twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா 2007: டாப் 10 படங்கள்

    By Staff
    |

    Rajini with Shriya
    சிவாஜி:

    பல படங்கள் வெளியானபோதும் ரஜினிகாந்த்தின் சிவாஜி பெரும் சாதனை படைத்து 2007ம் ஆண்டின் மிகப் பெரிய படமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.

    பெரும் பொருட் செலவில், ஏவி.எம். நிறுவனம் தயாரித்து, ஷங்கர் இயக்கி, ரஜினிகாந்த், விவேக், ஷ்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சிவாஜி, தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, வசூல் சாதனை படைத்தது.

    உலக அளவில் திரையிடப்பட்ட சிவாஜி, திரையிட்ட இடமெல்லாம் வசூலில் புதிய சாதனை படைத்தது. 175 நாட்களைத் தாண்டி இன்றும் கூட பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது சிவாஜி. வெளிநாட்டு திரையீட்டாளர்கள் இதுவரை கண்டிராத லாபத்தையும், சந்தோஷத்தையும் சிவாஜி அவர்களுக்குக் கொடுத்தது.

    கூகுள் சர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்ட படம் சிவாஜி என்பதும் அப்படத்திற்குக் கிடைத்த ஒரு பெருமை. மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரம் தேடல்கள் சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

    தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான சிவாஜி படத்திற்கு உலகம் முழுவதும் திரையிடுவதற்காக 1400 பிரிண்டுகள் போடப்பட்டன. ஜூன் 15ம் தேதி திரைக்கு வந்த சிவாஜி, 28 நாடுகளில் திரையிடப்பட்டது. இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகள் போடப்பட்டன.

    ஏவி.எம். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி 112 தியேட்டர்களில் சிவாஜி 100 நாட்கள் ஓடியுள்ளது. 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கண்டுள்ளது. இவற்றில் 3 தியேட்டர்கள் வெளிநாட்டு தியேட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் ரூ. 160 கோடி வசூலை சிவாஜி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி ரூ. 100 கோடி வசூலை ஈட்டியது.

    விஜய்யின் போக்கிரி:

    சிவாஜிக்கு அடுத்து விஜய்யின் போக்கிரி படம், 2007ம் ஆண்டின் பெரும் ஹிட் பட வரிசையில் சேருகிறது. பொங்கலுக்கு வெளியான இப்படம் விஜய் படங்களிலேயே பெரும் வெற்றி பெற்ற படமாக பெருமையுடன் சேர்ந்துள்ளது.

    விஜய் நடிக்க வந்து 15 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அவர் இதுவரை கொடுத்திராத மிகப் பெரிய வெற்றிப் படம் போக்கிரி எனலாம்.

    200 நாட்களைத் தாண்டி ஓடிய இப்படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். கமல்ஹாசன் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

    விஜய்யின் அதிரடி நடிப்பு, ஆட்டம், ஆசினின் அசத்தல் அழகு, பிரபு தேவாவின் நேர்த்தியான இயக்கம், வடிவேலுவின் அரட்டல் காமெடி என பல பிளஸ் பாயிண்டுகள் இருந்ததால் போக்கிரி, பெரும் வெற்றி பெற்றது.

    வருடத்தின் தொடக்கத்தை சிறப்பாக ஆரம்பித்த விஜய், வருடக் கடைசியில் அழகிய தமிழ் மகன் மூலம் சறுக்கினார். ஏ.ஆர்.ரஹ்மானின் அருமையான இசையும், பாடல்களும் துணை இருந்தும் கூட அழகிய தமிழ் மகன் விஜய்யைக் கைவிட்டு விட்டது.

    பயமுறுத்திய பருத்தி வீரன்:

    சூர்யாவின் தம்பி என்ற அந்தஸ்தையும் மீறி, கார்த்திக்கு தனித்துவம் தேடித் தந்த படம் பருத்தி வீரன்.

    இயக்குநர் அமீரின் மிரட்டல் இயக்கத்தில் உருவாகியிலிருந்த பருத்தி வீரன், சிவாஜிக்கு நிகராக இமாலய வெற்றியைப் பெற்ற படம். 300 நாட்களைத் தாண்டி சென்னையில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    முதல் படத்தையே 300 நாட்களைத் தாண்டி ஓட்டி விட்ட புதிய கெளரவமும் கார்த்திக்குக் கிடைத்துள்ளது.

    கார்த்தி, சரவணனின் நேர்த்தியான நடிப்பு, ப்ரியமாணியின் பிரளய நடிப்பு, அதிர வைத்த இசை, அழகான திரைக்கதை, அமீரின் அருமையான இயக்கம் என பருத்தி வீரனை, பெரும் வெற்றிப் படமாக்கிய அம்சங்கள் இப்படத்திற்கு நிறையவே உள்ளது.

    படத்தை உருவாக்கிய விதத்தை வைத்துப் பார்த்தால் சிவாஜியை விட சிறந்த படம் என்று பருத்தி வீரனைக் கூறலாம். ரஜினியே கூட பருத்தி வீரனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    புதுமுக நடிகர் என்பதாலும் ரஜினி, விஜய் ஆகிய இரு மாஸ் ஹீரோக்களின் இடையில் சிக்கிக் கொண்டதாலும் பருத்தி வீரன் வசூல் ரீதியாக முதலிடத்தைப் பெற முடியாமல் போய் விட்டது.

    'வெற்றி' வேல்:

    கஜினிக்குப் பிறகு சூர்யா கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் வேல். தீபாவளிக்கு ரிலீஸான வேல், அப்போது வெளியான படங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு பெரும் வெற்றியைப் பெற்றது.

    புலிப் பாய்ச்சல் என்பார்களே அது வேலுக்குப் பொருந்தும். ரிலீஸான அன்றே இப்படம் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

    சூர்யா கொடுத்த மிகப் பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் வேலுக்கு முக்கிய இடம் உண்டு.

    ஹரியின் இயக்கம், சூர்யாவின் நடிப்பு, வடிவேலுவின் வெடிக் காமெடி, அழகு ஆசின் என பல சிறப்பம்சங்கள் படத்திற்கு இருந்ததால் வேல் இன்ஸ்டன்ட் ஹிட் ஆனது.

    ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் இப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் 50 நாட்களைத் தாண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ரிலீஸ்களில் பி மற்றும் சி சென்டர்களில் அதிக வசூலை அள்ளிய படமும் வேல்தான் என்கிறார்கள்.

    மிரட்டிய பில்லா:

    லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்ற ரஜினி பன்ச் டயலாக் போல, கடைசியாக வந்த படம் பில்லா. ஆனாலும் பிரமாண்ட படமாக்கம், அஜீத்தின் அசத்தல் அழகு, நயனதாராவின் கிளாமர், படத்தின் ரிச்னஸ் என ஏகப்பட்ட பிரமாண்டங்களுடன் வெளியான இந்த மாடர்ன் டான், அஜீத் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்தது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஆழ்வார் அஜீத்தை ஏமாற்றியது. கிரீடம் சுமாரான திருப்தியைக் கொடுத்தது. இதை ஈடு கட்டும் வகையில் பில்லா வெற்றிப் படமாகி அஜீத்தை திருப்திக்குள்ளாக்கியது.

    மருட்டிய மருதமலை:

    அர்ஜூன், நிலா, வடிவேலு கூட்டணியில் உருவான மருதமலை வெற்றிப் பட வரிசையில் சேருகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் உருவாக்கத்தில் வெளியான மருதமலை, சூப்பர் ஹிட் படமாகும்.

    நிலாவின் கவர்ச்சி, அர்ஜூனின் ஆக்ஷனை விட வடிவேலுவின் வெடித்தனமான காமெடிதான் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் சிரிப்பு போலீஸ் என்ற வார்த்தை சின்னப் பசங்க மத்தியில் ரொம்பவே பாப்புலர் ஆனது.

    சுராஜின் இயக்கத்தில் வெளியான மருதமலை 100 நாட்களைத் தாண்டி ஓடிய வெற்றிப் படம். வசூலிலும் கூட இப்படம் தயாரிப்பாளருக்கு பேருவுகையை அளித்தது.

    பொங்கிய பொல்லாதவன்:

    பரட்டை என்கிற அழகுசந்தரம் பிளாப்பால் அப்செட் ஆகியிருந்த தனுஷுக்கு பூஸ்ட் தரும் வகையில் வந்து சேர்ந்தது தீபாவளிக்கு வெளியான பொல்லாதவன்.

    சென்னைப் பின்னணியில் அமைந்த கதைகள்தான் தனுஷுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை நிரூபித்த படம் பொல்லாதவன். வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான பொல்லாதவன், ஆரம்பத்தில் சுமாராகப் போனது. ஆனால் போகப் போக பிக்கப் ஆகி வெற்றிப் படமானது.

    இயல்பான திரைக்கதையும், எதார்த்தமான வசனங்களும், தனுஷின் அலட்டல் இல்லாத நடிப்பும், குத்து ரம்யாவின் தித்திப்பு கிளாமரும், ஜாலியான காமெடியும் படத்ைத வெற்றிப் படமாக்கின.

    சிலிர்க்க வைத்த மொழி:

    ஏ சென்டர் படமாக வர்ணிக்கப்பட்டாலும், பிரகாஷ் ராஜின் தயாரிப்பான மொழி அனைவரையும் கவர்ந்த நல்ல பட வரிசையில் சேருகிறது.

    ராதாமோகனின் இயக்கத்தில், ஜோதிகாவின் அருமையான நடிப்பில் வெளியான மொழி ஹிட் படங்களில் ஒன்று. பிருத்விராஜ், பிரகாஷ் ராஜ், சொர்ணமால்யா என நல்ல நடிப்பைத் தந்த பலர் படத்தில் இருந்ததாலும், வித்யாசாகரின் வித்தியாச இசை கூட வந்ததாலும், மொழி பலராலும் எளிதில் பாராட்டப்பட்டது.

    நான் அவனில்லை:

    சமீபத்திய தமிழ் சினிமா டிரெண்டான தமிழ் ரீமேக்கை ஆரம்பித்து வைத்த படம் நான் அவனில்லை.

    ஐந்து நாயகிகள், ஜீவன் ஹீரோ என வந்த இப்படத்தின் கதை அந்தக் காலத்திலேயே கே.பாலச்சந்தரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வித்தியாச கதை.

    அது இந்தக் காலத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டதால், நான் அவனில்லை வெற்றிப் படமானது.

    கலாய்த்த சென்னை 600028:

    முற்றிலும் புதுமுகங்களுடன் வெளியான சென்னை 600028, உண்மையிலேயே மிகப் பெரிய ஹிட் படம். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தை எஸ்.பி.பி. சரண் தயாரித்தார்.

    தெருவோர கிரிக்கெட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வித்தியாசமான கதையுடன், யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தல் இசையில் உருவான இப்படம், பெரும் வெற்றி பெற்றது.

    இப்படத்தில் இடம் பெற்ற சரோஜா சாமான் நிக்காலோ என்ற வார்த்தை படு பாப்புலரானது. படம் முழுக்க நக்கலும், நையாண்டியும், கூடவே நிறைய கிரிக்கெட்டும் புகுந்து விளையாடியிருந்தன.

    முற்றிலும் வித்தியாசமான இந்தப் படம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்று என்பதில் சந்ேதகமே இல்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X