For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் பெண் குறித்து ஜெயராம் திமிர் பேச்சு-தங்கர்பச்சான் கண்டனம்

  By Staff
  |
  தமிழ் பெண்களை, கறுத்து-தடித்த எருமை என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயராம். இதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ். இந்தப் படத்தில் வேலைக்காரியை வளைக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.

  இந்தப் படம் குறித்து மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் பேட்டி அளித்திருந்தார் ஜெயராம்.

  பேட்டியில், படத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று பேட்டி கண்டவர் கேள்வி எழுப்பினார்.

  அதற்கு பதில் அளித்த ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?' என்று பதில் கூறியிருக்கிறார்.

  ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை 'பாண்டி' என்று கூறி இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. சமயத்தில் தமிழ்ப் 'பட்டி' என்றும் சில பாத்திரங்களை விளிப்பது போல காட்சிகள் வருகின்றன.

  குறிப்பாக மோகன்லால் படங்களில் இத்தகைய காட்சிகள் அதிகம். தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

  கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம் பெற்றுகின்றன.

  இது, தமிழர்களின் மனதில் கடும் வலியை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் பெண்களை, கறுத்து, தடித்த எருமை என்று ஜெயராம் கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இதனால் ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

  மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன, அவர்கள் பிள்ளைகள் படிப்பது கூட தலைநகர் சென்னையில்தான்.

  இந் நிலையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த ஜெயராமுக்கு, டைரக்டர் தங்கர்பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி 'தட்ஸ்தமிழ்' சார்பி்ல் தங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், "ஒரு தமிழன் அவமானப்பட்டால் நாமெல்லாம் என்ன செய்கிறோம்... வாய் மூடி மௌனமாகப் பார்க்கிறோம்... அல்லது அவன்தானே அவமானப்பட்டான் நமக்கென்ன என்று நம் வேலையைப் பார்க்கிறோம்.

  தமிழனின் இந்த மனநிலை தெரிந்ததால்தான் ஜெயராம், மோகன்லால் போன்றவர்கள் இஷ்டத்துக்கும் பேசுகிறார்கள். குறிப்பாக ஜெயராமின் இந்த அப்பட்டமான தாக்குதல் அதிர்ச்சியாக உள்ளது.

  ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் நமது தமிழ் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்றும் எருமை என்றும் இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்- திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.

  நாம்தான் இப்படி கண்டனம் என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் சக தமிழனே சினிமாக்காரனுக்கு வால் பிடித்துக் கொண்டுதான் அலைகிறான்..

  கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சரியான விஷயங்களுக்கு, கலைஞர்களுக்கு மட்டும் ஆதரவு தந்தால் போதும்.

  எதற்கெடுத்தாலும் ரசிகன் என்ற பெயரில் கோஷம் போடுவது, முன்னணி நடிகனுக்கு கால்பிடிப்பதெல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும்.. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், யார் இப்படி நல்லதைச் சொல்கிறார்களோ, அவர்களைத்தான் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார்கள், ஒழிக்கப் பார்க்கிறார்கள் இந்த ரசிகர்கள்..." என்றார்.

  வழக்கறிஞர்கள் சமூக நலப்பேரவை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்

  தமிழக பாஜகவும் ஜெயராமின் திமிர்ப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் பெண்களை இழிவு படுத்திய ஜெயராமிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

  தமிழ் சினிமா பெண்களும் ஜெயராமிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

  தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிப் பேசி முன்பு குஷ்பு அசிங்கப்படுத்தினார். இப்போது தமிழ்ப் பெண்களை எருமை மாடு என்று பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் ஜெயராம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X