twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நூற்றுக்கு ஒன்றோ இரண்டோ கேள், அது வரி! #GST

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    தமிழகமெங்கும் உள்ள திரையரங்கங்கள் மாநில, நடுவணரசுகள் சுமத்தியுள்ள வரிகளுக்கெதிராகக் காலவரையறையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நூறு உரூபாய் நுழைவுச்சீட்டுக்குப் பொருள் சேவை வரியாய் இருபத்தெட்டு விழுக்காட்டினை நடுவணரசு கேட்கிறது. மாநில அரசின் கேளிக்கை வரியாக முப்பது விழுக்காடும் கூடுதல் வரி எட்டு விழுக்காடும் என மொத்தம் அறுபத்தாறு விழுக்காடு வரியாகச் செலுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

    நூறு உரூபாய்க்கு ஒரு படம் பார்க்க முடியாது. நூற்றறுபத்தாறு உரூபாய் நீட்டினால்தான் படம் பார்க்க முடியும். ஏற்கெனவே திரையரங்குகளுக்கு வருகின்ற மக்கள் திரள் காணாமல் போய்விட்டது. மக்களைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் இதுபோன்ற சில்லறைச் சிறு விற்பனை வரையிலும் அரசின் வரிகேட்கும் கரங்கள் துணிச்சலாய் நீள்வது அதிர்ச்சியாகவே உள்ளது.

    Spl article on GST

    நாட்டில் எத்தனையோ தொழில்கள் உள்ளன. எந்தத் தொழிலின் தோற்றுவாயின்போதும் அரசு பக்கத்தில்கூட வராது. அதன் மேன்மைக்கு எவ்வகையிலும் உதவாது. இப்படிக் கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் என்று அத்தொழிலில் ஈடுபடுவோர்கள் தம்மைப் பலிபீடத்தில் முழுமையாய் இருத்திக்கொண்டு வெற்றி பெறுவார்கள். அதுவரை அமைதி காக்கும் அரசுகள் அதன்பிறகு அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

    எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்கிறேன். திருச்செங்கோட்டில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கும் துளையுந்துத் தொழில் (போர்வெல்) செழித்து வளர்ந்திருக்கிறது. திருச்செங்கோடு, நாமக்கல் பகுதி வண்டிகள் நாடெங்கும் சென்று ஆழ்துளைக் கிணறுகளை அகழ்ந்து தரும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. சில மாநில அரசுகள்கூட அப்பகுதி வண்டிகளை ஒப்பந்தம் செய்து ஓட்டிச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

    அந்தத் தொழில் அங்கே எப்படித் தோன்றி இத்தகைய வளர்ச்சியை எட்டியது என்று நினைக்கிறீர்கள் ? அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரபு நாடுகளுக்குச் சென்றபோது பூமியைத் துளையிடும் தொழில்நுட்பத்தைக் கற்று வந்தார். அவர் பெயர் எனக்கு நினைவில்லை. அங்கே எண்ணெய் எடுப்பதைப்போல் நம்மூரில் தண்ணீரை எடுக்கலாமே என்பதுதான் அவருடைய எண்ணத்தில் தோன்றிய விதை. இங்கே கிணற்றை ஆழப்படுத்த முடியாமல் தவிப்பது அவர்க்குத் தெரியும். கிணறு அகழ்வது நூற்றைம்பது அடிகள்வரைதான் இயலும். அதற்கும் மேல் ஆளிறங்கிக் குழிபோட்டு வேட்டு வைத்து அகழ்வது இயலாது. நூறு நூற்றைம்பது அடிகளுக்குக் கீழே ஒரு கிணறு நீர்வற்றியது என்றால் அது பாழ்கிணறு. கைவிடப்படவேண்டிய கிணறு. அவ்வாறு வற்றிய கிணற்றால் வேளாண்மை கெட்டு வாடிய பெருந்தொகையினர் அப்பகுதியில் இருந்தனர்.

    அரபு நாட்டிலிருந்து நம் நாட்டுக்குத் திரும்பியவர் தம் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். நிலம் துளையிடுகின்ற உந்துகளை அரசோடு போராடி இறக்குமதி செய்தார். நீரின்றிக் காய்ந்த தம் தோட்டத்திலேயே ஆழ்குழாய்க் கிணறு அமைத்தார். அவ்வளவுதான். அவருடைய தோட்டம் நிலத்தடி நீர்வளத்தால் செழித்தது. அதைக்கண்டு அக்கம் பக்கத்துத் தோட்டக்காரர்கள் தமக்கும் ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தரக்கோரினர். பிறகு அதுவே அவர்க்குத் தொழிலாகிவிட்டது. அவரைப்போல் நூற்றுக் கணக்கானவர்கள் அத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். அப்பகுதி இளைஞர்கள் ஒன்று தறியோட்டச் செல்வார்கள். அன்றேல் வண்டியோட்டச் செல்வார்கள். வேலைவாய்ப்பு பெருகியது. இன்று அப்பகுதியில் நன்கு விரிந்து பரவிய தொழிலாகிவிட்டது. இப்போது அரசு பார்த்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். விற்பனையில் இருபத்தெட்டு விழுக்காடு கொடு என்றால் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், நீரின்றிக் காய்ந்தபோது மக்கள் எழுப்பிய கூக்குரல் அரசின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

    திரைத்தொழிலும் ஏறத்தாழ இப்படித்தான். தன்னைத்தானே வளர்த்துக்கொண்டு வளர்ந்த தொழில். ஆனால், இன்றைக்கு அத்தொழில் தனது வாழ்நாள் நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளுக்குப் பெண்களின் பெருங்கூட்டம் தவறாமல் வரும். பழைய திரையரங்குகளில் இன்றும் பார்க்கலாம், அங்கே பெண்கள் நுழைவுச் சீட்டு பெற தனி வழி அமைத்திருப்பார்கள். அதேபோல் அரங்குக்குள்ளேயும் பெண்கள் அமர்வதற்கென்று தனிப்பிரிவு இருக்கும். தொலைக்காட்சிகள் எப்போது தலையெடுக்கத் தொடங்கினவோ அன்று முதல் பெண்கள் திரையரங்குகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். பெண்கள் திரையரங்குகளைப் புறக்கணித்ததற்கு முதற்காரணம் தொலைக்காட்சி என்றால் இரண்டாம் காரணம் கட்டணம். நம் தாய்மார்கள் செல்வத்திலேயே திளைத்தபடியிருந்தாலும் பயன்மதிப்புக்கு ஏற்பத்தான் செலவிடுவார்கள். தொலைக்காட்சியிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்னும்போது திரையரங்குக்கு வந்து ஐந்நூறு உரூபாய் அள்ளி வீசிவிட்டுச் செல்ல மாட்டார்கள். நுழைவுச் சீட்டின் விலையைக் குறைக்க முடியாத திரையரங்குகள் பெண்கள் கூட்டத்தை இழந்தன. தமக்குரிய பார்வையாளர் திரளின் செம்பாதியை இழந்த திரையரங்குகள் எப்படியோ தட்டுத் தடுமாறி இளைஞர் கூட்டத்தை வைத்துக்கொண்டு செத்தொழியாத தொழிலாகத் தொடர்ந்து வந்தது.

    ஆண்டொன்றுக்கு வரும் ஐந்தாறு நட்சத்திரப் படங்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போது வருகின்ற படங்களுக்குப் புதிதாய் மீசை முளைத்த இளைஞர்களும் முப்பது அகவைக்குட்பட்டவர்களுமே இலக்குகள். அவர்களால்தாம் ஒரு காட்சிக்கு அறுபது தலைகளாவது தேறுகின்றன.

    அவர்களிடம் நூற்றறுபத்தாறு உரூபாயைக் கொடு என்றால் என்ன செய்வான் தெரியுமா? தன்னிடமுள்ள கைப்பேசியில் நூற்றைம்பது உரூபாய்க்கு இணையச்சேவையை உள்ளிட்டுக்கொண்டு காதணிபாடியை மாட்டியபடி ஊரிலேயே புளிய மரத்தடியில் அமர்ந்துவிடுவான். அதில் அவனுக்கு என்ன படம் வேண்டுமோ அதைப் பார்ப்பான். வரியால் சுமத்தப்படும் இந்த விலையேற்றம் திரையரங்கை நோக்கி வரும் மீதமுள்ள சிறு திரளையும் விரட்டியடித்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    திரையரங்குகள்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளனதாம். அவற்றைத் தீர்ப்பதற்கு இன்னொரு வாய்ப்பில் பேசலாம். அவை உயிரோடு இருந்தால்தான் அவற்றைக் குற்றமாகவே கூற முடியும். மேம்பாடு என்ற பெயரில் இப்போதுதான் பன்மாடக் கடையகங்களில் திரைக்கூடங்களை நிறுவியிருக்கிறார்கள். மாநகரங்களில் பன்மாடத் திரையகங்களைக் கட்டியிருக்கிறார்கள். அக்கட்டடங்களுக்கான வங்கி வட்டியைக் கட்ட வேண்டுமானால் தொந்தரவு இல்லாமல் தொழில் நடக்க வேண்டும்.

    நூற்றுக்கு ஒன்றோ இரண்டோ கேள், அது வரி. நூற்றுக்குப் பத்தோ பதினைந்தோ கேட்டால் அது வட்டி. நூற்றுக்கு இருபதோ இருபத்தைந்தோ கேட்டால் அது ஈவு. நூற்றுக்கு ஐம்பது வரைக்கும் கேட்டால் அது பங்கு. நூற்றுக்கு ஐம்பதுக்கும் மேல் கேட்டால் அது எனதில்லை, உனது!

    English summary
    Poet Magudeswaran's special article on GST imposition on Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X