»   »  டாப் 10 பாடல்கள்!

டாப் 10 பாடல்கள்!

Subscribe to Oneindia Tamil
Jeevan with Sneha
2007ல் வெளியான சிவாஜி முதல் பில்லா வரை உள்ள படங்களில் பெரும்பாலானவை ரசிகர்களைக் கவர்ந்தவை. இருப்பினும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தவை என்று பார்த்தால் கொஞ்சம்தான் தேறும். அப்படிப்பட்ட பாடல்களிலும் கூட ரசிகர்களை லயிக்க வைத்த பத்து பாடல்களைப் பார்க்கலாம்.

சிவாஜியில் இடம் பெற்ற ''அதிரடிக்காரன்''... சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாது பல தரப்பினரையும் வெகுவாகவே கவர்ந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடி இசையில், ரஹ்மானின் தீப்பொறி பறக்கும் குரலில் பாடல் படத்துக்கே பலமாக அமைந்தது.

பருத்தி வீரனில் இளையராஜாவின் மயக்கும் குரலில் இடம்பெற்ற ''அறியாத வயசு...'', பாடல் கேட்டவர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்தது. அமைதியான யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும், இளையராஜாவின் இன்னிசைக் குரலும், கேமராவின் புண்ணியத்தால் காட்சிக்கு கிடைத்த எழிலும் சேர்ந்து இந்தப் பாடலை சூப்பர் சாங் ஆக மாற்றியுள்ளன.

அதேபோல கற்றது தமிழ் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இளையராஜா பாடிய ''பறவையே எங்கு இருக்கிறாய்...'' பாடலும் ஹிட் ஆனது.

இன்றைய இளம் தலைமுறையினரை வெகுவாக வசீகரித்த உன்னாலே உன்னாலே படத்தில் இடம் பெற்ற ''ஜூன் போனால்....'' பாடலும் அனைவரையும் தாலாட்டிய அருமையான பாடல். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் கிருஷ், அர்ஜூன் ஆகியோர் பாடிய இப்பாடல் இந்த ஆண்டின் நல்ல மெலடிப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

போக்கிரியில் இடம்பெற்ற ''வசந்த முல்லை போல வந்து....'' பாதி ரீமிக்ஸ் பாடலும் ரசிகர்களை வசீகரித்தது. பாடலை விட விஜய், ஆசினின் ஆட்டம்தான் அனைவரையும் கவர்ந்தது.

சென்னை 600028 படத்தில் இடம் பெற்ற ''சரோஜா சாமான் நிக்காலோ....'' பாடல் இளசுகளின் கீதமாகவே மாறிப் போயுள்ளது. அந்த அளவுக்கு இப்பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

அழகிய தமிழ் மகனில் இடம் பெற்ற ''மதுரைக்குப் போகாதடி....'' அனைவரையும் கவர்ந்த அருமையான மெலடி. பென்னி தயாள், அர்சித், தர்ஷனாவின் குரலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இடம் பெற்ற இந்த நாட்டுப்புற மெட்டில் அமைந்த மெலடி படத்தை விட அதிகம் பேசப்பட்டது.

அஜீத்தின் பில்லாவில் இடம் பெற்ற ரீமிக்ஸ் பாடல் ''வெத்தலையைப் போட்டேண்டி.....''. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ரீமிக்ஸ் ஆன இப்பாடல் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது.

மொழி படத்தில் இடம் பெற்ற வித்யாசாகரின் மெலடியான ''காற்றின் மொழி.....'' கேட்டவர் நெஞ்சங்களில் கஜல் வாசித்தது.

ரீமேக் படமான நான் அவனில்லையில் இடம் பெற்ற ஜீவன் - சினேகா இணைந்து ஆடிப் பாடிய ''ஏன் எனக்கு மயக்கம்.....'' இந்த ஆண்டின் வசீகரப் பாடல்களில் ஒன்று.

''அறியாத வயசு'' மற்றும் ''பறவையே எங்கு இருக்கிறாய்'' ஆகிய இரு பாடல்களையும் பாடிய இசைஞானி இளையராஜாவை, ஆனந்த விகடன் இந்த ஆண்டின் சிறந்த பாடகராக தேர்வு செய்துள்ளது. அதேபோல அந்தப் பாடல்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவை சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil