»   »  ரீமிக்ஸுக்கு வடிவேலு கண்டனம்

ரீமிக்ஸுக்கு வடிவேலு கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vadivelu
புலவர் புலமைப்பித்தனைத் தொடர்ந்து காமெடிப் புயல் வடிவேலுவும், ரீமிக்ஸ் பாட்டு கலாச்சாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அய்யாவழி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய புலவர் புலமைப்பித்தன், அந்தக் காலத்து பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுப்பதா என்று கோபப்பட்டுப் பேசினார். இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களை கடுமையாகவும் கண்டித்தார். வழக்குப் போடப் போவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் படங்களில் இடம்பெற்ற பிரபல பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் எந்தத் தவறும் இல்ைல என்று நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புலமைப்பித்தனின் கருத்தை ஆதரித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நாமெல்லாம், எம்.எஸ்.வி., இளையராஜா ஆகியோரின் இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள். குறிப்பாக நானெல்லாம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகன்.

எனது ஆரம்ப காலத்தில் தொட்டால் பூ மலரும் பாட்டின்போது தலைவர் தோன்றிய கெட்டப்பைப் பார்த்து அசந்து போனவன் நான். ஆனால் இப்போது ரீமிக்ஸ் என்ற பெயரில், பழைய காலத்துப் பாடல்களை மாற்றிக் கொடுப்பதைப் பார்த்து நான் பெரும் வேதனை அடைந்துள்ளேன்.

சமீபத்தில் கூட அண்ணன் இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் போட்டிருந்ததைப் பார்த்தேன். இது மிகவும் மோசமான பழக்கம். பெரிய மேதைகளுக்கு செய்யும் அவமரியாதை.

யாராக இருந்தாலும் சரி, இந்த பழக்கத்தை தயவு செய்து நிறுத்தி விடுங்கள். வாலி போன்ற பெரிய மேதைகள் எல்லாம் இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் குறித்து வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். இப்போது புலமைப்பித்தனும் வருத்தம் தெரிவித்துள்ளார் என்றார் வடிவேலு.

உங்களைப் போலவே எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான சத்யராஜ், ரீமிக்ஸ் பாடல்களில் தவறில்லை என்று கூறியிருக்கிறாரே என்று வடிவேலுவிடம் கேட்டபோது, அது அவரது கருத்து. எனது நண்பர் சத்யராஜின் கருத்து குறித்து கருத்து கூற விரும்பவில்லை. எனக்கு ரீமிக்ஸ் பிடிக்கவில்லை. அவ்வளவுதான் என்று 'நேக்'காக பேசி முடித்தார் வடிவேலு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil