»   »  விவேக் அறை எண் 304

விவேக் அறை எண் 304

Subscribe to Oneindia Tamil

வடிவேலுவுடன் இணைந்து இம்சை அரசன் 23ம் புலிகேசியைக் கொடுத்த இயக்குநர் சிம்புதேவன் அடுத்து விவேக்கை நாயகனயாகப் போட்டு அறை எண் 304 என்ற கிச்சுகிச்சு படத்தைக் கொடுக்கவுள்ளார்.

ஷங்கரிடம் அசோசியேட்டாக இருந்தவர் சிம்புதேவன். ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அவரது முதல் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி, தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது எனலாம்.

பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் குறித்து அமைதி காத்து வந்தார் சிம்புதேவன். தற்போது அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார்.

முதல் படத்தில் வடிவேலுவை வைத்து வேடிக்கை காட்டிய சிம்பு, இப்போது விவேக்கை வைத்து விளாச வருகிறார். இதுவும் காமெடிப் படம்தான். படத்தின் பெயர் அறை எண் 304.

கடந்த ஆண்டு சிம்புதேவனிடமும், இயக்குநர் ஷங்கரிடமும் தன்னை நாயகனாகப் போட்டு ஒரு படம் கொடுக்க வேண்டும் என விவேக் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள சொல்லி அடிப்பேன் படம் எப்போது வரும் என்று அப்படத்துடன் தொடர்புடைய யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஷங்கர் அண்ட் கோவிடம் இந்த கோரிக்கையை விடுத்தார் விவேக்.

இதையடுத்து சிம்புதேவன், விவேக்குக்காக ஒரு கதையை உருவாக்கி இப்போது இயக்குவற்கும் தயாராகி விட்டார். இம்சை அரசனை விட வயிறு வலிக்கச் செய்யும் அளவுக்கு படு காமெடியாக இருக்குமாம் அறை எண் 304.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இதுகுறித்து சிம்புதேவனிடம் கேட்டபோது, விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். அப்போது முழு விவரமும் வெளியிடப்படும்.

இதுவரை பார்த்திராத வித்தியாசமான விவேக்கை இப்படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தையும் ஷங்கரே தயாரிக்கிறார்.

கடந்த 17ம் தேதிதான் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் கல்லூரியின் படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்து செல்வன், காந்தி கிருஷ்ணனா ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து தொடங்கவுள்ளன. இவற்றைத் தொடர்ந்து சிம்புதேவன் படமும் தொடங்குகிறது.

சிவாஜியை முடித்து விட்ட ஷங்கர் ஒரே நேரத்தில் இந்த நான்கு படங்களையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil