»   »  எஸ்.பி.பியின் சலசலப்பு பேச்சு!

எஸ்.பி.பியின் சலசலப்பு பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
SPB with Manirathnam
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் துப்பிய எச்சிலைத்தான் அவருக்குப் பின்னர் வந்த அத்தனை இசையமைப்பாளர்களும் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். பாடல் வரிகளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனமும், மோசர் பெயர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் வெள்ளித்திரை. பிருத்விராஜ், கோபிகா, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவை ஆடியோ வெளியீடாக மட்டும் நடத்தாமல், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழாவாகவும் பிரகாஷ் ராஜ் நடத்தினார்.

இதற்காக தாஜ்பால்ரூம் ஹோட்டலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தக் காலத்து டூரிங் தியேட்டர் போல விழா நடந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேடையில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன.

விழா மேடைக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி வந்த போது அவர்களுக்கு இளைய தலைமுறை இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் பொக்கே கொடுத்து வரவேற்றார். பின்னர் இருவருக்கும் ஒரே பொன்னாடையைப் போர்த்தினார்.

நிகழ்ச்சியில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசுகையில், அவர் கூறிய வார்த்தைகள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

எஸ்.பி.பி பேசுகையில், இன்று திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்கள் எல்லாம், விஸ்வநாதன் - ராமமூர்த்தி துப்பிய எச்சிலைத்தான் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அமைத்த ட்யூன்களைத்தான் இன்றைக்கு உள்ள இசையமைப்பாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் மொழிக்கும், வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இப்படிப்பட்ட இசையமைப்பாளர்களைப் பார்த்து ரொம்ப நாட்களாகிறது.

சிலர் என் இசைக்குப் பிறகுதான் பாடல் வரிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் எம்.எஸ்.வி. இசை மாதிரி இனி யாருக்கும் வராது என்றார் எஸ்.பி.பி.

இளையராஜாவை குறி வைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசியதாக கருதப்படுகிறது. எம்.எஸ்.வியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் எஸ்.பி.பி. இருப்பினும், இளையராஜாவால் மாபெரும் பின்னணிப் பாடகராக உருவெடுத்தவர். கிட்டத்தட்ட 32 வருடங்களாக இளையராஜாவின் இசையில் பாடி வந்துள்ளார் எஸ்.பி.பி. பல அற்புதமான பாடல்களை எஸ்.பி.பிக்குக் கொடுத்தவர் இளையராஜா.

உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத பல அற்புதப் பாடல்களை, ராஜாவின் இசையில் பாடியவர் எஸ்.பி.பி. அப்படி இருக்கையில் திடீரென இசைக்குப் பிறகுதான் பாடல்கள் என்று கூறுகிற இசையமைப்பாளர்கள் என்று இளையராஜாவை மறைமுகமாக சுட்டிக் காட்டி எஸ்.பி.பி. பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எம்.எஸ்.வி.யைப் புகழும் விதமாக பேசுவதாக நினைத்து அவர்கள் துப்பிய எச்சிலைத்தான் மற்றவர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் கூறியுள்ளது மற்ற இசையமைப்பாளர்களின் திறமையை இகழ்வது போல உள்ளதாக திரையுலகில் முனுமுனுப்பு எழுந்துள்ளது.

இதேபோல வைரமுத்துவும் பேசியபோது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை கண் கூடாக காண முடிந்தது. நிறையப் பேர் எழுந்து போக ஆரம்பித்தனர்.

வைரமுத்து பேசுகையில், எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் பாடல்களைத்தான் கேட்கிறேன்.

சங்கர் - ஜெய்கிஷன் பிரிந்தனர், பிரிந்த பின்னர் இணையவே இல்லை. கலைஞர் - எம்.ஜி.ஆர். பிரிந்தார்கள், மீண்டும் இணையவே இல்லை. இளையராஜா - வைரமுத்து இணைந்தார்கள், கலந்தார்கள், பிரிந்தார்கள், சேரவே இல்லை.

ஆனால் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் பிரிந்து, மீண்டும் இணைந்த பண்பாடு மிக்கவர்கள் என்றார்.

இந்த விழாவில் பேசிய யாருமே வெள்ளித்திரை படம் குறித்தோ அல்லது அதன் இசை குறித்தோ பேசவில்லை.

எம்.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில், எனக்கு மக்களின் அங்கீகாரம் தான் தேவை. அவர்கள் கொடுத்த அங்கீகாரம்தான் விருது. ஜனாதிபதி விருது எனக்குத் தேவையில்லை.

ஒரு பணக்கார பெண் தான் இறந்தால், எனது உடலுக்கு அருகே கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த தத்துவப் பாடல்களை ஒலிபரப்புங்கள் என்று கூறினாராம். அதேபோல அவர் இறந்தபோது போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா போன்ற பாடல்களை ஒலிபரப்பினராம். இதை விட எனக்கு என்ன கவுரவம் வேண்டும்.

நல்ல இசைக்கு வயதில்லை. தலைமுறை இடைவெளி கிடையாது. நான் தினசரி தூங்கப் போகும் முன்பு என்னுடன் பணியாற்றிய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள், எனக்கு ஆதரவாக இருந்தவர்களை நினைத்து நன்றிக் கூறிக் கொண்டுதான் தூங்குகிறேன்.

எனக்குப் பின்னால் இளையராஜா வந்தபோது நான் பொறாமைப்படவில்லை. என்னை விட பெரிய உயரத்திற்குப் போனபோது கூட எனக்குப் பொறாமை வரவில்லை. உண்மையில் அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நிகழ்ச்சியில் வெள்ளித்திரை படத்தின் ஒரிஜினலான உதயனுதாரம் படத்தின் நாயகனான மோகன்லாலும் கலந்து கொண்டார். ஆடியோவை விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து வெளியிட மோகன்லால், வைரமுத்து, இயக்குநர் மணிரத்தினம் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil