»   »  தென்னிந்தியாவா, பாலிவுட்டா?

தென்னிந்தியாவா, பாலிவுட்டா?

Subscribe to Oneindia Tamil
Click here for more images

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கப் போவது யார்?. இதுதான் இந்தியத் திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இந்தப் பிரச்சினையில் வெல்லப் போவது பாலிவுட்டா அல்லது இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும், அதிக அளவிலான சூப்பர் ஸ்டார்களைக் கொண்டிருக்கும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள அடுக்கடுக்காக வைத்திருக்கும் தென்னிந்திய திரையுலகமா என்பதுதான் இந்தியத் திரையுலகை வலம் வந்து கொண்டிருக்கும் முக்கியப் சமாச்சாரமாக மாறியுள்ளது.

கோவா திரைப்பட விழாவை சூப்பர் ரஜினிகாந்த்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகம் ஒரு குரலில், உரத்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளதாம்.

அதேசமயம், வடக்கத்திக்காரர்கள் முன்னாள் நாயகன் தர்மேந்திராதான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கொடி பிடித்து வருகின்றனராம். இரு தரப்பிலும் பலத்த ஆதரவு கிளம்பியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 2வது வாரத்தில் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாட்டாளர்கள், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தை வைத்து விழாவைத் தொடங்கத் திட்டமிட்டனர்.

ஆனால் கடைசி நேரத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பு ரஜினியைக் கூப்பிடலாம் என்று சொல்ல, இன்னொரு தரப்போ ரஜினி வேண்டாம், தர்மேந்திராவைக் கூப்பிடலாம் என கருத்து தெரிவித்துள்ளது.

இந்தி சினிமாக்காரர்களுக்கு இந்திய சினிமா என்றால் அது பாலிவுட் மட்டும்தான் என்ற நினைப்பு ரொம்ப காலமாகவே இருக்கிறது. தென்னிந்திய சினிமாக்காரர்களை (அவர்கள் ஜாம்பவான்களாகவே இருந்தாலும் கூட) அவர்கள் மதிப்பதே இல்லை.

இப்படித்தான் துபாயில் சமீபத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதை இந்திய திரைப்பட விழா என்று கூறுவதை விட இந்தி திரைப்பட விழா என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்திக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

விழாவில் இந்திப் படங்கள்தான் அதிகம் திரையிடப்பட்டன. தென்னிந்திய மொழிப் படங்கள் புறக்கணிக்கப்பட்டன. உப்புக்குச் சப்பாணி போல ஓரிரு படங்களை மட்டுமே திரையிட்டனர். மேலும் விருதுகளும் கூட இந்திக்காரர்களுக்கே அதிகம் வழங்கப்பட்டது.

இதைப் பார்த்து விழாவுக்குப் போயிருந்த மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி கொந்தளித்துப் போனார். மேடையிலேயே இந்தி சினிமாக்காரர்களை வாங்கு வாங்கென்று வாங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இந்த நிலையில் கோவை திரைப்பட விழாவிலும் தென்னிந்திய சினிமாவை புறக்கணிக்க இந்திக்காரர்கள் லாபி போட ஆரம்பித்திருப்பதால் இந்த முறை விட்டு விடக் கூடாது என்று ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் திரண்டு களத்தில் குதித்துள்ளது.

மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறைக்கு தென்னிந்திய திரையுலகினர் சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதில் தென்னிந்திய சினிமாவை ஒதுக்கி விட்டு, பாலிவுட்டை மட்டும் பிரதானப்படுத்துவது நியாயமல்ல. அதை இனியும் நாங்கள் அனுமதிக்க முடியாது. விழாவில் கலந்து கொள்ள தென்னிந்திய சினிமாவினருக்கு அதிக அளவிலான பாஸ்கள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனராம்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விழாவின் சிறப்பு விருந்தினராக அறிவிக்க வேண்டும். அவரையே விழாவைத் தொடங்கச் செய்ய வேண்டும் என்றும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனராம்.

இந்த விஷயத்தில் இதுவரை ரஜினி மெளனமாக இருக்கிறார். அவருக்கு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விருப்பம் இல்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தனது ஆதரவாளர்களையும் அமைதி காக்குமாறு கோரியுள்ளாராம் ரஜினி.

ஆனால் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, மோகன்பாபு, கன்னடத்து ரவிச்சந்திரன் ஆகிய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இந்த விவகாரத்தை தென்னிந்திய சினிமாவின் கெளரவப் பிரச்சினையாக கருதுகின்றனர். இதை விட்டு விட்டால், தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து கிள்ளுக் கீரையாகவே இந்திக்காரர்கள் நடத்துவார்கள் என்பது அவர்களது கருத்து.

எனவே ரஜினியைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்து விழாவைத் தொடங்க வேண்டும் என்று அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனராம். இதுதொடர்பாக அனைவரும் தனித் தனியாக கடிதமும் அனுப்பியுள்ளனராம்.

தொடக்க விழாவுக்கு ரஜினியைத்தான் சிறப்பு விருந்தினராக அறிவிக்க வேண்டும். நிறைவு விழாவுக்கு நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கூறியுள்ளனராம்.

சபாஷ், சரியான போட்டி!

Read more about: dharmendra, rajini, southern

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil