»   »  மதுரை தங்கம் தியேட்டர்

மதுரை தங்கம் தியேட்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் என பெருமையாக கூறப்பட்ட மதுரை தங்கம் தியேட்டர் இப்போது பாழடைந்து போய், சந்திரமுகி பங்களா போல சிதிலமடைந்து கிடக்கிறது.


மதுரை மக்கள் சினிமாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து சீராட்டுவதில் நம்பர் ஒன் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களுக்கும் இங்கு ரசிகர் மன்றம் தவறாமல் இருக்கும். அந்த அளவுக்கு சினிமாவுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கும் ஊர் மதுரை.

இதற்கு முக்கிய காரணம், சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கிடம் இல்லாத ஊர் மதுரை. கோவில் மாநகரம் என்ற பெருமை தவிர சினிமா ரசிகர்களின் தலைநகராகவும் மதுரையம்பதி திகழ்கிறது.

அப்படியாப்பட்ட மதுரை நகரில் பல தியேட்டர்கள். அதில் ஒன்றுதான் தங்கம் தியேட்டர். மதுரை நகரின் மையப் பகுதியான டவுன் ஹால் சாலைக்கு அருகே ஒரு குட்டிச் சந்தில் இருக்கிறது தங்கம் தியேட்டர்.

10 ஆயிரம் ரசிகர்களை ஒரே நேரத்தில் உள்ளே அடைத்து பயாஸ்கோப் காட்டி வந்தனர் ஒரு காலத்தில். மிகப் பெரிய தியேட்டரான தங்கம் இப்போது படம் காட்டாமல் பாழடைந்து போய்க் கிடக்கிறது. ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் இப்போது தியேட்டரை அடை காத்து வருகிறார்.

1952ம் ஆண்டு இந்த பழம்பெரும் தியேட்டர் தனது திரையோட்டத்தை பராசக்தி படம் மூலம் தொடங்கியது. அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த பல படங்கள் இங்கு திரையிடப்பட்டு மதுரை மக்களுக்கு விருந்து படைத்தன.

மதுரை மக்களுக்கு மட்டுமல்லாது சுத்துப்பட்டு மாவட்ட மக்களுக்கும் சொர்க்க பூமியாக திகழ்ந்தது தங்கம். இந்த தியேட்டரை உருவாக்கியவர் பிச்சைமுத்துக் கோனார் என்பவர். உலகின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமை படைத்த அமெரிக்காவின் பிளான்விடா தியேட்டரைப் போல மதுரையில் உருவாக்க நினைத்த அவர் தனது விருதுநகர் நண்பருடன் இணைந்து இந்த தங்கத்தை வார்த்தார்.

கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில், 2563 இருக்கைகளுடன் தங்கம் உருவானது. முதல் படம் பராசக்தி. தினசரி 4 காட்சிகளாக ஆரம்பித்த இப்படம் 4 மாதங்கள் ஓடியதாம்.

அப்போதெல்லாம் டிக்கெட் கட்டணம் குறைச்சல்தான். அதாவது நாலரை அணாதானாம். அதிகபட்ச டிக்கெட் கட்டணமே இரண்டரை ரூபாய்தான். பெயர் மட்டுமல்லாது, டிக்கெட்டும் கூட தங்கம் மாதிரி பளபளவென இருக்குமாம்.

பராசக்தியைத் தொடர்ந்து பல படங்கள் அங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியுள்ளதாம். சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள் அந்தக்கால மதுரை பெருசுகள்.

இப்படிப்பட்ட அருமையான கலையரங்கைக் கொடுத்த பிச்சைமுத்துக் கோனார் மறைவுக்குப் பின்னர் தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்பதில் அவரது வாரிசுகளிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தியேட்டர் மூடப்பட்டு கோர்ட்டுக்கு வழக்கு சென்றது.

1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் தங்கம் தனது திரையோட்டத்தை முடித்துக் கொண்டது. கடைசியாக இங்கு திரையிடப்பட்ட படம் ஈஸ்வர்.

இப்போது பாழைடந்து போய், சந்திரமுகி படத்தில் வரும் பங்களா போல பரிதாபமாக காட்சி தருகிறாள் தங்கம். கிழிந்து போன திரைச் சீலைகள், உடைந்து போன இருக்கைகள், சிதைந்து போன மேற்கூரைகள், படமெடுக்கும் பாம்புகள், திகில் கொடுக்கும் தேள்கள் என கொடூர கோலத்தில் இருக்கிறது தங்கம்.

இனிமேல் இந்தத் தியேட்டருக்கு உயிர் கொடுப்பது என்பது மிகப் பெரிய காரியம். காரணம், சில கோடிகளை செலவிட்டால்தான் படத்தை ஓட்ட முடியும். ஆனால் அது முடியாது என்பதால் தீர்ப்பு வந்ததும் தியேட்டரை அப்படியே தகர்த்து விட்டு பெரிய வணிக வளாகம் அல்லது ஹோட்டல் கட்டும் திட்டம் கோனாரின் வாரிசுதாரர்களிடம் இருக்கிறதாம்.

தமிழ்த் திரையலுக சரித்திரத்தில் படங்கள் மட்டுமல்லாமல், இந்தத் தியேட்டருக்கும் ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு கலைச் சின்னம் சீரழிந்து, சின்னாபின்னமாகிப் போனது மதுரைக்காரர்களுக்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்களுக்கும் பேரிழப்புதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil