»   »  'திமுக' டிவிக்குத் தாவிய 'அதிமுக' சிம்ரன்!

'திமுக' டிவிக்குத் தாவிய 'அதிமுக' சிம்ரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


அதிமுகவுக்காக போன வருடம் படு தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கை கூப்பி கேட்டுப் பிரசராம் மேற்கண்ட சிம்ரன், திமுக சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கலைஞர் டிவியில் புகுந்துள்ளார்.

கல்யாணமாகி, குழந்தை பெற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பிய சிம்ரன் தீவிரமாக பட வாய்ப்புகளைத் தேடி வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே சென்னைக்குத் திரும்பி விட்ட சிம்ரனுக்குப் படவாய்ப்புகள் வந்தபாடில்லை.

இந்த நிலையில்தான் அதிமுக தரப்பிலிருந்து பிரசாரம் செய்ய வருமாறு சிம்ரனுக்கு அழைப்பு வந்தது. நல்ல டப்பு தருவதாக கூறப்பட்டதால் அதிமுகவின் பிரசார சைரனாக மாறினார் சிம்ரன். பல்வேறு ஊர்களுக்கும் போய், தீவிரமாக பிரசாரம் செய்து, போடுங்கம்மா ஓட்டு, இரட்டை இலையைப் பார்த்து என்று கலக்கலாக சிம்ரன் பேசிப் பிரசாரம் செய்தார்.

சிம்ரன் நேரமோ என்னவோ அதிமுக படு தோல்வி அடைந்தது. சிம்ரனுக்கும் பேசப்பட்ட தொகை கைக்கு வந்த பாடில்லை. இதனால் அத்தோடு அதிமுக சகவாசத்தை துண்டித்துக் கொண்டார் சிம்ரன்.

இந்த நிலையில் புதிதாக திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவியில் நுழைந்துள்ளார் சிம்ரன்.

விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியைப் பார்த்து சன் டிவி காப்பி அடித்து நடத்திக் கொண்டிருக்கும் மஸ்தானா, மஸ்தானா நிகழ்ச்சிக்குப் போட்டியாக கலைஞர் டிவியில், மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக சிம்ரனும் சேர்ந்துள்ளார். அவர் தவிர டான்ஸ் மாஸ்டர் கலா, அவரது தங்கையும் டான்ஸ் மாஸ்டருமான பிருந்தாவும் மற்ற நடுவர்களாக இடம் பெற்றுள்ளனர்.

கலாதான் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்து நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் எட்டு ஜோடிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் புத்தம் புதுப் பொலிவுடன் சிம்ரன் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்துக் கூறுகையில், எனக்கும், டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் பிருந்தாவுக்கிடையே நிலவும் நல்லுறவால்தான் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்க ஒப்புக் கொண்டேன்.

சினிமாவில் இடம் கிடைக்காததால் சின்னத்திரைக்கு நான் வந்து விட்டதாக கூற முடியாது. பெரிய திரையிலும் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும். எனக்கான வாய்ப்பு கண்டிப்பாக வந்தே தீரும் என்கிறார் சிம்ரன்.

இதில் விசேஷம் என்னவென்றால், தனது தங்கை மோணல் தற்கொலை செய்து கொண்டபோது நடிகை மும்தாஜும், டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாவும்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் சிம்ரன் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் கலாவுக்கும், பிருந்தாவுக்கும் இடையில் அமர்ந்து மானாட மயிலாட நிகழ்ச்சியை பிரமாதமாக நடத்திக் கொண்டிருக்கிறார் சிம்ரன்.

Read more about: admk kalaingar tv simran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil