»   »  கமல், ரஜினி ஆப்சென்ட்?

கமல், ரஜினி ஆப்சென்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அக்டோபர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள நட்சத்திரக் கலை நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், அல்டிமேட் ஸ்டார் அஜீத் ஆகியோர் கலந்து கொள்வார்களா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது.

தமிழ் சினிமாவின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான அளவில் புதிய கட்டடத்தைக் கட்டவும் நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இவை இரண்டையும் இணைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதில் வசூலாகும் பணத்தைக் கொண்டு நடிகர் சங்க கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல முன்னணி நடிகர், நடிகைகள் முன்வரவில்லை. இதனால் கடுப்பான நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், வராதவர்களுக்கு ரெட் கார்ட் போடப்படும் என எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கைக்கு பலன் இருக்கும் என எதிர்பார்த்த சரத்துக்கு, நடிகர் நடிகையர் மத்தியில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிர்ந்தார்.

இதையடுத்து ஜனவரி மாதத்திற்கு கலை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இப்போதாவது அனைவரும் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜனவரிக்கு விழா தள்ளிப் போயுள்ளது.

இருப்பினும் இந்த கலை நிகழ்ச்சியில் கமல், ரஜினி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள் தவிர அஜீத் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகளும் கூட பங்கேற்பதில் ஆர்வம் காட்டவில்லையாம்.

அடிக்கடி கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் எங்களது ஷெட்யூலை எப்படி மாற்றிக் கொண்டிருக்க முடியும் என கலைஞர்கள் எண்ணுகிறார்களாம். ரஜினி, கமலே அழைப்பை ஏற்க முடியாது என்ற முடிவை எடுத்துள்ளதால் மற்ற கலைஞர்களும் அவர்களைப் பின்பற்றி டேக்கா கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக அஜீத், நிச்சயம் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டாராம். அவர் சினிமா விழாக்களில் பொதுவாகவே கலந்து கொள்வதில்லை. கடந்த முறை விஜயகாந்த் தலைவராக இருந்தபோது, வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம்.

இப்படி முன்னணி கலைஞர்கள் ஜகா வாங்க தீர்மானித்திருப்பதால் என்ன பண்ணலாம் என்று சரத்குமார் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil