twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓ... வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்த வாலி!

    By Shankar
    |

    வாலியைப் பற்றி எழுதத் தொடங்கும்போதே, 'என்னவென்று சொல்வதம்மா... வாலியண்ணன் பாடல்களை...' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

    அவரது பாடல்களில் சிறந்தவை என பட்டியலிடுவதை விட சிரமமான பணி வேறொன்றுமில்லை. ஒன்றா இரண்டா.. 15 ஆயிரம் பாடல்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி தொடங்கி... இளையராஜாவுடன் இசை ராஜாங்கம் நடத்தி, ரஹ்மானுடனும் யுவனுடனும் யௌவனம் ததும்பும் பாடல்கள் தந்த பாட்டு வித்தைக்காரன் இந்த வாலி.

    கண்போன போக்கிலே...

    கண்போன போக்கிலே...

    வாலியின் பாடல்கள் என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே, முதலில் வந்து விழுவது அவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்காக எழுதிய கண்போன போக்கிலே பாடல்தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகுக்கு சொல்லிக் கொடுத்த பாடல். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்று ஆரம்பிக்கும் அந்த சரணம்...!

    நான் ஆணையிட்டால்...

    நான் ஆணையிட்டால்...

    ஒரு நடிகராக மட்டுமே இருந்த எம்ஜிஆருக்கு 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்...' என்று எழுதினார் வாலி. நடிகர் தலைவராகி முதல்வரானார். ஏழைகள் சந்தோஷம் கொண்டார்கள். வறியவரை சந்தோஷம் கொள்ள வைத்த இரண்டு முதல்வர்களில் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர்... அடுத்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... வாலி எழுதியதே நடந்தது!

    நல்ல பேரை வாங்க வேண்டும்...

    நல்ல பேரை வாங்க வேண்டும்...

    குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடல்களை எழுதத் தகுதியான கவிஞரும், அதை திரையில் சொல்லத் தகுதி வாய்ந்த நடிகர்களும் இருந்த காலமது. அன்று வாலி எழுதிய நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே... பாடலை இப்போது கேட்டாலும் நெஞ்சம் நிறைந்து தளும்புகிறது. என்ன வரிகள்... எத்தனை கவித்துவம்... எவ்வளவு நேர்மை... என்னே அழகு!

    வாலி எழுதினார்... எம்எஸ்வி இசை தந்தார்... டிஎம்எஸ் குரல் தந்தார்.... எம்ஜிஆர் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தார். இப்படி ஒரு இணையை தமிழ் சினிமாவில் இனி பார்க்கத்தான் முடியுமா!

    வாழ்விருக்கும் நாள் வரைக்கும்...

    வாழ்விருக்கும் நாள் வரைக்கும்...

    பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற பாடல் கண்ணன் ஒரு கைக்குழந்தை. ராஜாதான் இசை. எழுபதுகளில் தொடங்கி இன்று வரை, தமிழர் உலகின் ஒப்பற்ற அமுத கானம் இது.

    ஒரே நாள் உனை நான்...

    ஒரே நாள் உனை நான்...

    இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காதலர்களின் தேசிய கீதமாகத் திகழ்ந்தது. எம்ஜிஆர் கால பாடல்களிலிருந்து எத்தனை அழகான transition... அந்த வரிகளில் துள்ளும் இளமையைப் பாருங்கள்...

    மழை வருது மழை வருது...

    மழை வருது மழை வருது...

    இனிமை என்ற சொல்லுக்கு இனிமை சேர்த்த மெட்டு இந்த பாடலும் அதன் வரிகளும். அதை ஜேசுதாஸையும் சித்ராவையும் இளையராஜா பாட வைத்த விதம்... அம்மம்மா... வாழ்வை இனிமைப்படுத்திய பாடல். இடம்பெற்ற படம்: ராஜா கைய வச்சா.

    கண்ணாலே காதல் கவிதை...

    கண்ணாலே காதல் கவிதை...

    இதுவும் காதலர்களுக்காக வாலி தந்த வைரமணிப் பாட்டுதான். பிரதாப் போத்தன் இயக்கத்தில் வந்த ஆத்மா என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். வாழ்நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

    ஆகாய வெண்ணிலாவே...

    ஆகாய வெண்ணிலாவே...

    இசையும் தமிழின் மகத்துவமும் உணர்ந்த அத்தனை பேரும் அனுபவித்து ரசிக்கும் பாடல் இது.

    வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
    கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
    அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன?
    அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
    இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
    சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட...

    ஒ வானம் உள்ள காலம் மட்டும்...

    ஒ வானம் உள்ள காலம் மட்டும்...

    இந்தப் பாடல் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. மறைந்த நடிகர் விஜயன் இயக்கிய படம் புதிய ஸ்வரங்களில் இடம்பெற்ற உன்னதமான பாட்டு.
    ஓ வானம் உள்ள காலம் மட்டும வாழும் இந்தக் காதல்...
    இதுதான் தேவன் ஏற்பாடு...
    இணைத்தான் பூவைக் காற்றோடு...

    இந்த பாடலின் இனிமை உணர்ந்தோ என்னமோ.. அடுத்த வரியை இப்படி எழுதியிருப்பார் வாலி...

    ஓ கானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தப் பாடல்...!

    உன்ன நெனச்சேன்... பாட்டுப் படிச்சேன்...

    உன்ன நெனச்சேன்... பாட்டுப் படிச்சேன்...

    காதல் தோல்வியை வாலி வார்த்தைகளாக வடித்த விதமிருக்கிறதே... அது கமல் ஹாஸனையே கண் கலங்க வைத்தது இந்தப் பாடலில். இதைவிட உணர்ச்சிப் பூர்வமா எழுத முடியாதுய்யா என்று கூறி வாலி கொடுத்த இந்தப் பாடலைப் படித்து முடித்து கலங்கி நின்றாராம் கலைஞானி.

    என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட...

    என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட...

    பின்னொரு ஆண்டில் உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற வாலியின் வரிகளே படத் தலைப்பானது. அந்தப் படத்துக்கும் வாலிதான் பாட்டெழுதினார். அதில் ஒரு பாட்டு.. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி..." அதற்கு இணையான ஒரு காதல் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா...

    போவோமா ஊர்கோலம்...

    போவோமா ஊர்கோலம்...

    இது சின்னத்தம்பி பாட்டு. பாட்டுப் பைத்தியம் பிடித்துவிட்டதாடா உனக்கு என்று பார்ப்பவர் கேட்கும் அளவுக்கு இந்தப் பாடலைப் பைத்தியமாய் பாடித் திரிந்த இளைஞர்கள் பலரை பின்னோக்கி திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது வாலியின் மரணம்.

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

    தமிழ் சினிமாவின் ஆயுள் உள்ளவரை வாழும் ஒரு பாடல் என்ற உயரிய அந்தஸ்துக்குரிய அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் வாலிதான். அதில் ஒவ்வொரு வரியும் பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணி வைரம்...

    அபிராமி, சிவகாமி, கருமாரி, மகமாயி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா.... அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே...

    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா...

    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா...

    அய்யா வாலி... இத்தனை அவசரமேனய்யா...!

    English summary
    Vaali's songs are immortal. Here is a compilation of the legendary poet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X