»   »  குஷ்பு மீது திருமா. பாய்ச்சல்

குஷ்பு மீது திருமா. பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil
Kushboo
குஷ்பு போன்றவர்களை இலக்கிய விழாக்களுக்கு அழைத்தவர்களால் ஏற்பட்ட அவமானம்தான் சென்னையில் நடந்த நிகழ்ச்சி. குஷ்புவுக்கு தெரிந்த மேடை நாகரீகம் அவ்வளவுதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமாவளவனை மேடையிலேயே மிகக் கடுமையாக சாடினார் குஷ்பு.

அது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மீடியாக்களும் கற்பு பற்றிய அவரது பேச்சுக்களை தவறாகப் பிரசுரித்து பிரச்சினையை அவர் பக்கம் திசை திருப்பி விட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டிப் பேசினார் .

இதைக் கேட்டு கொந்தளித்துப் போன விடுதலைச் சிறுத்தை தொண்டர்களை சமாதானப்படுத்திய திருமாவளவன், மேற்கொண்டு ஏதும் ரசாபாசமாகி விடாமல் பார்த்துக் கொண்டார். தன்னால் நிகழ்ச்சி கெட்டு விடக் கூடாதே என்பதற்காக, திட்டமிட்டபடி புத்தகத்தையும் வெளியிட்டார். அதை குஷ்பு பெற்றுக் கொண்டார்.

நடந்த சம்பவம் குறித்து திருமாவளவனின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். நமக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் திருமாவளவன் கூறியதாவது

அது ஒரு இலக்கிய மேடை. அங்கே நடந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச மேடை நாகரீகம் கூட அந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. அவரது பழைய கதைகளைப் பேச வேண்டிய களம் அதுவல்ல.

ஏதாவது ஒரு வடிவில் தனக்கு அனுதாபம் தேடிக் கொள்வதில் குறியாக இருக்கிறார் அந்த நடிகை. அவரோடு லாவணி பாடிக் கொண்டிருப்பது வீண் வேலை. என்னால் நிகழ்ச்சி கெட்டுவிட்டதாக யாரும் நினைக்கக் கூடாது என்பதால் அமைதி காத்தோம். அதுவும் நல்லதாகப் போய்விட்டது. இப்போது அவரது சுய முகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இலக்கியத்துக்கு தொடர்பே இல்லாத ஒரு பெண்ணை அழைத்து வந்து இப்படியெல்லாம் தேவையற்ற அவமானங்களைத் தேடிக்க கொண்டது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் தவறு. இனியாவது இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அறிவுமதி போன்ற கவிஞர்களின் பெருமை குஷ்பு போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய அறிவீனம் என்றார்.

என் இஷ்டம் - கோபப்பட்ட குஷ்பு

குஷ்புவின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். முதலில் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கு? அதான் எல்லாரும் நிகழ்ச்சியைப் பார்த்தார்களே, உங்கள் இஷ்டப்படி எழுதிக் கொள்ளுங்கள் என்றவர் சிறிது நேரம் கழித்து, ஒரு மேடையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்வது குற்றமா? அது என் இஷ்டம். யாருக்கு எப்போது மரியாதை தரவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

குஷ்பு புயலா - அறிவுமதி கொதிப்பு

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், குஷ்புவின் நடத்தைக்கு மேடையிலேயே கண்டனக் குரல் எழுப்பியவருமான அறிவுமதி நம்மிடம் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கு திருமாவளவன் வருவார் என்று குஷ்புவுக்குத் தெரியும். நாடறிந்த ஒரு மக்கள் தலைவரை, ஒடுக்கப்பட்ட இனத்தின் போராளியை திட்டமிட்டே அவமானப்படுத்தி இருக்கிறார் அந்த நடிகை. சரியான ஒத்திகையோடு அவர் நடத்திய மேடை நாடகம் இது.

தமிழர்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு இம்மாதிரி அரை வேக்காட்டு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கப் போகிறதோ... இப்போதும் பாருங்கள், நமது ஊடகங்கள் என்ன நடந்தது என்பதை முழுமையாக எழுதாமல், ஏதோ அந்தப் பெண் புரட்சி செய்து விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன.

இன்றைக்குக் கூட, குஷ்புவை புயல் என்று வர்ணித்து ஒரு பத்திரிகையில் அவரை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இதுதான் காலக் கொடுமை என்பது. அன்றைக்கு திருமாவளவன் மட்டும் தடுத்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஒரு நல்ல பண்பாளராக அவர் நடந்து கொண்டார். இந்தப் பண்பை குஷ்பு மாதிரி பெண்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான். இது போன்ற இலக்கிய விழாவுக்கு அந்தப் பெண்ணை அழைத்ததே தவறுதான் என்றார் கோபத்துடன்.

Please Wait while comments are loading...