»   »  'சன்'னுடன் கை குலுக்கும் தாணு!

'சன்'னுடன் கை குலுக்கும் தாணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil


நீண்ட காலமாக சன் டிவியுடன் ஊடலில் இருந்த கலைப்புலி தாணு, தற்போது அந்த டிவியுடன் கை குலுக்கியுள்ளார். கோலிவுட்டில் பெரிய நியூஸே தற்போது இதுதான்.

ஒரு காலத்தில் சன் டிவியின் கலாநிதி மாறனுடன் நல்ல நட்பைக் கொண்டிருந்தார் கலைப்புலி தாணு. ஆளவந்தான் வரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் இடையே இருந்த நட்பு கசந்தது.

அதை விட முக்கியமாக வைகோவின் தளபதியாகவும், மதிமுகவின் முக்கியப் பிரமுகராகவும் கலைப்புலி தாணு மாறிப் போனதால், சன் டிவிக்கும், தாணுவுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து தாணு தனது படங்களை சன் டிவிக்கு விற்கவில்லை, சன் டிவியும் தாணுவைப் புறக்கணித்தது.

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெளியான சச்சின், சென்னை காதல், திருமகன் ஆகிய படங்களிலிருந்து ஒரு காட்சியைக் கூட சன் டிவி காட்டாமல் முற்றிலும் புறக்கணித்தது. இந்தப் படங்களை ஜெயா டிவி வாங்கியதே இதற்கு முக்கியக் காரணம்.

இந்த நிலையில் சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு கசந்தது. கலைஞர் டிவி புதிதாக பிறந்துள்ளது. இதையடுதத்து சன் டிவிக்கும், தாணுவுக்கும் இடையிலான நட்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள கந்தசாமி படத்தின் தொடக்க விழாவை நேரடியாக இன்று ஒளிபரப்புகிறது சன் டிவி. இன்று மாலை 6.30 மணிக்கு தேவி பாரடைஸ் தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அரசியலில் மட்டுமல்ல, திரையுலகிலும் கூட நிரந்தர எதிரிகளும் கிடையாது, நிரந்தர நண்பர்களும் கிடையாது என்பதை சன், தாணு கூட்டணி நிரூபித்துள்ளதாக திரையுலகைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

அர்த்தமுள்ள வார்த்தைதான்!

Read more about: sun tv thanu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil