»   »  பாலிவுட்டுக்கு வரும் ஹாலிவுட் சோனி

பாலிவுட்டுக்கு வரும் ஹாலிவுட் சோனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

புகழ் பெற்ற ஹாலிவுட் நிறுவனமான சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இந்தியில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து அறிவிப்பை சோனி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மைக்கேல் லின்டன் மற்றும் ஈராஸ் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கிஷோர் லல்லா ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து, இந்திப் படங்களைத் தயாரிப்பார்கள்.

இப்படங்கள் சிலவற்றை அமெரிக்காவில் விநியோகிக்கும் பணியை சோனி பிக்சர்ஸ் மேற்கொள்ளும். உலகின் பிற பகுதிகளில் விநியோகப் பணியை ஈராஸ் பார்த்துக் கொள்ளும். இந்தியாவில் இரு நிறுவனங்களும் இணைந்து விநியோகம் செய்யும்.

இந்த ஒப்பந்தம் குறித்து லின்டன் கூறுகையில், இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியர்களையும் மனதில் கொண்டு இந்திப் படத் தயாரிப்பில் ஈடுபட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட திறமையான கலைஞர்களை வெளி உலகுக்கும் கொண்டு செல்ல முடியும்.

உலகளாவிய நிறுவனமாக சோனி பிக்சர்ஸ் இருப்பதால், இந்தியாவில் சர்வதேச சினிமாவையும், உலகின் பிற பகுதிகளில் இந்திய சினிமாவையும் பிரபலப்படுத்த முடியும் என்றார்.

லல்லா கூறுகையில், ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான நிறுவனமான சோனி பிக்சர்ஸுடன் கை கோர்த்திருப்பது பெருமை தருகிறது. இதன் மூலம் ஈராஸ் நிறுவனத்திற்கு சர்வதேச முத்திரை கிடைக்கும். உயர் தரத்திலான படங்களைத் தயாரிக்க முடியும் என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் சோனி நிறுவனம், தனது சர்வதேச சலனப்பட தயாரிப்பு பிரிவைத் தொடங்கியது. உலகளாவியத் திரைப்படத் தயாரிப்பை மனதில் கொண்டே இந்த நிறுவனத்தை சோனி தொடங்கியது.

Read more about: bollywood sony

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil