»   »  ஸ்ரேயா-நமிதா உடை பெரிய பிரச்சனையா: கனிமொழி

ஸ்ரேயா-நமிதா உடை பெரிய பிரச்சனையா: கனிமொழி

Subscribe to Oneindia Tamil
Kanimozhi
குட்டைப் பாவாடைகளையும், அதைவிட குட்டையான அரைகுறை உடைகளையும் திரையில் பார்த்து மகிழ்பவர்கள் அந்த உடைகளைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என கனிமொழி கருணாநிதி எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.

நடிகைகள் நமீதாவும் ஷ்ரியாவும் பொது நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடையோடு பங்கேற்பதால், அவர்களைப் போன்ற கலைஞர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்பதற்கு வரைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தீவிர விவாதம் நடந்தது.

அதே நேரத்தில் சட்டசபைக்கு வெளியே, ஒரு பொது கருத்தரங்கிலும் இதுகுறித்த விவாதம் அனல் பறந்தது.

பெண்கள் ஆளுமையும் பத்திரிகைகளும் எனும் தலைப்பில் சென்னையில் நடந்த அந்த கருத்தரங்கில் பங்கேற்ற ராஜ்யசபா எம்பியும் கவிஞருமான கனிமொழி பேசியதாவது-

இன்றைக்குப் பத்திரிகைகள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதில்லை. இவர்களுக்கு சமூகப் பிரச்சினைகளைவிட, ஒரு நடிகை என்ன உடை அணிந்து வருகிறார், என்னென்ன அணியவில்லை என்பதைப் பற்றி எழுவதில்தான் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது.

ஷ்ரியா அணிந்து வந்த குட்டைப் பாவாடையின் அளவை இன்றைக்கு மிகப் பெரிய, தலைபோகிற பிரச்சினையாக்கி வைத்துள்ளன பத்திரிகைகள்.

ஒரு நிகழ்ச்சிக்கு என்ன மாதிரி உடை அணிந்து வரவேண்டும் என்பது அவரது சொந்தப் பிரச்சினை. இதையெல்லாம் ஒரு பொதுப் பிரச்சினையாக்கி சட்டமன்றத்தில் பேசவைக்கும் அளவுக்குச் செய்தது பத்திரிகைகள்தான்.

ஏன், இதே உடையை அல்லது இதற்கும் குறைவான உடையை அவர்கள் அணிந்து திரையில் தோன்றுவதைப் பார்த்து ரசிக்கத்தானே செய்கிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த உடையுடன் திரையில் தோன்றுகிறார்களோ அந்த அளவு சந்தோஷப்படுகிறீர்கள்.

இதே உடையை ஒரு பொது நிகழ்ச்சியில் பார்க்கும்போது மட்டும் ஆவேசப்படுவது ஏன்? இதுதான் போலித்தனம் என்பது. உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள், திரையில் பார்க்கும்போதே கண்டனக் குரல் எழுப்பி இருக்க வேண்டுமல்லவா என்று வெடித்தார்.

அதேசமயம், இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கெளதமி பேசுகையில், பத்திரிகைககளை மட்டும் இதில் குறை சொல்ல முடியாது என்று பேசினார்.

அவர் பேசுகையில், பெண்களை இழிவாகவும், கீழ்த்தரமாகவும் சித்தரிப்பதைக் கண்டு சமூகத்தினர் அமைதியாக இருக்கக் கூடாது.

திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பெண்களை குறைத்து மதிப்பிட்டுக் காட்சிகள் வந்தால், தரக்குறைவாக சித்தரிக்கப்பட்டால் அதுகுறித்து உடனடியாக பெண்களும், மாணவ, மாணவியரும், பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதி கண்டிக்க வேண்டும். அப்போதுதான் அதுபோன்ற காட்சிகள் மறுபடியும் வராமல் தடுக்க முடியும்.

மீடியாக்களை மட்டும் இந்த விஷயத்தில் குறை கூற முடியாது. அவர்கள் விமர்சித்து எழுதும் அளவுக்கு காட்சிகளும், நிகழ்வுகளும் இருப்பதுதான் இங்கு முக்கியமானது. எனவே அத்தகைய நிகழ்வுகளைக் கண்டிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் கெளதமி.

இந்தக் கருத்தரங்கில் ஏராளமான பத்திரிகையாளர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil