»   »  ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு...

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு...

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கைக் கதையை சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் புத்தகமாக எழுதியுள்ளார்.

சாதாரண பஸ் கண்டக்டராக பெங்களூரில் வாழ்க்கையைத் தொடங்கியவர் ரஜினிகாந்த். பின்னர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்த அவர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

அந்தக் கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்களை அவரே பலமுறை பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இதழ்களில் சொல்லியுள்ளார்.

பலமுறை, அண்ணா சாலை எல்.ஐ.சிக்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியுள்ளாராம்-தங்க இடமில்லாததால்.

திரைப்படங்களில் இன்று உச்சநட்சத்திரமாக விளங்கினாலும், ரஜினியின் வாழ்க்கையே ஒரு திரில்லர் படம் போல பல திருப்புமுனைகளைக் கொண்டது. அத்தனை மேடு பள்ளங்களைச் சந்தித்தவர் ரஜினி.

அவரது வாழ்க்கைக் கதையை சென்னையைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் புத்தகமாக எழுதியுள்ளார். ரஜினிகாந்த்தின் மனைவி லதாவை நேரில் சந்தித்து இதுகுறித்து ஆலோசித்தார். அவர் மூலம் பல தகவல்களையும் பெற்றார்.

பின்னர் ரஜினியின் பிறப்பிடமான பெங்களூருக்குச் சென்று அங்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் சந்தித்து ரஜினி குறித்த பல தகவல்களை சேகரித்தார்.

இவற்றை வைத்து கடந்த ஒரு வருட உழைப்புக்குப் பின்னர் ரஜினியின் வாழ்க்கையை வைத்த நூலை எழுதி முடித்துள்ளார் காயத்ரி. அந்த நூலுக்கு 'The Name is Rajinikanth' என்று பெயரிட்டார் காயத்ரி.

இந்த நூலில் ரஜினியின் இளமைப் பருவம் முதல் இப்போது உள்ள கால கட்டம் வரை பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன. படிக்க படிக்க சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் நூலை வடித்துள்ளார் காயத்ரி.

மார்ச் மாதம் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூல் குறித்து காயத்ரி கூறுகையில், இது ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு மட்டும் அல்ல. ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் முன்னுக்கு வர எப்படி உழைக்க வேண்டும், எப்படிப் பாடுபட வேண்டும் என்பதற்கான பாடமும் கூட என்கிறார் காயத்ரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil