»   »  போக்குகளை முன்னெடுக்கும் படங்களே மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன!

போக்குகளை முன்னெடுக்கும் படங்களே மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-கவிஞர் மகுடேஸ்வரன்

ஒரு திரைப்படமானது வெளியாகிறது, மக்களால் ஏற்கப்படுகிறது அல்லது தோற்கடிக்கப்படுகிறது, மறு வெளியீட்டிலோ தொலைக்காட்சி ஒளிபரப்பிலோ மீண்டும் ஒரு பார்வையாளர் திரளை அது அடைகிறது. காலப்போக்கில் அதன் திரைத்தோற்றம் மங்கி மறைந்துவிடுகிறது. அவ்வாண்டின் மிகச்சிறந்த படங்களாகச் சிலவே மிஞ்சுகின்றன. அச்சில படங்கள்தாம் மீண்டும் மீண்டும் அதன் அனைத்துச் சிறப்பமைவுகளுக்காகவும் கண்டுகளிக்கப்படுகின்றன. மற்ற படங்கள் யாவுமே தோன்றியதும் தெரியாமல் வெளியானதும் தெரியாமல் பெட்டிக்குள் முடங்கி அழிகின்றன. அவற்றின் மறு திரையீட்டுக்குப் போதிய வாய்ப்புகளே இல்லை எனலாம்.


Trend Setter films in Tamil Cinema

ஆண்டுக்கு இருநூற்றைம்பது திரைப்படங்கள் வரை தமிழில் எடுக்கப்படக்கூடும். அவற்றுள் எப்படியேனும் நூற்றைம்பது திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அந்நூற்றூற்றைம்பது திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் காணத்தகுந்த படங்களாகப் பத்துத் திரைப்படங்கள் மிஞ்சலாம். இந்தப் பத்து என்னும் எண்ணிக்கையைக்கூட மிகவும் தளர்த்தப்பட்ட மதிப்பீடுகளின் வழியாகத்தான் அடைய வேண்டியிருக்கும்.


ஆக, வெள்ளமென வெளியாகும் இத்திரைப்படங்களில் எத்தகைய படங்கள் மீண்டும் மீண்டும் மக்களால் பார்க்கப்படுகின்றன என்பது சுவையான கேள்வி. காலப்போக்குகளுக்கு ஏற்பத் தம்மைத் முதன்மையான முயற்சியாக முன்னிறுத்திக்கொள்ளும் படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன என்பதை முதற்காரணமாகச் சொல்லலாம்.


காலப்போக்குகள் என்று எதைச் சொல்வது ? அதுநாள்வரை சமூகத் திரளில் அடங்கியிருந்த, மறைந்திருந்த ஒரு பண்பு - திடீரென்று பீறிட்டுக் கிளம்பி வெளிப்படும்போது அது காலத்தைப் புரட்டிப்போடுகிறது எனலாம். சமூகத்தின் கூட்டு மனம் எதனைப் பொதுவாக எண்ணிக்கொண்டிருந்ததோ அதைக் காட்சிப் படுத்திவிடக்கூடிய ஒரு படம் வெளிவந்தால் அது அந்நேரத்தின் கொண்டாடத்தக்க ஆறுதலாக மாறிவிடுகிறது. அதை ஒட்டுமொத்த மக்கள் திரளே கூடிக் கொண்டாடுகிறது. அத்திரைப்படம் மீண்டும் மீண்டும் காணத்தக்கதாய் மாறிவிடுகிறது. இதைத்தான் நிகழ்போக்கு (ட்ரெண்ட்) என்கிறார்கள்.


இதை நாம் எடுத்துக்காட்டுகளின் வழியாக விளங்கிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஐம்பதுகளின் இறுதிவரையிலுமே கூட இராஜாராணிக் கதைகளாகவே வெளியாகிக்கொண்டிருந்தன. குமுகாயத்தின் அன்றாட வாழ்க்கை நிலைமையைக் காட்டும் படங்கள் மிகவும் அரிதாகத்தான் வெளியாகின. படப்பிடிப்பு அரங்கத்திற்குள்ளேயே படமாக்க வேண்டிய நிலைமை ஒருபக்கமிருக்க, வயலையும் வரப்பையும் வாய்க்காலையும் காட்ட வெளியே செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு வெளிச்செல்லும்போது சூரிய வெளிச்சம் என்பது மிகப்பெரிய கட்டுப்பாடு. கதிரவனின் சாய்வான கதிர்கள் உள்ளபோதுதான் வேண்டியவாறு படப்பிடிப்பை நிகழ்த்த இயலும். தற்போதைய வசதிகள் எவையும் அப்போது தோன்றியிருக்கவில்லை. அதனால் படப்பிடிப்பு அரங்கிற்கு வெளியே செல்வதைப் போன்ற வீண் முயற்சி வேறில்லை. ஆகவே, ராஜாராணிக் கதைகளிலேயே திரைக்கதைகள் உழன்றுகொண்டிருந்தன.


அந்நேரத்தில்தான் பராசக்தி என்ற திரைப்படம் வந்தது. அத்திரைப்படம் அக்காலத்துச் சமூக ஏழ்மையின் பல்வேறு கூறுகளை முதன்மைப்படுத்தியது. மக்கள் மனத்தில் அழுந்தியிருந்த கேள்விகள் பராசக்தியின் குணசேகரனிடமிருந்து வெளிப்பட்டன. சமூக அவலங்கள் ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் காட்டப்பட்டன. நாடு விடுதலை பெற்ற நிலையில், எங்கெங்கும் வறுமையும் அமைதியின்மையும் அரசியல் நிலையின்மையும் நிலவிய காலத்தில் அத்திரைப்படம் உரத்த குரலாய்ப் பார்க்கப்பட்டது. பட்டிதொட்டியெங்கும் தொடர்ந்து ஓடியது. இன்றும் பராசக்தி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் தவறவிடாமல் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.


அரசனின் வாழ்வு, குடிமகனின் வாழ்வு என்றெல்லாம் பல்வேறு வாழ்க்கைக் கதைகளைக் கண்டு சோர்வுற்றிருந்த மக்களுக்கு ஒரு கலைஞனின் வாழ்வு என்பது உவப்பூட்டக்கூடிய கதைக்களம்தான். தம்மை மகிழ்விக்கும் கலைஞனின் வாழ்வில் எத்துயரும் இருக்கக்கூடாது என்றே மக்கள் விரும்புகின்றனர். அப்படியொரு துயரம் அக்கலைஞனின் வாழ்வில் உண்டாம் எனில் உடன்சேர்ந்து மனங்கசிகின்றனர்.


'தில்லானா மோகனாம்பாள்' என்னும் திரைப்படம் அப்படியொரு கலைஞனின் வாழ்க்கையைச் சொல்ல முயன்ற படம். வித்தைச் செருக்குடைய மாக்கலைஞனின் வாழ்வில் ஒரு நாட்டிய தாரகை ஏற்படுத்தும் காதலசைவுகள் என்னும்போதே அந்தக் கதைக்களம் சிலிர்ப்பூட்டுவதை உணரமுடிகிறது. பல்வேறு உணர்வுச் சிக்கல்களையும் கலைஞர்களின் எளிய வாழ்வையும் உள்ளது உள்ளபடியே படம்பிடித்துக் காட்டிய அத்திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.


நாடெங்கும் போர்ப் பதற்றம் நிலவிய நேரம். எங்கும் அச்ச முகங்கள். திரைப்படங்களிலும் இறுக்கமான கதைகள். இவ்வாறு தீவிரமான கதையாடல்களால் சோர்ந்து போயிருந்த சனத்திரளுக்கு ஏதேனும் இலகுவான பொழுதுபோக்கு கிட்டினால் நன்றாகத்தானே இருக்கும் ? அப்படிக் களைப்புற்றிருந்த வேளையில் வெளியான திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. கதையென்று பெரிதாக ஒன்றும் கிடையாது. இரண்டு காதலர்கள். நாயகியரின் பணக்காரத் தந்தை. ஆள்மாறாட்டக் காட்சிகள். குழறுபடிகள். பாடல்கள். அவ்வளவுதான். மக்களுக்குப் போதுமானதாயிருந்தது. அத்திரைப்படம் கொண்டாடப்பட்டது.


சமூகக் கதைகளும் இராஜாராணிக் கதைகளும் நகைச்சுவைக் கதைகளும் மக்களைக் களைப்படைய வைத்த வேளையில் சாகசக் கதைகள் கோலோச்சின. எம்ஜிஆர் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களமான நீலக்கடல், பாய்மரக்கப்பல், மாலுமிகள், கடற்பயணங்கள். ஆயிரத்தில் ஒருவன் ஓடிக்கொண்டே இருந்தது. இன்றைக்கு வரையிலும் சாகசக் கற்பனைக் கதைகளின் முதன்மையான எடுத்துக்காட்டு ஆயிரத்தில் ஒருவன்தான்.


மக்கள் நடுவில் சோர்ந்து போயிருந்த இசையுணர்ச்சிக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டல் தேவைப்பட்டது. அன்னக்கிளியில் இளையராஜா தோன்றினார். அரங்கங்களுக்குள் படமாக்கப்பட்ட கதைகளால் ஏற்பட்டிருந்த சோர்வை ஊர்ப்புறங்களுக்குள் நுழைந்து புறப்பட்ட பாரதிராஜா போக்கினார். அழுத்தமான வாழ்க்கைக் கதையாடல்களை பாலசந்தர் நிகழ்த்தினார். பன்னிறப்படங்கள் நிலைபெற்றவுடனே பாலுமகேந்திரா முள்ளும் மலரும் என்ற படத்தில் மலையழகின் மகத்துவத்தை உணர்த்தினார்.


இடையில் பாக்யராஜின் இலகும் துல்லியமும் களிநயமும் கலந்த திரைப்படங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் வெற்றிக்கொடி நாட்டின. ஒவ்வொரு சுடுவையும் மேதைமையோடு ஆக்கும் மணிரத்னமும் பிசி ஸ்ரீராமும் மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரத்தில் வந்தனர்.


விஜயகாந்த் துணையோடு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வேறொரு போக்குக்கு அச்சாரமிட்டனர். பிறகு ரோஜா போன்ற படங்கள் நடப்பு அரசியலைப் பேசின. மீண்டும் உள்ளத்தை அள்ளித்தா என்னும் படம் நகைச்சுவையை நிலைநாட்டியது. பிறகு இளைய தலைமுறை நாயகர்களை முன்னிறுத்திய படங்கள் வெற்றி பெற்றன. புதிய இசையமைப்பாளர்கள் சத்தம் பெருக்கினர். அடப்போங்கய்யா... என்று களைப்புற்றிருந்த வேளையில் பேய்ப் படங்கள் வந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. பேய்ப்படங்களின் இன்றைய போக்கை முன்னெடுத்த படமாக சந்திரமுகியைத்தான் சொல்ல வேண்டும்.

English summary
Poet Magudeswaran's article on Trend Setter movies in Tamil Cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil