twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம் - கமலுக்கு வைரமுத்து பதில்

    By Shankar
    |

    சென்னை: சினிமாவில் தமிழை வளர்க்க முடியவில்லையே என நண்பர் கமல்ஹாஸன் வேதனைப்பட்டிருந்தார். அவர் சொன்னதில் உண்மை இருக்கிறது. ஆனால், சரியான வாய்ப்பு வந்தால் சினிமாவில் தமிழ் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார் வைரமுத்து.

    பிரபுதேவா, பிருதிவிராஜ், ஆர்யா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம், 'உருமி.' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

    பாடல்களை நடிகர் விஜய் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில், வைரமுத்து பேசுகையில், " சந்தோஷ் சிவனின் காமிரா கண்கள் மிகவும் ஆழமானவை. இந்த உலகத்தை அவர் கலைக்கண்களோடு பார்க்கிறார்.

    உலகப்பேரழகி லைலா ஒன்றும் அத்தனை அழகியில்லையாம். நிறம், மாநிறமாம். மூக்கு கூட சப்பை மூக்காம். அவள் மீது எப்படி பைத்தியமானாய்? என்று மஜ்னுவை நண்பர்கள் கேட்டபோது, அவன் சொன்னானாம்-'லைலாவை நீங்கள் மஜ்னுவின் கண்களால் பார்க்க வேண்டும்.'

    அதைப்போல் இந்த உலகத்தை நாம் சந்தோஷ் சிவனின் கண்களால் பார்க்க வேண்டும். 'உருமி,' ஒரு வரலாற்று படம். வாஸ்கோடகாமா மிளகுக்காக இந்தியாவை அடிமைப்படுத்திய கதையை சொல்லும் படம். இதன் பாடல்களை இலக்கிய மொழியில் எழுதியிருக்கிறேன்.

    சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம்

    சினிமாவில், தமிழ் வளர்ப்பது சிரமமாக இருக்கிறது என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார். அவர் சொன்னதில் உண்மை இருக்கிறது. அந்த வலியின் அதே அலைவரிசையில்தான் என் நெஞ்சும் துடிக்கிறது. ஆனால், சினிமாவில் தமிழ் வளர்க்கும் வாய்ப்பு முற்றிலும் அற்றுப்போகவில்லை. அதற்கு இந்த 'உருமி' பாடல்கள் கூட உதாரணமாகலாம்.

    இந்த படத்தின் சில பாடல்களுக்கு, நான் சங்க இலக்கிய தமிழைப் பயன்படுத்தியிருக்கிறேன். காதல் கொண்ட ஒரு இளவரசி பாடுகிறாள்- "இருகரம் கொண்டு ஒரு யானையை அடக்கிய வீரன், என் இரு யானைகளை அடக்க என் குடில் வருகின்றான்'' என்ற பொருள் தரும் பாடலை, சங்க தமிழில் எழுதியிருக்கிறேன். மொழி தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம் புரியும்.

    காலத்தை வென்ற தமிழ் மொழி

    15-ஆம் நூற்றாண்டு கதைக்கு, 2-ஆம் நூற்றாண்டு தமிழை எடுத்து 21-ஆம் நூற்றாண்டில் எழுத முடிகிறது என்றால், தமிழ் காலம் கடந்த மொழி என்பது மீண்டும் விளங்குகிறது அல்லவா?

    சங்க தமிழை ஏற்றுக்கொண்ட சந்தோஷ் சிவனுக்கு நன்றி சொல்கிறேன்.

    வரலாறு என்பது இன்று கருவாடுதான். கருவாடும் ஒரு காலத்தில் மீன் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த படம், வெறும் வரலாறு மட்டுமல்ல. நிகழ்காலத்துக்கு பாடமாகவும் விளங்குகிறது.

    கார்ப்பொரேட் கொள்ளையை அனுமதிக்கலாமா?

    அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அதே இந்தியா, இன்று அன்னிய முதலீடுகளை அளவுக்கு மீறி இந்தியாவுக்குள் அனுமதிப்பது ஏன்? கார்ப்பொரேட் நிறுவனங்கள், வளரும் நாடுகளின் நிலங்களை கொள்ளையடிப்பது ஏன்? இந்த கேள்விகளை பாராளுமன்றத்தை நோக்கி, ஐ.நா.சபையை நோக்கி வீசுகிறது, உருமி.'

    இந்த படம் புரிந்துகொள்ளப்படுவதே இதன் முதல் வெற்றி,'' என்றார் வைரமுத்து.

    விழாவில் நடிகர்கள் விஜய், அரவிந்தசாமி, பரத், டைரக்டர்கள் மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் தீபக்தேவ், வசனகர்த்தா சசிகுமரன், நடிகர் பிருதிவிராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன், பட அதிபர் சாஜி நடேசன், ஒளிப்பதிவாளர்-இயக்குநர் சந்தோஷ்சிவன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

    இந்தப் படத்தை தயாரித்திருப்பவர் பிருத்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாறன்தான். தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் அவர் இந்த விழாவில் வெகு இயல்பாக, சுத்தமான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியது அனைவரையும் கவர்ந்தது. அவரது பேச்சுக்கு ஏக கைத்தட்டல்கள்!

    English summary
    Poet Vairamuthu says that he hoped to grow Tamil literature through cinema, whether he got right chances like Urumi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X