»   »  தித்திக்கும் இளமை!

தித்திக்கும் இளமை!

Subscribe to Oneindia Tamil
Althara with Dinesh
செல்போன்களை தவறாகப் பயன்படுத்தியதால் சீரழிந்த இளைஞர்களின் கதையைச் சொல்லும் படம் தித்திக்கும் இளமை.

செல்போன்கள் இன்று அவசியமாகி விட்டது, அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் அதை சிலர் தவறாகப் பயன்படுத்தி சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறார்கள், சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக செல்போன்கள் மூலம் தேவையில்லாத சைபர் குற்றங்களில் சிக்கிக் கொள்ளும் இளைஞர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படிப்பட்டவர்களைப் பற்றிய கதைதான் தித்திக்கும் இளமை.

புதுமுகம் சந்திரமோகன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். செல்போன்களால் இளைய சமுதாயம் எப்படி சீரழிகிறது என்பதைச் சொல்லும் கதை இது என்கிறார் சந்திரமோகன்.

நரேஷ் நாகா பிக்சர்ஸ் சார்பில் சங்கை சுப்ரமணியம் தயாரிக்கிறார். ஹீரோ தினேஷ், ஹீரோயின்களான நிஷா, அல்தரா மூவரும் நாயகியும் புதுமுகங்கள்.

லக்ஷயா, மன்சூர் அலிகானும், பாத்திமா பாபுவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தலைவாசல் விஜய்க்கு அருமையான வேடம். வணக்கண்ணே, அண்ணே வணக்கண்ணே என்ற பாடலில் தோன்றி ஆடிப் பாடுகிறார் விஜய்.

சமீபத்தில்தான் படப்பிடிப்பை உடுமலை, பொள்ளாச்சி, தேனி பக்கம் வைத்து முடித்தனராம். கேரளாவின் அழகிய சில இடங்களிலும் ஷூட்டிங் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஏவி.எம். ஸ்டுடியோவில் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டது. மன்சூர் அலிகான் முதல் பிரதியை வெளியிட இயக்குநர் - நடிகர் ஆர். சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.

படம் குறித்து இயக்குநர் சந்திரமோகன் கூறுகையில்,

தங்களது பிள்ளைகள், சமூகத்தில் உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கின்றனர். ஆனால் சில இளைஞர்கள், சிறு சிறு விஷயங்கள் மீது மோகம் கொண்டு, தவறான பாதைக்குப் போய் விடுகின்றனர்.

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்புவது, ஈவ் டீசிங்கில் ஈடுபடுவது என தவறான பாதையில் சென்று சீரழிகிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் அவர்களை சமூக விரோதிகளாக்கி விடுகிறது. இவர்களால் பாதிக்கப்படும் பல பெண்கள் தற்கொலை முடிவையும் நாடும் அபாயமும் உள்ளது.

இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் போகும் பாதை தவறானது என்பதை சுட்டிக் காட்டவும் இந்தப் படம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil