»   »  வடிவேலுக்கு ஜோடி லண்டன் தீத்தா

வடிவேலுக்கு ஜோடி லண்டன் தீத்தா

Subscribe to Oneindia Tamil

வடிவேலு நடிக்க உருவாகவிருந்ததாக கூறப்பட்டு பின்னர் டிராப் செய்யப்பட்ட இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்திற்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.

இம்சை அரசன் இமாலய வெற்றி பெற்றதும் அதுபோன்ற கதைகளுடன் பலரும் வடிவேலுவைத் தேடி வந்து கண்டிப்பா நடிக்கணும்ணே என்று அணத்த ஆரம்பித்தனர்.

ஆஹா, ஆப்பு வக்க வந்துட்டாங்கய்யா என்று அரண்டு போன வடிவேலு, தம்பிகளா, நான் சும்மாத்தான் ஹீரோவாக நடிச்சேன், தொடர்ந்து நடிக்க மாட்டேன், கெளம்புறீங்களா என்று அனுப்பி வைத்து அப்போதைக்குத் தப்பித்தார்.

ஆனால் தம்பி ராமையாவிடமிருந்து மட்டும் வடிவேலுவால் தப்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட வடிவேலு மீது தொற்றி ஏறாத குறையாக கதையுடன் பின்னாலேயே திரிந்து வடிவேலுவின் ஒப்புதலை வாங்கினார் ராமையா.

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தில் வடிவேலுவுக்கு 3 ஹீரோயின்கள். படம் குறித்த தகவல் வெளியாகி 6 மாதங்களாகியும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை.

முதலில் ஹீரோயின் கிடைக்கவில்லை. பின்னர் தயாரிப்பாளர் ஜகா வாங்கி விட்டார். தற்போது பிரச்சினைகள் தீர்ந்து, இந்திரலோகத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போகிறதாம்.

செவன்த் சானல் மாணிக்கம் நாராயணன் படத்தைத் தயாரிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தில் படு காமெடியாக வருகிறாராம் வடிவேலு.

எமன், இந்திரன், நா. அழகப்பன் என்னும் சாதாரணன் ஆகிய மூன்று வேடங்களில் கிண்டலும், கெளப்பலுமாக பின்னி எடுக்கப் போகிறார் வடிவேலு.

இம்சை அரசன் படத்தில் பணியாற்றிய ஆர்தர் வில்சன் (கேமராமேன்), இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி ஆகியோர் இப்படத்திற்கும் பணியாற்றிடவுள்ளனர்.

படத்தில் வடிவேலுவின் ஜோடியாக சிம்ரனும், ஷில்பா ஷெட்டியும் நடிக்கக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது தீத்தா சர்மா என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார். அட்டகாசமான டான்ஸ்காரரான தீத்தா சர்மா, லண்டனைச் சேர்ந்தவர்.

படம் குறித்து தம்பி ராமையா கூறுகையில்,

பேப்பர் ஒர்க் முடிந்து விட்டது. மாபெரும் பூஜையுடன் ஜூன் 2வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இம்சை அரசனைப் போலவே இப்படமும் காமெடியுடன் கூடியதாக இருக்கும். படத்தை ஆரம்பிப்பதில் கொஞ்சம் ஸ்டார்ட்டிங் டிரபுள் ஆகி விட்டது. அதுவும் கூட படத்துக்கு நல்லதுதான் என்று நம்புகிறேன் என்றார்.

நம்பிக்கைதானே ராசா வாழ்க்கை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil