன் என்று செல்லும் குப்பம்மா உணவகத்தின் வாயிலில் பணம் போதாமல் நிற்கிறாள். அங்கே வரும் அரங்கன் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்று உண்பதற்கு வாங்கிக் கொடுக்கிறான். வீட்டுக்கும் வேண்டிய பொட்டணங்களைக் கட்டச் சொல்கிறான். குப்பம்மாளைத் தன் வண்டியில் வற்புறுத்தி ஏற்றிக்கொள்ளும் அரங்கன் அவளை நகர்க்கு வெளியே அழைத்துச் சென்றுவிடுகிறான். "யோவ்... சத்தியமா என்னைக் கைவிடமாட்டியே..." என்ற உறுதியைக் கேட்டு அவனைத் தனக்குள் ஏற்றுக்கொள்கிறாள் குப்பம்மாள். அரங்கனின் வண்டியில் குப்பம்மாள் சென்றது அவள் தாய்க்குச் செய்தியாய் வந்துவிடுகிறது. உடல் கலைந்த கோலத்தில் வீட்டார்க்குக் கறிச்சோற்றுப் பொட்டணங்களோடு வந்து சேரும் குப்பம்மாளை அவளுடைய தாய் எதிர்கொண்டு ஏசுகிறாள். "ஏதுடி... இதுக்குக் காசு ?" என்பது அவள் கேள்வி. இவை எவற்றையும் கண்டுகொள்ளாத முனியன் கறிச்சோற்றுப் பொட்டணத்தை அவிழ்த்துத் தின்கிறான்.

"அப்பன் கேட்டானேன்னு மக ஆசையாக் கொண்டாந்துருக்குறா... துன்றதை வுட்டுட்டு இன்னா ஏதுன்னு கேட்டுக்கினு கீறயே...," என்கிறான் முனியன். "உன் பொண்ணு எவன் கையிலயோ போயித்தான் ஒனக்குப் பிரியாணி வாங்கினு வந்துருக்காய்யா...," என்று தாயார் அரற்றும்போது முனியன் கடிகிறான். "சர்த்தான் நிறுத்தும்மே... ஊருல உலகத்துல நடக்காத பெரிய தப்பு நட்ந்து போச்சின்னு கூவுறியே... ராத்திரி ரிக்சால குந்துமே... வசதிக்கீறவனெல்லாம் எப்படிக் கொயுத்துப்போய் அலையறான்னு நான் காட்டறேன்... அப்படியே தப்புப் பண்ணிட்டா.. வவுத்துக்கில்லாம தானே பண்ணிட்டா... தா பார்ரி... உன்னப் படைச்சிருக்கானே... அவனே மானத்துக்கு மேலதான் வவுத்தையே வச்சினுகிறான்..." என்று அவளை அடக்குகிறான். மானம் பெரிதென்று வாழும் குப்பம்மாளின் தாய் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துவிடுகிறாள். குடும்பத்தின் தாய்ப்பொறுப்பு குப்பம்மாளுக்கு வந்துவிடுகிறது. தம்பிகள் தறுதலைகளாகின்றனர். முனியன் வண்டியோட்டும் விலைமகளிடம் சென்று அவள் செய்யும் வேலைக்குத் தானும் வரமுடியுமா என்று கேட்கிறாள். அவள் செய்யும் தொழிலைச் சொன்னதும் குப்பம்மாளுக்கு அதிர்ச்சியாகிறது. அரங்கன் ஏற்கெனவே திருமணமானவன் என்பதும் தெரிய வருகிறது. வயிற்றில் பிள்ளை உருவாகிறது. அரங்கனின் வீட்டிலும் செய்தி தெரிந்துவிடுகிறது. அரங்கனையே கட்டி வைப்பதற்காக ஊரே திரண்டு வரும்போது குப்பம்மாள் அவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. "கைவிட மாட்டேன்னு சொன்னியே... கண்ணாலமாச்சுன்னு சொன்னியா ? குப்பைப் பொறுக்கறவதானே நாலு பிரியாணிப் பொட்டலத்துக்கு வந்துடுவான்னு நினைச்சிட்டீல்ல... நான் காட்டிக்கொடுத்திருந்தா உன்னை வெட்டிப் போட்டிருப்பாங்க... உன் பொண்டாட்டிதானே தாலியறுப்பா.. அவ பாவம் எனக்கெதுக்கு ?" என்று அவனை ஒதுக்கிவிடுகிறாள்.

நிறைசூலியாய்த் தெருவில் வந்துகொண்டிருக்கும்போது குப்பம்மாளுக்கு வலி பிடிக்கிறது. பிள்ளைப் பேற்றின்போது அவள் இறந்துவிடுகிறாள். அவளைத் தேடி வரும் அரங்கனுக்கு அங்கே இறந்து கிடப்பது குப்பம்மாள் என்பது தெரிகிறது. குழந்தை அழுகிறது. "கோதைக்கு மானப்பசி, குழந்தைக்கோ வயிற்றுப்பசி, காமுகனுக்குக் காமப்பசி, காலத்திற்கோ மரணப்பசி," என்ற எழுத்தோட்டங்களோடு படம் முடிகிறது.

English summary
Poet Magudeswaran's analysis on Tamil cinema's Shobha starrer classic Durai's Pasi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X