»   »  மறுபடியும் மணல் கயிறு!

மறுபடியும் மணல் கயிறு!

Subscribe to Oneindia Tamil
Asvin Sekar with Archana
எஸ்.வி.சேகரின் முத்திரைப் படங்களில் ஒன்றான மணல் கயிறின் 2ம் பாகத்தை எடுக்க எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார். சேகரின் வாரிசான அஸ்வின் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் நாயகனாக அறிமுகமான படம் வேகம். படம் பெரிய அளவில் போகவில்லை. இருந்தாலும் அஸ்வினின் வருகையை அப்படம் வெளிக்காட்டும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் தனது மகனுக்கு 2வது படத்தை வெற்றிப் படமாக கொடுக்க எஸ்.வி.சேகர் தீர்மானித்துள்ளார். இதற்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள படம்தான் மணல் கயிறு.

சேகருக்கு பெரிய அளவில் வெற்றி வாங்கிக் கொடுத்த படம் மணல் கயிறு. இன்றும் கூட ரசித்துப் பார்க்கும் வகையில் ரசனையோடு எடுக்கப்பட்ட படம்தான் மணல் கயிறு.

விசுவின் இயக்கத்தில், கலகலப்பு, சென்டிமென்ட், நகைச்சுவை என பல கலவைகளுடன் 80களில் வந்த மணல் கயிறு படத்தின் 2ம் பாகத்தை தனது மகனுக்காக எடுக்கத் திட்டமிட்டுள்ளார் சேகர்.

தனக்கு மணல் கயிறு ஏற்றத்தைக் கொடுத்தது போல அஸ்வினுக்கும் பிரேக் ஏற்படுத்தித் தரும் என்பது சேகரின் நம்பிக்கை.

2ம் பாகத்தை எடுப்பது தொடர்பாக புத்தம் புதுக் கதையுடன் விசுவை அணுகியுள்ளார் சேகர். இருவரும் சேர்ந்து அஸ்வினுக்கேற்றார் போல கதையை உருவாக்குவது குறித்து விவாதித்துள்ளனர்.

மேலும், மணல் கயிறு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சாந்தி கிருஷ்ணாவின் (இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி) கால்ஷீட்டையும் 2ம் பாகத்திற்காக கேட்டுள்ளாராம் சேகர்.

8 கண்டிஷன்களுடன் பெண்ணைத் தேடும் மாப்பிள்ளையாக எஸ்.வி.சேகர் மணல் கயிறு படத்தில் நடித்தார். 2ம் பாகத்தில் கண்டிஷன் போடுபவராக ஹீரோயினை மாற்றியுள்ளனர்.

இப்படத்தில் அஸ்வினுக்கேற்ற ஜோடியைத் தேடி வருகிறார்கள். நாயகியின் தந்தையாக எஸ்.வி.சேகர் நடிக்கிறார்.

இதுகுறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்டபோது, மணல் கயிறு-2 என்ற பெயரில் எனது மகன் அஸ்வினை வைத்து படம் எடுக்கவுள்ளது உண்மைதான். விசு சாரிடமும், சாந்தி கிருஷ்ணாவிடமும் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன், அவர்களும் சம்மதித்துள்ளனர்.

இப்படத்தில் நான் நாயகியின் தந்தையாக வரவுள்ளேன். பிற கலைஞர்கள் குறித்து விவாதம் நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் முழுத் தகவல்களும் தரப்படும்.

படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மணல் கயிறு படத்தில் நாயகன்தான் 8 கண்டிஷன்கள் போடுவான். ஆனால் 2ம் பாகத்தில் நாயகி 8 கண்டிஷன்களைப் போடுகிறாள். அதை நாயகன் எப்படி சமாளித்து மணக்கிறான் என்பதுதான் மீதிக் கதை. மற்றவை வெள்ளித்திரையில் என்றார் சேகர்.

கேட்கவே இன்டரஸ்டிங்கா இருக்கே!

Read more about: sv sheker

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil