»   »  முதலீடுகளை 'ஈர்க்க' கொய்னா!

முதலீடுகளை 'ஈர்க்க' கொய்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Koena Mitra

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பாலிவுட் கவர்ச்சி நடிகை கொய்னா மித்ராவை சிறப்பு தூதராக நியமித்துள்ளது ஜார்க்கண்ட் மாநில அரசு.

அம் மாநில முதல்வர் மது கோடாவின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் வெளிநாட்டு இந்தியர் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநில முதல்வர்களும் இதில் கலந்து கொண்டு வெளிநாடு வாழ் இந்தியர்களை தங்களது மாநிலத்தில் வந்து முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஒவ்வொரு மாநில அரசு சார்பிலும் பல்வேறு வகையான பிரசாரங்களும் நடைபெற்றன.

ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிதான் இப்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிற மாநிலங்கள் சார்பில் அம்மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரப் பிரசாரம் செய்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் பாலிவுட் கவர்ச்சி நடிகை கொய்னா மித்ரா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

அவரது கவர்ச்சிகரமான படங்கள் அடங்கிய விளம்பரங்களும் சுற்றுக்கு விடப்பட்டன.
இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இப்படி கவர்ச்சியை காட்டியா முதலீடுகளை ஈர்க்க முடியும் என முயற்சிப்பது என்று மாநாட்டிலேயே பலர் முனுமுனுத்தனர்.

பாஜகவும் இதை பெரும் பிரச்சினையாக்கியுள்ளது. முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான அர்ஜூன் முண்டா இதுகுறித்துக் கூறுகையில்,

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ரத்தன் டாடாவை வர்த்தக சிறப்பு தூதராக நியமித்தோம். ஆனால் மது கோடா தலைமையிலான அரசு ஒரு நடிகையை தூதராகப் போட்டு மாநிலத்தின் பெயரை கெடுத்து விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து முதல்வர் மது கோடா கூறுகையில், ஜார்க்கண்ட் முன்னேற்றத்துக்கு, நடிகை தனுஸ்ரீ தத்தா, கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணி ஆகியோரை விட நடிகை கொய்னா மித்ராவின் பிரசாரம், பெரிதும் உதவும்.

முதலீட்டை பெருக்க கவர்ச்சி கண்டிப்பாக அவசியம். அரசின் வர்த்தக கவுரவ துாதராக கொய்னா மித்ரா நியமிக்கப்பட்டதாக நான் கூறவே இல்லை. ஜார்க்கண்ட் வளர்ச்சிக்கு உதவும் பர்வாசி டுடே' என்ற இதழின் சார்பில் அவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் பத்திரிக்கைகள், டிவிகள்தான் தவறான தகவலை பரப்பி, மாநிலத்துக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டன என்று கூறியுள்ளார்.

முதலீடு வருகிறதோ இல்லையோ கொய்னா மூலமாக மது கோடாவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil