கத்தி படத்தில் விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தாத்தா... சதீஷ் சுவாரசிய தகவல்
சென்னை: தற்சமயம் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்தப் படம் வரும் 2023-ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகிறது.
இந்நிலையில் அவருடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள நடிகர் சதீஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறியிருக்கிறார்.

வாரிசு
சமீப காலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தெலுங்கு இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை எடுக்கிறார்கள். விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம், தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம் ஆகியவை தெலுங்கு இயக்குநர்களால் இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம். தற்சமயம் பான் இந்தியத் திரைப்படங்கள் பிரபலமாகி வருவதால் இந்தக் கூட்டணிகள் உருவாகிறது என்று கூறப்படுகிறது.

பான் இந்தியா
ஒரு தெலுங்கு இயக்குநரும் தமிழ் நடிகரும் சேரும் பொழுது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அந்தப் படத்தை பார்ப்பார்கள். இதைத் தவிர்த்து கர்நாடகாவிலும், கேரளாவிலும் அடிப்படையாகவே தமிழ்ப் படங்கள் பார்ப்பார்கள் என்பதால் மொத்த தென்னிந்தியாவில் உள்ள மக்களை சென்றடையலாம் என்ற எண்ணத்தோடுதான் அப்படிப்பட்ட படங்கள் உருவாகின்றன. இது சினிமா துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

கத்தி
இது ஒரு புறம் இருக்க, மீண்டும் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கப் போவதாக சில செய்திகள் வலம் வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இதற்கு முன்னர் அவர்கள் கூட்டணியில் வந்த மூன்று திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கத்தி திரைப்படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை அதில் நடித்த சதீஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பொதுவாகவே நடிகர் விஜய் அமைதியான சுபாவம் கொண்டவர். ஆனால் கேமரா முன்பு வந்து விட்டால் வேறு மாதிரியான விஜய்யை பார்க்கலாம் என்று பலரும் கூறி கேட்டுள்ளோம்.

விஜய் தம்பி...
அந்த வகையில் கத்தி திரைப்படத்தில் ஒரு காட்சியில், ஜீவானந்தமாக கதிரேசன் விஜய் முதியோர் இல்லத்திற்கு செல்வார். அப்போது அங்கிருக்கும் வயதானவர்,"தம்பி ஜீவா, நீங்க எங்க இந்தப் பக்கம்... நல்லா இருக்கீங்களா" என்று ஒரு வசனம் பேச வேண்டுமாம். அப்போது அந்த ஷாட்டில் நடித்த முதியவர்,"தம்பி விஜய், நீங்க எங்க இங்க... நல்லா இருக்கீங்களா..?" என்று வசனத்தை மாற்றிப் பேசிவிட்டாராம். உடனே சிரிக்க ஆரம்பித்த விஜய் அதனை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தாராம். சதீஷும் கூட இருந்து மேற்கொண்டு சிரிப்பு காட்ட,"நீ கொஞ்ச நேரம் தள்ளியே இரு" என்று கூறி நீண்ட நேரம் சிரித்துவிட்டு அதன் பின்னர்தான் நடித்தார் என சதீஷ் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











