»   »  தங்கர் படத்தில் அமிதாப்!

தங்கர் படத்தில் அமிதாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Amithab Bachan with Hema Malini
வடக்கையும், தெற்கையும் இணைக்கப் போகும் அருமையான கதையுடன் அமிதாப் பச்சன், சத்யராஜை வைத்து அற்புதமான ஒரு படத்தைக் கொடுக்கப் போகிறார் ஒளி ஓவியர் தங்கர்பச்சான்.

மறைந்து போன அல்லது மறக்கப்பட்டு வரும் தமிழர் வாழ்வியல் தத்துவங்களை, பண்பாடுகளை, கலாச்சாரங்களை, உணர்வுகளை மையமாக வைத்துப் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் தரமான இயக்குநர் தங்கர் பச்சான்.

பாரதிராஜாவுக்குப் பிறகு கிராமத்து வாழ்வியல் அழகை, தனது படங்களில் மிக மிக தத்ரூபமாக காட்டி வருபவர் தங்கர். சமீபத்தில் வெளியான அவரது ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தைப் பார்த்த அனைவருக்குமே கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க இன்னும் கூட நேரம் போதவில்லை.

தற்போது அடுத்த படத்துக்கு ஆயத்தமாகி விட்டார் தங்கர். இந்த முறை நட்பை கையில் எடுக்கிறார் தங்கர். அதுவும், வட இந்தியர் ஒருவருக்கும், தென்னிந்தியர் ஒருவருக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான நட்பு.

இதுவும் கூட தங்கர் எழுதிய நாவலின் திரை வடிவம்தான். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், புரட்சித் தமிழன் சத்யராஜும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சத்யராஜின் ஒப்புதலை ஏற்கனவே வாங்கி விட்டார் தங்கர். சமீபத்தில் அமிதாப்பின் ஒப்புதலும் கிடைத்து விட்டதாம். தனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை சமீபத்தில் மும்பையில் அமிதாப் பச்சனுக்காக சிறப்பு காட்சியாக போட்டுக் காட்டினார் தங்கர்.

படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன அமிதாப், தங்கரைப் பாராட்டினார். மேலும், அவரது அடுத்த படத்தில் நடிக்கவும் சம்மதம் கொடுத்து விட்டாராம்.

அமிதாப் பச்சன் தமிழ் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இது தங்கருக்கு மட்டுமல்லாது, தமிழ் சினிமாவுக்கும் கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிப்பதாக இருந்தவர் அமிதாப் பச்சன். ஆனால் அப்போது அவருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து அவருக்குப் பதில் ரகுவரன் நடித்தார்.

இந்த நிலையில் ரஜினிக்குக் கிடைக்காத பாக்கியம் இப்போது தங்கருக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் புதிய படத்தில் அமிதாப்புக்கும், சத்யராஜுக்கும் சம அளவிலான கேரக்டர்களாம். இந்தப் படம் குறித்து தங்கரிடம் கேட்டபோது, இப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உள்ளன. இந்தப் படத்தின் கதையும் எனது சிறுகதைகளில் ஒன்றுதான்.

விரைவில் படத்தில் நடிக்கவுள்ள கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை வெளியிடுவேன் என்றார் தங்கர்.

இப்படத்தைத் தமிழில்தான் எடுக்கவுள்ளார் தங்கர். பின்னர் இந்தியில் டப் செய்து வெளியிடும் எண்ணம் உள்ளதாம்.

பிரமீட் சாய்மீரா நிறுவனம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக செயல்படக் கூடும் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil