»   »  விவேக்கை வாரிய சிம்பு!!

விவேக்கை வாரிய சிம்பு!!

Subscribe to Oneindia Tamil

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிலம்பரசன், விவேக்கை செமையாக வாரி விட்டுப் போனார்.

வடிவேலு 2வது முறையாக நாயகனாக நடித்துள்ள படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். சூப்பரான 3 கெட்டப்களில் வடிவேலு கலக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் ரஜினி, கமலைத் தவிர கிட்டத்தட்ட கோலிவுட்டின் முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

விஜய், சூர்யா, சிம்பு ஆகியோர்தான் நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக இருந்தனர். சேரன், பார்த்திபனும் வந்திருந்து சிறப்பித்தனர்.

படு வித்தியாசமாக, லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த கண் பார்வையாற்ற, காது கேட்காத சிறுவர், சிறுமியர் முன்னிலையில் ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது டச்சிங்காக இருந்தது. ரஜினிக்குப் பிறகு சிறார் வட்டாரத்தின் ஆதரவு வடிவேலுவுக்குத்தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல இது இருந்தது.

வடிவேலு, விஜய், சூர்யா, சிம்பு என தமிழ்த் திரையுலகின் தூண்களுக்கு மத்தியில் இருந்ததை அந்தக் குட்டிப் பட்டாளம் படு குஷியாகவே அனுபவித்தது.

விஜய்யின் பெயர் நிகழ்ச்சி அழைப்பிதழில் இல்லை. திடீரெனத்தான் அவர் வந்தார். வடிவேலுவுக்கு இதில் பரம சந்தோஷம். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேட்டுக் கொண்டதன் பேரில் விஜய் வந்தாராம்.

அதேபோல அதே தியேட்டர் வளாகத்தில் நடந்த பிரிவோம் சந்திப்போம் பட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்து விட்டு சேரனும், வடிவேலு நிகழ்ச்சிக்கு வந்து வடிவேலுவை வாயார வாழ்த்தி விட்டுப் போனார்.

விழாவில் சூர்யா ஆடியோவை வெளியிட சிம்பு பெற்றுக் கொண்டார்.

பேசியவர்களிலேயே முக்கியமான பேச்சு சிம்புவுடையதுதான். வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தி விட்டுப் போனார் சிம்பு.

சிம்பு பேசுகையில், இப்போதைய இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு இடையே எந்தவித போட்டி மனப்பான்மையும் இல்லை, நட்போடுதான் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விழாவாக இது உள்ளது. இங்கு ஒரே மேடையில் விஜய் இருக்கிறார். கடவுள் மாதிரி வந்திருக்கிறார். சூர்யா இருக்கிறார், நான் இருக்கிறேன்.

வடிவேலுவின் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பவர் வடிவேலு. ஆனால் சிலர் இருக்கிறார்கள். சக நடிகர்களையே கிண்டல் செய்து காமெடி என்ற பெயரில் மனதைப் புண்படுத்துகிறார்கள். ஆனால் வடிவேலு அப்படி அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பார் வடிவேலு என்றார் சிம்பு.

சிம்பு யாரை வாரினார் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ரஜினி நடித்த சிவாஜியில் விவேக், பேசிய விரல் வித்தை பஞ்ச் டயலாக், சிம்புவை மனதில் வைத்துத்தான் வைக்கப்பட்டது என்பது சிம்பு தரப்பு ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத்தான் நேற்றைய விழாவில் கொட்டி விட்டுப் போனார் சிம்பு.

நிகழ்ச்சியின் நாயகனான வடிவேலு பேசுகையில், கொஞ்சம் உயரப் போனாலே பீதி வரும் என்பார்கள். எனக்கோ பயம்தான் வருகிறது. கை, கால் எல்லாம் அப்படியே உதறுகிறது. கரண்டு கம்பியைப் பிடித்து விட்டது போல இருக்குது.

தப்பு பண்ணிட்டமோ, வேண்டாத வேலையோன்னு தெரியுது. சிவனேன்னு காமெடியனா மட்டும் இருந்திருக்காலமோ என்று கூடத் தோன்றுகிறது.

முதலில் ஒரு கிணற்றில் தள்ளி விட்டார்கள். அதில் கொஞ்சம் தண்ணி இருந்தது. இப்போது பாழுங்கிணற்றில் தள்ளி விட்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் ஏறி வா என்று வேறு கூறுகிறார்கள்.

இம்சை அரசனில் உக்கிரபுத்திரன் கேரக்டரில் நான் சிரிக்கவே கூடாது என்றார்கள். இந்தப் படத்திலோ உங்களுக்கு நீங்கதான் வில்லன் என்று கூறினார்கள். கஷ்டப்பட்டு பேசி நடிச்சிருக்கேன். படத்தை நீங்கள்லாம் பார்த்து ரசிக்கும் வரை எனக்கு திக் திக்குன்னு இருக்கும் என்றார் வடிவேலு.

பார்த்திபன் வழக்கம் போல நகைச்சுவையால் அனைவரையும் நையப்புடைத்தார். அவர் கூறுகையில், வெளியூர் எங்காவது சென்றால் வடிவேலுவை கூப்பிட்டுட்டு வரலையா என்று கேட்கிறார்கள். ஏதோ அவர் என் பொண்டாட்டி போலவும், அல்லது நான் அவருக்குப் பொண்டாட்டி போலவும் நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல என்று அவர் கூறியபோது, அரங்கை கையலைகள் களேபரப்படுத்தின.

விழாவில் ஸ்னேகாவும் பங்கேற்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil