»   »  முதல்வரிடம் தங்கர்பச்சான் மனு

முதல்வரிடம் தங்கர்பச்சான் மனு

Subscribe to Oneindia Tamil
Sathyaraj with Thangar Bachan
தமிழகம் முழுவதும் திரைப்படங்களை வெளியிடுவதில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சீராக்கி, நல்ல படங்கள் மக்களை சென்றடைய உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு ஒளி ஓவியர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து 3 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனுவை தங்கர் கொடுத்துள்ளார். தங்கரின் கோரிக்கை மனுவில் உள்ள அம்சங்கள்.

ஒரு படத்தை ஒரு பகுதியில் திரையிட பல பிரிண்டுகளைப் போடும் நிலை தற்போது உள்ளது. விரைவில் பணம் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ஒரே ஊரில் பல தியேட்டர்களில் ஒரே படத்தைத் திரையிடுகிறார்கள். இதனால் சிறு படங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. எனவே ஒரு ஊருக்கு ஒரு பிரிண்ட் என்ற முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2வதாக, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் போல நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் அரசே அரங்கங்களைக் கட்ட வேண்டும். இதன் மூலம் சிறு படத் தயாரிப்பாளர்கள் பலன் அடைவார்கள்.

3வதாக வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில ஊர்களில் அரசு கலையரங்கங்கள் உள்ளன. இவற்றை பல்வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் திரைப்படங்களும் கூட திரையிடப்படுகின்றன. இதை முறைப்படுத்தி ஆண்டுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் படங்களைத் திரையிடலாம் என அரசு கட்டுப்பாட்ைட நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தங்கரின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை திரையிட நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையில் உள்ள சில மல்ட்டிபிளக்ஸ் வளாகங்களில் இப்படத்துக்கு இடமே இல்லை என்று கூறி நிராகரித்து விட்டனர். இதன் காரணமாக படம் சிறப்பாக வந்திருந்தும், தமிழ் மக்களுக்கான திரைப்படமாக இது அமைந்தும், தமிழக மக்களை சென்றடைய வழியில்லாமல் தவித்துப் போனார் தங்கர்.

தமிழ் படத்திற்கு தமிழகத்தில் இடம் இல்லையா என்று அவர் கொதித்தும் போனார். இதை அறிந்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் தமிழகம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 100 திரையரங்கங்களில் ஒரு காட்சியை இலவசமாக மக்களுக்காக திரையிட்டது.

அதற்கு முன்பாகவே படம் குறித்த நல்ல விமர்சனங்கள் வந்ததாலும், மக்கள் படத்தை நேரில் பார்த்து அதன் கருத்தாழத்தில் கலங்கிப் போனதாலும், ஒன்பது ரூபாய் நோட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து பச்சான் கூறுகையில், நமது முதல்வரும் திரைத் துறையைச் சேர்ந்தவர்தான். எனவே எனது கோரிக்கையின் ஆழத்தை அவர் அறிவார். நிச்சயம் தீர்வு காண முயற்சிப்பதாக அவர் உறுதியளித்தார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil